Tuesday 11 September 2012

62.ஒருபொழுதும்


ஒருபொழுத மிருசரண நேசத்                                துணரேனே
       உனதுபழ நிமலையெனு மூரைத் சேவித்        தறியேனே
பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக்               குறியேனே
      பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத்   தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப்                        பெருமாளே
     தொழுதுவழி படுமடியர் காவற் காரப்             பெருமாளே
விருதுகவி விதரணவி நோதக் காரப்                    பெருமாளே
    விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப்        பெருமாளே.
-      பழநி
பதம் பிரித்து உரை

ஒரு பொழுதும் இரு சரண(ம்) நேசத்தே வைத்து உணரேனே
உனது பழநி மலை எனும் ஊரை சேவித்து அறியேனே

ஒது பொழுதும் = ஒரு வேளையாவது இரு சரண(ம்) = (உனது) இரண்டு திருவடிகளில்  நேசத்தே வைத்து = அன்பைச் செலுத்தி உணரேனே = மெய்யுணர்வைப் போற்றேனில்லை

பெரு புவியில் உயர்வு அரிய வாழ்வை தீர குறியேனே
பிறவி அற நினைகுவன் என் ஆசை பாடை தவிரேனோ

பெரு புவியில் = பெரிய உலகத்தில் உயர்வு அரிய வாழ்வை = உயர்வு உள்ளதும் அருமை வாய்ந்ததுமான வாழ்க்கையை  தீரக் குறியேனே = ஒழிக்குமாறு குறிக்கோளைக் கொள்ளவில்லை  பிறவி அற = (இவ்வாறு குறைகள் இருந்தும்) என் பிறவி ஒழிய வேண்டுமென்று நினைகுவன் =  எண்ணுகிறேன் என் ஆசைப் பாடை = என் ஆசா பாசத்தை தவிரேனோ = அறவே ஒழிக்க மாட்டேனோ.

துரிதம் இடு நிருதர் புர சூறை கார பெருமாளே
தொழுது வழி படும் அடியர் காவல் கார பெருமாளே

துரிதம் இடு = பாவத் தொழில்களைச் செய்கின்ற நிருதர் புர = அசுரர்கள் ஊர்களை சூறைக் காரப் பெருமாளே = சுழற் காற்றைப் போல வீசி அழித்த பெருமாளே தொழுது வழிபடும் = (உன்னைத்) தொழுது வழிபடுகின்ற அடியர் = அடியவர்களுக்கு காவற் காரப் பெருமாளே = காவற்காரனாக இருந்து உதவும் பெருமாளே.

விருது கவி விதரண விநோத கார பெருமாளே
விறல் மறவர் சிறுமி திரு வேளை கார பெருமாளே.

விருது கவி = வெற்றிக் கவிகளை  விதரண = (உலகுக்கு உதவிய) வாக்கு வன்மை உடையவரே  விநோதக்கார பெருமாளே = திருவிளையாடல் பல செய்யும் (சம்பந்தப்) பெருமாளே விறல் = வலிமை பொருந்திய  மறவர் = குறவர்களின். சிறுமி = சிறுமியாகிய வள்ளிக்கு    திருவேளைக்காரப் பெருமாளே = காவலாக இருந்து உதவி செய்த பெருமாளே.


சுருக்க உரை

ஒருவேளை கூட உன் திருவடியில் அன்பு வைத்து அறிய மாட்டேன். உனது பழனி மலையை வணங்கி அறியேன். பூமியில் உயர்ந்த அரிய வாழ்க்கையைக் குறிக் கொள்ளவில்லை. இருப்பினும், பிறவி ஒழிய வேண்டும் என்று நினைக்கின்றேன். என் ஆசைகளை விட்டொழிக்க மாட்டேனோ?

அசுரர்களின் ஊர்களைச் சூறையாடியவனே, உன்னைத் தொழும்  அடியார்களுக்குக் காவல் புரிபவனே, வெற்றிக் கவிகளான தேவாரத்தை உலகுக்குச் சம்பந்தராக அவதரித்து வழங்கியவனே, வேடுவப் பெண்ணாகிய வள்ளிக்கு உடனிருந்து காவல் புரிபவனே, என் ஆசைகளை விட்டொழிக்க வேண்டுகிறேன்.
 
ஒப்புக

. ஒரு பொழுது ... 
  • சரணகம லாலயத்தை அரைநிமிட நேரமட்டில்
           தவமுறை தியானம் வைக்க அறியாத) ----------------------------- திருப்புகழ் (சரணகமலால)
ஆ.  ஆசைப் பாடைத் தவிரேனோ ..... 
  • ஆசையறுமின்கள் ஆசையறுமின்கள்
            ஈசனோடாயினும் ஆசையறுமின்கள்) ---------------------------------------- திருமந்திரம் 2570
இ. விருது கவி விதரண ..... 
  • உபயகுல தீப துங்க விருது கவி ராஜ சிங்க) -------------------- திருப்புகழ் (கருவினுருவாகி)
  .

தலைப்புச் சொற்கள்
வள்ளி, துதி, பழனி 

No comments:

Post a Comment

Your comments needs approval before being published