Friday 28 September 2012

110.நிறைமதி


நிறைமதி முகமெனு                 மொளியாலே
        நெறிவிழி கணையெனு          நிகராலே  
உறவுகொள் மடவர்க                ளுறவாமோ
        உனதிரு வடியினி              யருள்வாயே
மறைபயி லரிதிரு                        மருகோனே
        மருவல ரசுரர்கள்                    குலகாலா
குறமகள் தனைமண               மருள்வோனே
        குருமலை மருவிய               பெருமாளே                                                         
-       110 திருவேரகம்

பதம் பிரித்து உரை

நிறை மதி முகம் எனும் ஒளியாலே
நெறி விழி கணை எனு(ம்) நிகராலே

நிறை மதி = பூரண சந்திரன் போன்ற. முகம் எனும் ஒளியாலே = முகத்தின் ஒளியாலும் நெறி விழி = வழி காட்டியாயுள்ள. கணை எனும் நிகராலே = கண்ணாகிய அம்பு செய்யும் போரினாலும்.

உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ
உன திருவடி இனி அருள்வாயே

உறவு கொள் = (என்னிடம்) உறவு பூண்கின்ற. மடவார்கள் = விலை மாதர்களின் உறவு ஆமோ = தொடர்பு நல்லதாகுமோ? உன =  உன்னுடைய திருவடி = திருவடிகளை இனி அருள்வாயே = இனி எனக்குத் தந்தருளுக.

மறை பயில் அரி திரு மருகோனே
மருவலர் அசுரர்கள் குலகாலா


மறை பயில் அரி = வேதங்களில் சொல்லப்படும் திருமாலின்.  திரு மருகோனே = அழகிய மருகனே மருவலர் = பகைவர்களாகிய. அசுரர்கள் குல காலா = அசுரர்களின் குலத்துக்குக் காலனே

குற மகள் தனை மணம் அருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே.

குறமகள்  தனை = குறப் பெண்ணாகிய வள்ளியை மணம் அருள்வோனே = திருமணம் செய்து அருளியவனே குருமலை = குருமலை என்று சொல்லப்படும் சுவாமி மலையில். மருவிய பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை
சந்திரனைப் போன்ற முகத்தின் ஒளியாலும், வழி காட்டியான   கண் என்னும் அம்புகள் செய்யும் போரினாலும், என்னிடம் உறவு கொள்ளுகின்ற விலை மாதர்களின் தொடர்பு எனக்கு நல்லதாகுமோ? (ஆகாது என்றபடி). உனது திருவடியை எனக்கு இனித் தந்தருளுக.

வேதங்களால் போற்றப்படும் திருமாலின் மருகனே, பகைவர்களாகிய அசுரர் குலத்துக்கு யமனைப் போன்றவனே, குறப் பெண்ணாகிய வள்ளியை மணந்து அருளியவனே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் திருவடியை எனக்குத் தருவாயாக.

திருவடி தாமைரையை தந்து என்னை ஆட்கொள்

No comments:

Post a Comment

Your comments needs approval before being published