Thursday 13 September 2012

71. சிவனார்


சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
        செவிமீதி லும்பகர்செய்                        குருநாத
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
        செயலேவி ரும்பியுளம்                 நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
        மடியேனை அஞ்சலென                வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
        அருள்ஞான இன்பமது                      புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
        ரகுராமர் சிந்தைமகிழ்                     மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
        நலமான விஞ்சைகரு                 விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
        திறல்வீர மிஞ்சுகதிர்                         வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
        செகமேல்மெய் கண்டவிறல்         பெருமாளே.
-      71 பழநி
பதம் பிரித்து உரை

சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர் செய் குரு நாத

சிவனார் மனம் குளிர = சிவபெருமானுடைய மனம் குளிரும் படி  உபதேச மந்த்ரம் = உபதேச மந்திரத்தை இரு செவி மீதிலும் பகர் செய் = (வாய் விட்டுச் சொல்ல ஒண்ணாததால் சின் முத்திரை யால் காட்டியதோடு) இரண்டு செவிகளிலும் அப் பொருள் நிரம்புமாறு உபதேசித்து அருளிய குரு நாத = குரு நாதரே.

சிவகாம சுந்தரி தன் வர பால கந்த நின
செயலே விரும்பி உளம் நினையாமல்

சிவகாமி சுந்தரி தன் = சிவகாம சுந்தரியான பார்வதியின் வர பால கந்த = மேன்மை பொருந்திய பிள்ளையே கந்தனே நின செயலே விரும்பி = உனக்கு அடிமை செய்யும் தொண்டையே விரும்பி உளம் நினையாமல் = உள்ளத்தில் நிலைக்காமல்.

அவ மாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும்
அடியேனை அஞ்சல் என வரவேணும்

அவ மாயை கொண்டு = கேடு தரக் கூடிய மாயைக்குள் மூழ்கி  உலகில் = உலகில் விருதா = வீணாக அலைந்து உழலும் = அலைந்து திரியும் அடியேனை = அடியவனாகிய என்னை அஞ்சல் என வரவேணும் = அஞ்சாதே என்று கூறி அருள வரவேணும்.

அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய
அருள் ஞான இன்பம் அது புரிவாயே

அறிவு ஆகமும் பெருக = அறிவு மனத்தில் பெருகி வரவும் ( ஆகம்  - மனம்) இடரானதும் தொலைய = துன்பங்கள் அறவே நீங்க அருள் ஞான இன்பம் அது புரிவாயே = உனது திருவருளால் பெறக் கூடிய ஞான இன்பத்தைத் தந்து அருளுக.

நவநீதமும் திருடி உரலோடு ஒன்றும் அரி
ரகுராமர் சிந்தை மகிழ் மருகோனே

நவநீதமும் திருடி = வெண்ணெயைத் திருடி உரலோடு ஒன்றும் = உரலோடு பிணித்துக் கட்டப் பட்ட அரி ரகுராமர் = திருமால். சிந்தை மகிழ் மருகோனே = உள்ளம் மகிழம் மருகனே.

நவ லோகமும் கை தொழ நிச தேவ அலங்கிருத
நலமான விஞ்சை கரு விளை கோவே

நவ லோகமும் கை தொழு = ஒன்பது பிரிவுகள் உள்ள பூமியில் உள்ளவர்கள் யாவரும் கை தொழுது வணங்கும் நிசதேவ = உண்மைத் தெய்வமே அலங்கிருத = பொன் மணிகளால் அலங் கரிக்கப்பட்டவரே நலமான = நலம் தருவதான விஞ்சை தரு விளை = மாய வித்தையால் பிறப்புத் தோற்றங்கள் தோற்று விக்கும். கோவே = கலாதிபரே.

