Friday 21 September 2012

91.வாதம் பித்தம்


வாதம் பித்தமி டாவயி றீளைகள்
        சீதம் பற்சனி சூலைம கோதர
        மாசங் கட்பெரு மூலவி யாதிகள்                 குளிர்காசம்
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
        யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு
          வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள்      வெகுமோகர்
சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
        டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்
        சோரம் பொய்க்குடி லேசுக மாமென       இதின்மேவித்
தூசின் பொற்சர மோடுகு லாயுல
        கேழும் பிற்பட வோடிடு மூடனை
        தூவஞ் சுத்தடி யாரடி சேரநி                      னருள்தாராய்
தீதந் தித்திமி தீதக தோதிமி
        டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
        சேசெஞ் செக்கெண தோதக தீகுட               வெனபேரி
சேடன் சொக்கிட வேலைக டாகமெ
        லாமஞ் சுற்றிட வேயசு ரார்க்கிரி
         தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு      மயில்வீரா
வேதன் பொற்சிர மீதுக டாவிந
         லீசன் சற்குரு வாயவர் காதினில்
        மேவும் பற்றிலர் பேறரு ளோதிய               முருகோனே
வேஷங் கட்டிபி னேகிம காவளி
         மாலின் பித்துற வாகிவ்வி ணோர்பணி
        வீரங் கொட்பழ னாபுரி மேவிய                 பெருமாளே.
-91 பழநி



அடியாரோடு சேர்வதற்கான துதி
 
பதம் பிரித்து உரை

வாதம் பித்தம் மிடா வயிறு ஈளைகள்
சீதம் பல் ச(ன்)னி சூலை மகோதரம்
அங்கண் மாசு பெரு மூல வியாதிகள் குளிர் காசம்

வாதம் பித்தம் = வாதம், பித்தத்தால் வரும் நோய் வகை மிடா வயிறு = பெரிய வயிறு ஈளைகள் = கோழையால் வரும் க்ஷய நோய் வகைகள். சீதம் = சீதமல நோய் பல் சன்னி = பல் வலியால் வரும் சன்னி சூலை = சூலை நோய் மகோதரம் = பெரு வயிற்று நோய் அம் கண் மாசு = அழகிய கண்களில் உண்டாகும் நோய்கள் பெரு மூல வியாதிகள் = ஆசனத் துவாரத்தில் காணும் நோய்கள் குளிர் காசம் = குளிர் கோழையால் வரும் இழுப்பு

மாறும் கக்கலோடே சில நோய் பிணியோடு
தத்துவகாரர் தொண்ணூறு அறுவாரும்
சுற்றினில் வாழ் சதி காரர்கள் வெகு மோகர்

மாறும் = அடுத்து வரும் கக்கலோடே = வாந்தி முதலிய சில நோய் பிணியோடு = சில நோய் பிணி வகைகளுடன் தத்துவகாரர் = தத்துவக் கூட்டத்தாராகிய தொண்ணூற்று அறுவாரும் = தொண்ணூற்று ஆறு பேர்களும் சுற்றினில் வாழ் = சுழலில் வாழ்கின்ற சதிகாரர்கள் = வஞ்சகர்களும் வெகு மோகர்  = பேரசைக்காரரும் (ஆகிய ஐம்புல வேடர்களால்).

சூழ்(ந்)து உன் சித்ர கபாயை மூ ஆசை கொண்டு
ஏதும் சற்று உணராமலே மாயை செய்
சோரம் பொய் குடிலே சுகமாம் என இதில் மேவி

சூழ் துன் = சூழ்ந்துள்ள பொல்லாத. சித்ர = விசித்திரமான. கபாயை = உடலின் மேலுள்ள மூவாசை கொண்டு = (மண், பெண், பொன் என்னும்) மூவாசையும் கொண்டு ஏதும் = எந்த நல்ல பொருளையும் சற்றும் உணராமலே = சற்றேனும் உணராமல் மாயை செய் = மாயையே விளைக்கின்ற சோரம் = கள்ளத்தனமும் பொய் = பொய்ம்மையுமே கொண்ட. குடிலே = இந்த உடலே சுகம் எனக் கருதி = சுகம் என்று நினைத்து இதில் மேவி = இவ்வுடலைப் போற்றி விரும்பி.

தூசின் பொன் சரமோடு குலாவு உலகு
ஏழும் பிற்பட ஓடிடும் மூடனை
தூ அம் சுத்த அடியார் அடி சேர நின் அருள் தாராய்

தூசில் = நல்ல ஆடையாலும் பொன் சரமோடு குலாவும் = பொன் வடங்களாலும் அலங்கரித்து மகிழ்ந்து உலகு ஏழும் பிற்பட = ஏழு உலகங்களும் எனக்குப் பிற்படும்படி ஓடிடு = முந்தி ஓடுகின்ற மூடனை = மூடனாகிய நான் தூ அம் சுத்த அடியார் = தூய்மை வாய்ந்த அழகிய சுத்த அடியார்களின் அடி சேர = திருவடியைச் சேரும் பாக்கியத்தைப் பெற நின் அருள் தாராய் = உன்னுடைய திருவருளைத் தந்து அருளுக.

