Saturday 25 August 2012

9.சந்ததம்


சந்ததம் பந்தத்                  தொடராலே
        சஞ்சலந் துஞ்சித்       திரியாதே
கந்தனென் றென்றுற்          றுனைநாளும்
        கண்டுகொண் டன்புற்  றிடுவேனோ
தந்தியின் கொம்பைப்          புணர்வோனே
        சங்கரன் பங்கிற்         சிவைபாலா
செந்திலங் கண்டிக்           கதிர்வேலா
        தென்பரங் குன்றிற்    பெருமாளே.
-    திருப்பரங்குன்றம்
பதம் பிரித்தல்

சந்ததம் பந்த தொடராலே
சஞ்சலம் துஞ்சி திரியாதே

கந்தன் என்று என்று உற்று உனை நாளும்
கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ

தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கில் சிவை பாலா

செந்தில் அம் கண்டி கதிர் வேலா
தென் பரங்குன்றில் பெருமாளே.

பத உரை

சந்ததம் = எப்போதும். பந்த = பாச. தொடராலே = தொடர்பினால். சஞ்சலம் = கவலையால். துஞ்சி = சோர்ந்து. திரியாதே = திரியாமல்.

கந்தன் என்று என்று உற்று = கந்தன் என்று அடிக்கடி கூறி. உனை நாளும் = உன்னை நாள்தோறும். கண்டு கொண்டு = மனக்கண்ணால் பார்த்து. அன்பு உற்றிடுவேனோ = அன்பு கொள்வேனோ?

தந்தியின் கொம்பை = யானையால் வளர்க்கப்பட்ட பூங்கொம்பு போன்ற தேவசேனையை. புணர்வோனே = சேர்பவனே. சங்கரன் = சிவபெருமான். பங்கில் = பக்கத்திலுள்ள. சிவை பாலா = பார்வதியின் குழந்தையே.

செந்தில் = திருச்செந்தூர். அம் = அழகிய. கண்டி = கண்டி என்னும் தலத்தில். கதிர் வேலா = (உறையும்) ஒளி வீசும் வேலாயுதனே. தென் பரங்குன்றில் பெருமாளே = தென்நாட்டில் இருக்கும் திருப்பங்குன்றத்தில் எழுந்தருளிய பெருமாளே   

சுருக்க உரை

எப்போதும் பாசத் தெடர்பினால் கவலை அடைந்து சோர்ந்து திரியாமல், கந்தன் என்று அடிக்கடி கூறி, உன்னை அகக்கண்ணால் பார்த்து அன்பு கொள்வேனோ?
ஐராவதம் வளர்த்த பூங்கொம்பு போன்ற தேவசேனையைச் சேர்பவனே. சிவபெருமான் பக்கத்திலுள்ள பார்வதியின் குழந்தையே. திருச்செந்தூர், கண்டி ஆகிய தலங்களில் உறையும் வேலாயுதனே. திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. உன் மீது அன்பு கொள்வேனோ?

விளக்கக் குறிப்புகள்
அ. பந்தத் தொடராலே...
    (மட்டுர்குழல் மங்கையர் மையல்வலைப்
    பட்டுசல் படும்பரிசென் றொழிவேன்)...கந்தர் அனுபூதி 9.
ஆ. கந்தன் என்று என்று உற்று உனை நாளும்....
   (இருள் இடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
  எங்கு எழுந்தருளுவது இனியே).. மாணிக்கவாசகர் (திருவாசகம்) பிடித்த பத்து 4.
   

No comments:

Post a Comment

Your comments needs approval before being published