தெ(ய்)வ யானை அம் குற மின் மணவாள சம்ப்ரம் உறு
திறல் வீர மிஞ்சு கதிர் வடிவேலா

தெ(ய்)வ யானை = தேவசேனை அம் = அழகிய குற மின் = மின்னல் போன்ற குறப் பெண்ணாகிய வள்ளி மணவாள = ஆகியவர்களின் கணவனே சம்ப்ரம் உறு = பெருமை பொருந்திய திறல் வீர = திறல் வாய்ந்த வீரனே மிஞ்சு கதிர் = மிக்க ஒளி வீசும் வடிவேலா = கூரிய வேலாயுதனே

திருவாவினன்குடியில் வரு வேள் சவுந்தரிக
செக மேல் மெய் கண்ட விறல் பெருமாளே.

திருவாவினன் குடியில் வரு வேள் = பழனியில் வீற்றிருக்கும் வேளே சவுந்தரிக = அழகனே செக மேல் மெய் கண்ட = உலகில் உண்மைப் பொருளைக் கண்டு தெரிவித்த விறல் பெருமாளே = திறம் வாய்ந்த பெருமாளே.


பட உதவி: தினமலர்

சுருக்க உரை

சிவபெருமானது மனம் குளிரும்படி உபதேச மந்திரத்தை அவரது இரு செவிகளில் சொன்ன குருநாதரே. பார்வதியின் மேன்மையான
பிள்ளையே. உனக்குத் தொண்டு செய்வதையே விரும்பி உள்ளத்தில் நினையாமல் கேடு தரக் கூடிய மாயை மிக்க உலகில் அலைந்து திரியும் அடியேனை, அஞ்சல் எனக் கூறி அருள வரவேணும். அறிவு என் மனதில் பெருகவும், இடர்கள் தொலையவும் உனது திருவருளால் ஞான இன்பத்தைத் தந்து உதவி புரிக.

வெண்ணெயைத் திருடிய திருமாலின் மருகனே. எல்லா உலகத்தினரும் தொழுது வணங்கும் உண்மைப் பொருளே. மாயையால் உலகைத் தோற்றுவிக்கும் தலைவனே. தேவயானை, வள்ளி ஆகியோரின் கணவனே. கூரிய வேலாயுதனே. பழனியில் வீற்றிருக்கும் பெருமாளே. எனக்கு அருள் ஞான இன்பம் தர வேண்டும்.

