Thursday 8 November 2012

136.நிலையாத சமுத்திரமான


நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
   நிசமான தெனப்பல பேசி                                           யதனூடே
நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
   நினைவால்நி னடித்தொழில் பேணி                          துதியாமல்
தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி
   சலமான பயித்திய மாகி                                              தடுமாறித்
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி
   தலமீதில் பிழைத்திட வேநி                                   னருள்தாராய்
கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத
   கவினாரு புயத்திலு லாவி                                      விளையாடிக்
களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை
   கடனாக மிதுக்கன மாகு                                         முருகோனே  
பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
   படிமீது துதித்துடன் வாழ                                     அருள்வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
   பவரோக வயித்திய நாத                                         பெருமாளே.
-136 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

நிலையாத சமுத்திரமான சமுசார துறை க(ண்)ணின் மூழ்கி
நிசமானது என பல பேசி அதனூடே

நிலையாத = நிலை காணாத. சமுத்திரம் ஆன = கடல் இது என்று சொல்லத் தக்க  சமுசார துறைக்கணின் = சம்சாரம் என்னும் நீர்த் துறையில். மூழ்கி = முழுகி. நிசமானது என = உண்மையே பேசுகின்றேன் என்று. பல பேசி = பலவும் பேசி. அதனூடே = அத்தகைய வாழ்வில்.

நெடு நாளும் உழைப்பு உளதாகி பெரியோர்கள் இடை கரவாது
நினைவால் நின் அடி தொழில் பேணி துதியாமல்

நெடு நாளும் = பல நாட்கள் உழைப்பு உள்ளதாகி = உழைத்து. பெரியோர்கள் இடை = பெரியோர்கள் உள்ள இடத்தில் கரவாகி = மறைந்து. நினைவால் = (உண்மை) நினைப்புடன் நின் அடித் தொழில் பேணி = உனது திருவடிக்கு உண்டான திருப்பணிகளை விரும்பிப் போற்றி துதியாமல் = துதிக்காமல்.

தலையான உடல் பிணி ஊறி பவ நோயின் அலை பல வேகி
சலமான பயித்தியமாகி தடுமாறி

தலையான உடல் பிணி ஊறி = மிகப் பலமான உடல் நோய்களில் ஊறி பவ நோயின் = பிறவி நோய் என்கின்ற அலைப் பல ஏகி = அலைச்சல் பலவற்றையும் அனுபவித்து சலமான = கோபம் என்னும் பயித்தியமாகி = பயித்தியக் காரனாகி. தடுமாறி = தடுமாற்றம் கொண்டு.

தவியாமல் பிறப்பையும் நாடி அது வேரை அறுத்து உனை ஓதி
தலம் மீதில் பிழைத்திடவே நின் அருள் தாராய்

தவியாமல் = நான் தவிக்காமல் பிறப்பையும் நாடி = இந்தப் பிறவி ஏன் வந்தது என்று அதன் மூலகாரணத்தை ஆராய்ந்து அது வேரை அறுத்து = அதனுடைய வேரை அறுத்து உனை ஒதி = உன்னைப் புகழ்ந்து ஓதி தலம் மீதில் பிழைத்திடவே = இப் பூமியில் நான் பிழைத்து வாழும்படி நினது அருள் தாராய் = உன்னுடைய திருவருளைத் தந்து அருளுக.

கலியாண சுபுத்திரன் ஆக குற மாது தனக்கு விநோத   
கவின் ஆரு(ம்) புயத்தில் உலாவி விளையாடி

கலியாண சுபுத்திரனாக = கல்யாண மாப்பிள்ளையாக குறமாது தனக்கு = குறப் பெண்ணாகிய வள்ளிக்கு விநோத = அற்புதமாய் வாய்த்து கவின் ஆறு புயத்தில் = அழகு நிறைந்த புயங்களை உலாவி = அணைத்துத் திளைத்து விளையாடி = விளையாடி.