தீதந்தித்திமி.........என பேரி
தீதந்தித்.............என பேரி = இவ்வாறான ஒலிகளுடன் பேரி வாத்தியம்.

சேடன் சொக்கிட வேலை கடாகம் எ(ல்)லாம்
அஞ்சு உற்றிடவே அசுரார் கிரி
தீவும் பொட்டு எழவே அனல் வேல் விடு மயில் வீரா

சேடன் சொக்கிட = ஆதி சேடன் மயக்கமுறவும். வேலை = கடல் கடாகம் எல்லாம்  = அண்ட கோளகை இவை முற்றும் அஞ்சுற்றிட = அச்சம் கொள்ளும்படி அசுரார் கிரி = அசுரர்கள் இருந்த மலைகளும் தீவும் = தீவுகளும் பொட்டு எழவே = பொடிபட்டு நாசமுற அனல் வேல் விடு = நெருப்பு வேலைச் செலுத்திய மயில் வீரா = மயில் வீரனே.

வேதன் பொன் சிரம் மீது கடாவி நல்
ஈசன் சற் குருவாய் அவர் காதினில்
மேவும் பற்று அலர் பேறு அருள் ஓதிய முருகோனே

வேதன் = பிரமனது. பொன் சிரம் மீது = அழகிய தலையில். கடாவி = குட்டி நல் ஈசன் = நல்ல சிவபெருமானுக்கு சற்குருவாய் = சற்குருவாய் அமைந்து அவர் காதினில் = அவருடைய செவிகளில் மேவும் = நாடுகின்ற பற்று இலர் = பற்றற்றவர்கள் பேறருள் = பெறத் தக்க அருளாகிய பிரணவப் பொருளை ஓதிய = உபதேசித்த. முருகோனே = முருகனே.

வேஷம் கட்டி பின் ஏகி மகா வ(ள்)ளி
மாலின் பித்து உறவாகி வி(ண்)ணோர் பணி
வீரம் கொட்ட பழனா புரி மேவிய பெருமாளே.

வேஷம் கட்டி = (வேடன், செட்டி, வேங்கை, கிழவன் ஆகிய) வேடங்களைப் பூண்டு பின் ஏகி = பின் தினைப் புனத்துக்குச் சென்று மகா வள்ளி = சிறந்த வள்ளியின் மீது மாலின் = மோக. பித்து உறவாகி = பித்துக் கொண்டவனாகி மேவிய பெருமாளே = மேவிய பெருமாளே விண்ணோர் பணி பெருமாளே தேவர்கள்
 பணியும் (பெருமாளே) வீரம் கொள் பெருமாளே = வீரம் கொண்ட பெருமாளே.

சுருக்க உரை
வாதம், பித்தம் இவைகலால் வரும் பிணிகளும், க்ஷயரோக வகைகளும், கோழையால் வரும் இழுப்பு முதலிய நோய்களும் என்னை வாட்டுவதுடன், தொண்ணூற்றாறு தத்துவங்களில் வாழ்கின்ற ஐம்புலன்களால் ஏற்படும் மூவாசைகளால் பீடிக்கப்பட்டு, எந்த நல்ல பொருளையும் உணராமல், மாயையால் விளையும் பொய்ம்மையால் மூடப்பட்ட இந்த உடலே சுகம் எனக் கருதி, அதை மிகவும் போற்றி, நல்ல ஆடையாலும், பொன் ஆபரணங்களாலும் அலங்கரித்து, மகிழ்ந்து, ஏழு உலகங்களும் எனக்குப் பிற்படும் படி, முன்னே ஓடும் மூடனாகிய நான் தூய அடியார்களின் திருவடிகளைச் சேரும் பாக்கியத்தைப் பெற உனது திருவடியைத் தந்து அருளுக.

ஆதி சேடன் மயங்கவும், கடலும் அண்ட கோளங்களும் அஞ்சவும், அசுரர்கள் வாழ்ந்த மலைகளும் தீவுகளும் பொடிபட, நெருப்பு வேலைச் செலுத்திய மயில் வீரனே, பிரமன் தலையில் குட்டி, ஈசனுக்குக் குருவாய் அமைந்து, அவர் காதில் பிரணவப் பொருளை உபதேசித்த முருகனே, பல வேடங்களைப் பூண்டு வள்ளி நாயகியின் மீது மோகம் கொண்டு, அவள் வாழ்ந்த தினைப் புனத்துக்குப் போய், அவளை மணந்து, பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, என்னை அடியாருடன் சேர்த்து அருள் புரிவாயாக.



Meaning and explanations provided by Dr. C.R.  Krishnamurti,  
Professor Emeritus, University of British Columbia, Vancouver, B.C. Canada
Compilation and Editorial additions by  Shantha and Sundararajan
  


No comments:

Post a Comment

Your comments needs approval before being published