விளக்கம்  குகஸ்ரீ ரசபதி

முதல் யுகத்தில் கந்த புராணம்.  இரண்டாவது யுகத்தில் ராமாயணம். மூன்றாம் யுகத்தில் பாகவத பாரதம். நான்காம் யுகத்தில் ஊன்றி கூர்ந்து உணரா வண்ணம் ஏழ்கடல் மணலை அளவிடின் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம் என்று கூவி மாறுகின்றது எங்கள் கதை.  இதை நினைக்கும் போதே நெஞ்சம் நைகின்றதே.
அவதாரம் என்னில், மேல் இருந்து கீழ் இறங்கல் என்று புனித மேலோர் பொருள் கூறினர். மூன்று யுக அவதாரங்களில் உய்திக்கு உரிய செய்திகள் உள. எங்களையும் அவதாரம் என்றால் ஏளன நடையில் எழுந்ததோ இம்மொழி?.
ஆம், பேசிக்கொண்டு இருக்கும் போது குறுக்கிட்ட ஒருவனை,  இது ஒரு பெரிய அவதாரம் என்று சொல்லுவார் சொல்லக் கேட்டளம். அப்படிச் சொல்வார் முகத்தின் சுழிப்பு குரங்கு முகத்தைக் குறிப்பிடுகின்றதே. அதுவும் மரத்தின் மேல் இருந்து இறங்குவது தான் .  இறங்கி சேட்டை செய்வது தான். வனக்குரங்கு வியப்ப என் மனக்குரங்கு குதிக்கும் என்றார் ஒரு பெரியார்.  கலியுகத்து கூத்துகளில் இதுவும் ஒன்று. இது கிடக்க மூன்று யுக முதன்மையை ஊன்றி  சிறிது உணரும் போது  ஆ, எத்தனை அருமைகள் வெளியாகின்றன.
முதல் யுகத்தில் உயரிய சிவத்தில் உதித்தாய், கார்த்திகை மாதர்களிடம் வளர்ந்தாய், வன்பர்களை மாய்த்தாய், அன்பர்களை அணைத்தாய், பகைத்து எதிர்த்த சூரனது தவ நலத்தை பார்த்து சேவலும் மயிலும் ஆன அவனைச் சேர்த்துக் கொண்டனை. முற்றும் துறந்தார் முன்னிருந்து பணி புரிய சிறந்த திருமணம் செய்தனை. - இதணோர் அரிவையை சேர நாடிய திருடா அருள் தரு கந்த வேளே - என்றும் - செம்மான் மகளைத் திருடும் திருடன் - எனவும்  திருட்டுப் பட்டம் கட்டிக் கொண்டனை.
அவைகளைப் பின் பற்றி இரண்டாம் யுகத்தில் திருமால் கோசலை இடத்தில் பிறந்தார் கையேயிடம் வளர்ந்தார், அரக்கரை அழித்தார், அமரரரைக் காத்தார். - பெண் வழி நலனோடும் பிறந்த நாணோடும்  எண் வழி உணர்வும் யான் எங்கும் காண்கிலன்மண் வழி நடந்த அடி  வருந்திப் போனவன் கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம் - என்று கூறுமாறு நின்றார். முன்னிய தவத்தை முற்றும் மறந்து இதிர்த்த ராவணனை வைகுந்தர் காவலனாக வைத்தார்.
மூன்றாம் யமுகத்தில் அம் முகுந்தர் தேவகியிடம் பிறந்தார், யசோதையிடம் வளர்தார். மாபெரும் அன்பர்கள் விருந்து வைக்க மறந்தாலும் அழிக்க மறுத்தாலும்  உரிமையோடு யானே எடுத்து உண்பன் என்று, - தத்தம் உறியில் அவர் வைத்த தயிர் பால் வெண்ணெய் எட்டாமல் குந்தி உரலின் மிசை ஏறி இளம் கோபியர் முன்னே கூத்தாடி  - உரியோர் கண்டு உறுத்து துரத்த ஓடி வந்து   ஒன்றும் அறியாப் பிள்ளை போல் - நந்தன் மனையில் யசோதை  இரு நயனம் களிப்ப விளையாடும் மைந்தன் இரு தாள் என்னாளும் மறவாதாரே பிறவாதார் - என்று பாரத தேசம் பாடி மகிழ ஆடிய கண்ணன் ஆடலை அறியார் யார் ?