களி கூரும் உனை துணை தேடும் அடியேனை சுகப்படவே 
கடன் ஆகும் இது கனம் ஆகும் முருகோனே

களி கூரும் = மகிழ்ச்சி கொள்ளும். உனைத் துணை தேடும் = உன்னை எனக்குத் துணையாகத் தேடுகின்ற அடியேனை = அடிய வனாகிய என்னை சுகப்படவே = சுகப்படுமாறு வை = வைத்தருளுக  கடன் ஆகும் = (அது) உனக்குக் கடமையாகும். இதுக் கனமாகும் = இது பெருமையும் ஆகும். முருகோனே = முருகனே.

பல காலும் உனை தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படி மீது துதித்துடன் வாழ அருள் வேளே

பல காலும் உனைத் தொழுவோர்கள் = பல முறையும் உன்னைத் தொழுபவர்கள் மறவாமல் = மறவாது திருப்புகழ் கூறி = உனது திருப்புகழைக் கூறி படி மீது = இந்தப் பூமியில் துதித்துடன் வாழ அருள்வேளே = துதி செய்து வாழ்வதற்கு அருளும் செவ்வேளே.

பதியான திருத்தணி மேவு(ம்) சிவ லோகம் என பரிவு ஏறு
பவ ரோக வயித்திய நாத பெருமாளே.

பதியான = தலமாகிய திருத்தணி = திருத்தணி மேவும் = (யாவரும்) விரும்பும் சிவலோகம் என = சிவலோகமே ஆகும் என்று பரிவு ஏறு = ஆசை கொள்ளும் பெருமாளே பவ ரோக வயித்திய நாத பெருமாளே = பிறப்பு நோய் அணுகா வண்ணம் வயித்தியம் செய்ய வல்ல பெருமாளே.

சுருக்க உரை

நிலை காணாத சமுத்திரம் என்று சொல்லத் தக்க சமுசாரம் என்ற நீர்த்துறையில் முழுகி, உண்மையையே பேசுகின்றேன் என்று சொல்லித் திரிந்து, பெரியோர்கள் உள்ள இடத்திலிருந்து மறைந்து விலகி, உனது திருவடிக்கு உண்டான பணிகளைப் போற்றிச் செய்யாது, பல நோய்களiல் ஊறி, பிறவி நோய் என்ற அலைச்சலை அனுபவித்து, ஒரு பயித்தியக் காரன் போல் தடுமாறி  நான் தவியாமல், பிறப்புக்கு மூலகாரணத்தை அறிந்து, பிறவியை வேரோடு அறுத்து, உன் புகழை ஓதி, பூமியில் நான் பிழைத்து வாழுமாறு உன் திருவருளைத் தந்து அருள்வாய்.

வள்ளிக்குக் கணவனாக வாய்த்து, அவளுடைய புயங்களை அணைத்துத் திளைத்து விளையாடி மகிழ்ந்த உன்னைத் துணையாக நாடுகின்ற எனக்குத் நல் வாழ்வைத் தருவாயாக. உன்னைப் பல முறை துதிப் போர்க்கு அருள் செய்பவனே, செவ்வேளே, உன் பதியாகிய திருத் தணியை சிவலோகம் என்று ஆசை கொள்ளும் பெருமாளே. பிறவி நோயை அறுக்கும் வயித்தியநாதனே நான் பிழைக்க அருள் செய்வாயாக.

விளக்கக் குறிப்புகள்

புயத்தில் உலாவி விளையாடி....
தினமாமன் பாபுன மேவிய
தனி மானின் தோளுடன் ஆடிய
தினை மா இன்பா உயர் தேவர்கள் பெருமாளே...   திருப்புகழ், கனவாலங்கூர்
 
  

2 comments:

  1. What is the relevance of this picture? A caption would help....

    ReplyDelete
  2. Thank you for pointing it out. It was not included by me. It has no relevance. I have removed it . Thank you once again

    ReplyDelete

Your comments needs approval before being published