வெண்ணெய் திருடினான், இளம் கோபியரை ஏமாற்றினான் எனும் பொல்லாக் கூச்சல் பொறாத யசோதை கண்ணனை உரலில் கட்ட  முயன்றார். எடுத்த கயிறு எட்டவில்லை. கயிற்றோடு கயிற்றை முடிச்சிட்டு முயன்றும் இடை வளர்ந்து நின்றார் அந்த இடையப் பெருமாள். எவர் வசையும் ஏறுவது கூடாது என்றே கட்ட நினைத்தேன். கயிறு எட்டவில்லையே என்று கண்ணீர் சிந்தினாள் யசோதை. அவள் அன்புடைமையை அறிந்து கட்டும் கயிறு எட்டும் படி எளியர் ஆயினர் கண்ணபிரான். அதானால் அவர் தாமோதர்ன் எனும் தனிப் பெயரும்  பெற்றார். ( தாமம் - கயிறு, உதரம் - வயிறு )
ஆர்மின் ஆர்மின் நான்மலர் பிணைகளில் - என்று திருவாசகம் தெரிவிக்கின்றது. ராமனை நீ மல்லிகைப் பூ மாலைகளினால் மடக்கியதோர் அடையாளம் என்று சிறையிருந்த சீதையிடம் அநுமன் கூறியதும் இங்கு நம் நினைவில் எழுகிறது.
அன்பின் அணைப்பில் அகப்படும் உன்னை உணர்ந்தே இரு அவதாரங்களிலும் திருமால் புனிததம் செயல்களைப் புரிந்தார்.
பிள்ளையார் கோவிலில் படுத்து இடுப்பில்  இருந்த பணத்தை இழந்த  இரட்டைப் புலவர்கள், தம்பியோ பெண் திருடன், தாயார் உடன் பிறந்த வம்பனோ நெய் திருடும் மாமாயன் அம்புவியில் மூத்த பிள்ளையாரே முடிச்சவிழ்த்தீர் போகுமோ கோத்திரத்துகுள்ள குணம் - என்றெல்லாம் கள்ள போதம் கவரும் குணத்தை பல படியாகக் கவிஞர் பாடுகின்றனரே.
ஸ்ரீதேவி பூதேவி என்று திருமாலுக்கு இரண்டு தேவியர் இருக்கின்றனர். முதல் யுக முதல்வனான நினது அருமையை உணர்ந்து அருமை மகளிர் இருவரை அத்திருமால் மணத்தில் அளித்தார். எந்த அவதாரத்திலும் அவர், எமது மருகன் முருகன் என்று இதயம் மகிழ்ந்து எண்ணுகின்றார். மகளுக்காக அன்றி மருகன் மேல் அன்பு காட்டும் மாமனார்கள் இன்றைய உலகில் இல்லை. காரணம் என்ன?. பெரும்பான்மை அவர்கள் உதவாக்கறைகள் . தர்மா தர்மம் தெரிந்த தனிப்பெரும் மருகர் நீர். அதனால் தான் திருமால் திருவுளம் அப்படி உவகை அடைகிறது.
ஒன்பது பிரிவு உடையது நில உருண்டை. அவை பரத கண்டம் , குரு கண்டம், கிம்புருட கண்டம், நிலாவிருத கண்டம், வருவருட கண்டம், கேது மால் கண்டம், ரம்மிய கண்டம், வத்ராசுவ கண்டம், இரணிய கண்டம் என பெறும்..
இதய குகையில் இருந்தும், ஆதார மூர்த்தி ஆகியும் எண்ணில் எழுத்தில் கண்ணில் கருத்தில் கலந்த நினானை, சத்திய நித்திய சால்புறு தெய்வமே என்ற பொருளில் நிசதேவ என்று ஒன்பது கண்ட உயிர்களும் தொழும் கைகளொடு உன்னைத் துதிக்கின்றனவே.
இத்தேவருக்கு இந்த அலங்காரம் என்ற வரையரை இனிய நூல் வழக்கில் இருக்கிறது. உனக்கு எந்த அலங்காரமும் உரியன. சர்வாலங்காரப் பெருமானான நின்னை குறிப்பாக அலங்கிருதா என்று கூறுகிறோம்.
பயனானவை என்று உலக நூலைப்படிப்பவர் பலர் உளர். அருள் நூல்களை உன்றி பல காலம் ஓதுகிறோர் மேலோர். அந்த அருள் நூல்களை  நலமான விஞ்சை என்கின்றார் நல்லோர். அவைகளை இடையறாது ஓத ஓத அவைகளிலிருந்து சிறந்த ஞான உருவாய் சேவை தரும் நின்னை விஞ்சை கரு விளை கோவே என்று ஓதும் போதே நாவில் நீர் ஊறுகின்றதே.
வள்ளலான நின் பால் இச்சையை விளைவிக்கின்றார் வள்ளியார். இச்சித்தாரை செயலில் தேவகுஞ்சரி ஈடுபடுத்தி வைக்கிறார். அவ்விருவர் மூலம் அறிவுச்செல்வரை ஆள்வேன், அன்புச் செல்வருக்கு வாழுமாறு வழி காட்டுவேன் என்று அருளோடு அறிவிக்கின்ற அத்தா தேவயானை அம்குறமின் மணவாளா என்று உன்னை சொல்வதில் தாம் எவ்வளவு சுவை உளது .
சம்ப்ரமம் - நிறை சால்பு, திறல் வீரம் -  திறமையை வெளிப்படுத்தும் வீரம் உடைமை, மிஞ்சு கதிர் -  மிக்கு எழுந்த பேரொளி . இம் மூன்றும் ஆனது வெற்றி வேல். இச்சையை வலத்திலும், க்ரியையை இடத்திலும் ஞானத்தைக் கரத்திலும் கொண்ட நின்னை சக்திதரன் என்பதில்   புனித உண்மைகள் பல பொதிந்துளதே.
திரு - இலக்குமி, ஆ - காமதேனு, இனன் - சூரியன், கு - நில மகள்,
டி - அக்னி இந்த ஐவரும் உலகம் போற்றும்  உத்தம அதிபர்கள். அவர்கள் வழிபட்ட அரும் பதி திருஆவினன்குடி. பரம இத்தலத்தில் பவனி வருவை.  அதன் மூலம் வீடு பேற்று வேட்கை விளைவிப்பை.  அதனால் தான் திருவாவினன்குடியில் வருவேள் என்று உன்னை வணங்குகிறது இவ்வையகம். நின் இயற்கைப் பேரழகை எண்ணும் போதெல்லாம் சவுந்தரிக என்று வாழ்த்துகின்றது எங்கள் வாய். பொய்மையில் பிறந்து புரண்டு எழுந்து போர்வையில் ஏமாந்து புளுங்குனர் உய்ய, உலகில் மெய்மை முத்திரை ஊன்றினை. அம்முத்திரைகளே இன்றுள்ள ஆலயங்கள். அந்த ஆன்மையின் பெருமிதம் எம்மால் அளக்க ஆகுமோ ? ஊன்றி அவைகளை உணர்கிறோம். சகம் மேல் மெய்கண்ட பெருமாளே என்று கூவி உள்ளம் குளிர்கிறோம்.செங்கனல் வண்ணர் சிவபிரான். அவன் கண்ணிலும் ஞானக்கனல் கையிலும் தெய்வக் கனல். அவர் சிரிப்பிலும் நெருப்பு சிலிர்க்கிறது. அதனால் தான் அவர் அபிஷேகப் பிரியர் ஆயினர் அந்த அத்தர். சிகரக் கனலை இடத்தில் இருத்தும் வகரம் தான் தட்பம் செய்து வருகிறது. அவர் குளிர்ந்தால் அகில உலக தாபம் தணியும். தண்மை அடையும்.ஓதுவது இல்லை. ஓதினாலும் உணர்வது இல்லை. ஓரோர் சமயம் உணர்ந்தாலும் தூய அனுஷ்டானம் தோய்வது இல்லை. இந்நிலையில் கற்றேன் என்ற கள் போதை. எண்றாவியான கதை இது.செவிகள் ஓம் உருவின. அந்த ஓமை, எழுதிக் காட்டலாம். பிழைபட மூன்று எழுத்தாய் பிரிக்கலாம். கற்ற இருமாப்பால் அது குறித்து ஆயிரம் கதை அளக்கலாம். அது கண்டு சிலிர்க்கிறது சிவம். கொதிக்கிறது அதன் திருவுள்ளம். அந்நாளில் சிவத்திலிருந்து சிறக்க உதித்தாய். அகங்கார கண்டன ஆடல் நிகழ்த்தினை. உரிய ஓம் பொருளை உணர்வாயோ ? ஓதுவையோ குமரா. எங்கே பார்க்கலாம் என்றார் சிவபிரான்.
உடனே ஓத இயலா நலம் சிறந்த அதன் நாதம் எழுப்பி அவர் இரு செவிகளிலும் புனித மெய்ப்பொருள் புகுமாறு ஓதாது ஓதி  சிவனார் திருவுள்ளம் குளிரச் செய்து அகில உலகிற்கும் அமைதி அளித்த நின்னை, சிவனார் மனம் குளிர  உபதேச மந்த்ரம்  இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா என்று கூறும் போதே எமது உள்ளம் குளிர்கிறதே.
சிவத்தையே காமித்தவர் சிவகாமியார். அவர் சித்தானார். சிவனார் சத்தானார். சித்தோடு கலந்த ஆனந்தம் சித்தின் பூரிப்பாகி சிறந்தது. அதனில் இருந்து வெளியான அத்தா, சிவகாம சுந்தரி தன் வரபாலா என்று ஆவலித்து எம் வாய் அழைப்பதை நீ அறியாயோ ?
நீ ஒரு கட்டுதரி. கவினும் நின்னில் பரிபாக உயிர் கட்டுப்படும் காலம் வரும். அந்நாளில் அரள் மண அனுபவம் அடையும் ஆன்மா. அந்த அனுபவத்தை  ஆவலித்து கந்தா என்று கூவி கதறுகிறோம் . கந்த - கட்டுதரி இது தமிழ் மொழி. கந்தம் - மணம் இது வட மொழி. இரு வகையாகவும் பேரருள் கொண்டு இன்புறுகிறது எமது மனம்.
உனது திருவருட் செயலை அறிய வேண்டும் என்ற இச்சை ,  எம்மில் சில சமயம் எழுவது உண்டு. உண்மையை உரைப்பதானால் இது வெறும் போலி. இச்சை தான், எப்போதும் அதை எண்ணுகிறோமா ?
அப்படி ஒன்றும் இல்லை ஐயா .
மண்ணில் உள்ள உன் மா பெரும் திறன், பெண்ணில் உளது உன் பேரருள், பொன்னில் உளது உன் அருட் பொலிவு. ஊன்றி இப்படி உணராலும் சுயநலத்தில் சுழித்தேன். என்றும் அம் மூன்றும் எம்வயமாக, நாடி வாடி நலிபவர் நாங்கள். அந்நிலையில் அம்மூன்றும் அவமாயை ஆயின. அழிந்து போ, எம்மையே எண்ணி ஒழிந்து வீழ்,  அடுத்தும் பிற, இருந்து இற என்று அவை நம் ஆயுளை மோசமாக்கி முடிக்கின்றனவே. நின் செயலே விரும்பி உளம் நினையாமல் அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும் அடியேனை யாம் இருக்க பயம் ஏன் என்று இடை வந்து காப்பவர் நினை அன்றி எவர் ஐயா .
அசுத்த மாயையில் உருவானது அசுத்த தேகம். சுத்தாசுத்த மாயையில் உருவானது சுத்தசுத்த தேகம். சுத்த மாயையில் உருவானது சுத்த தேகம். இந்த உடல்களுள் இருப்பவர்களை முறையே சகலர், பிளயாகலர், விஞ்ஞானகலர் என்றும், தூயதேகர், சூக்கும தேகர், காரணதேகர் என்றும் இன்னும் பலவாறு உரைப்பர். இம்மூன்றும் கடந்தது பிரணவ தேகம். அத்தேகம் வாய்த்தவர் அமலா, நின் மயம் ஆவர். இறப்பும் பிறப்பும் அவர்களுக்கு இல்லை. அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திரு மேனி என்று உன் சரணார விந்தம் என்று அடைவேனோ. அஞ்சல் அஞ்சல் என்று குரல் கொடுத்த படியே வாவி  அடியேன் முன் நீ வருவது தான் ஆகாதோ ?  ஊன் உடலின் உணர்வொழிய ஞானசம்பந்தர் போன்றார் தம் ஞான மேனி தா. இறப்பும் பிறப்புமான இடர் தீர். அருளை சித் என்பர். ஞானத்தை சத் என்பர். ஆனந்தமே இன்பம் என்று அறியப் பெறும். அறிவு ஆகமும் பெருக இடர் ஆனதும் தொலைய அருள் ஞான இன்பம்  அது புரிவாயே . அந்த சச்சிதானந்த அனுபவத்தை ஆர்வம் காட்டி அடியேற்கு அருள்  என்று பெரிதும் கதறி பிரார்த்தித்த படி.


விளக்கக் குறிப்புகள்
ஒப்புக:
அ. இரு செவி மீதிலும் பகர் செய் குரு நாதா...
·         உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரை தரு குருபர    உயர்வாய).................................................திருப்புகழ் ,அரகரசிவனரி
·         தெக்ஷண செவிதனி லேபோ தனையருள் குருநாதா.......... திருப்புகழ் , எட்டுடனொரு
·         அரன் இரு காதிலே உதவு நிபுண.................................................... திருப்புகழ்   குசமாகி

ஆ. சிவனார் மனம் .....
 பிரணவப் பொருள் வாய் விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் சிவபெருமான்
கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி
உபதேசித்தார். ஆனால் ஆறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி
உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.
     
அரவு புனைதரு புனிதரும் வழிபட
 மழலை மொழிகொடு தௌiதர ஒளிதிகழ்
 அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.. திருப்புகழ், குமரகுருபரகுணதர

இ. நின் செயலே விரும்பி ....
      சிந்தனை நின் தனக்காக்கி நாயினேன்றன்.............................. திருவாசகம் (திருச்சதகம்  

ஈ. அவமாயை கொண்டு உழலும் ....
      மகமாயை களைந்திட வல்லபிரான்........................................................கந்தர் அனுபூதி 
      மாலாசை கோபம் ஓயாதெனாளும்
       மாயா விகார வழியே செல்
       மாபாவி காளி............................................................................. திருப்புகழ், (மாலாசைகோ

உ. நவ கண்டங்கள் .....
     நவகண்ட பூமிப் பரப்பை வலமாக வந்தும்...................................தாயுமானவர் (சின்மயா) 

ஊ. நிசதேவ ....
முருகன் என்றும் ஒரு படித்தாக நித்தியமாக விளங்குபவர். பிறவாமலும், இறவாமலும்   இருக்கும் தனி பர பெருமை வாய்ந்தவர்.
·      என்று மகலாத இளமைக்கார......................................................  திருப்புகழ், சந்தனசவாது
·      பெம்மான் முருகன் பிறவா னிறவான்......................................................... கந்தர் அனுபூதி 
·      என்றும் இளையா யழகியாய்................................................................................... நக்கீரர்

எ. நலமான விஞ்சை கரு....
·         வேதாகம ஞானவிநோத...கந்தர் அனுபூதி 
·         கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த
               கல்வி கரைகண்ட புலவோனே.....................திருப்புகழ், அல்லசடைந்த
·         சகல கலை முழுதும் வல பெருமாளே... திருப்புகழ், அளகநிறை
ஏ. திருவாவினன்குடி ..
     திரு = இலக்குமி. ஆ = காமதேனு. இனன் = சூரியன். கு = பூமி. டி = அக்கினி. இந்த
     ஐவரும் பூசித்த கோயில்.

ஐ. செகமேல் மெய் கண்ட விறல்...
சுப்ரமண்ய சாரூபம் பெற்ற அபர சுப்ரமணியர்களில் ஒருவர்.     சிவபபிரான் மொழிப்படி உருத்திர சன்மர் என்னும் பெயர் தாங்கி உமை பிள்ளையாய்     வணிகர் குலத்தில் தோன்றி சங்கத்தில் வீற்றிருந்து இறையானார் அகப்பொருள் என்ற     நூலுக்கு பலர் எழுதிய் உறையைக் கேட்டு நக்கீரார் உறையே சிரந்தது என்ற வரலாறு
இங்கு குறிப்பிடப்படுகிறது

No comments:

Post a Comment

Your comments needs approval before being published