Saturday 24 November 2012

155.திருமகள்


                      தனதனன தான தனனதன தான
                      தனதனன தான               தனதான

திருமக ளுலாவு மிருபுய முராரி
   திருமருக நாமப்               பெருமாள்காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
    தெரிதரு குமாரப்             பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
   மரகதம யூரப்                 பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
   மருவுகதிர் காமப்             பெருமாள்காண் 
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
   அமர்பொருத வீரப்           பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
   அமலர்குரு நாதப்            பெருமாள்காண்
இருவினையி லாத தருவினைவி டாத
   இமையவர்கு லேசப்         பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
   இருதனவி நோதப்                 பெருமாளே

155 கதிர் காமம்

பதம் பிரித்தல்

திருமகள் உலாவும் இரு புய முராரி
திரு மருக நாம பெருமாள் காண்

திருமகள் உலாவும் = இலக்குமி தேவி விளையாடும்.
இரு புய = இரண்டு திருப் புயங்களை உடைய.
முராரி = திருமாலின்.                                          திரு = அழகிய.
மருக நாம = மருகன் என்னும் திரு நாமத்தை உடைய.
பெருமாள் காண் = பெருமான் நீ அன்றோ.

செக தலமும் வானும் மிகுதி பெறு பாடல்
தெரி தரு குமார பெருமாள் காண்

செக தலமும் = மண்ணுலகிலும்
வானும் = விண்ணுலகிலும்
மிகுதி பெறு = மிக்க பொலிவு பெறும்
பாடல் தெரி தரு= (தேவாரப்) பாடல்களை அளித்து அருளிய
குமாரப் பெருமாள் காண்= குமாரப் பெருமான் நீ அன்றோ.

மருவும் அடியார்கள் மனதில் விளையாடும்
மரகத மயூர பெருமாள் காண்

மருவும் = (உனது திருவடியைச்) சார்ந்த
அடியார்கள் = அடியவர்கள்
மனதில் விளையாடும் = மனதில் விளையாடும்
மரகத மயூர = பச்சை மயில் (ஏறும்)
பெருமாள் காண் = பெருமான் நீ அன்றோ.

அரு வரைகள் நீறு பட அசுரர் மாள
அமர் பொருத வீர பெருமாள்காண்

அரு வரைகள் = பெரிய மலைகள்
நீறுபட = பொடிபட அசுரர் மாள = அசுரர்கள் இறக்க.
அமர் பொருத வீர = சண்டை செய்த வீரனாகிய
பெருமாள் காண் = பெருமான் நீ அன்றோ.

அரவு பிறை வாரி விரவு  சடை வேணி
அமலர் குரு நாத பெருமாள் காண்

அரவு, பிறை, = பாம்பு, பிறைச் சந்திரன்,
வாரி = கங்கை நீர் இவை
விரவு = கலந்துள்ள.
சடை வேணி = பெரிய சடையை உடைய
அமலர் = மலம் இல்லாதவராகிய சிவபெருமானின்
குரு நாத = குரு நாதராகிய
பெருமாள் காண் = பெருமான் நீ அன்றோ.

இரு வினை இலாத தருவினை விடாத
இமையவர் குல ஈச பெருமாள் காண்

இரு வினை = இரண்டு வினைகளும்
இலாத =  இல்லாதவர்களும்.
தரு வினை = கற்பகத் தருவை
விடாத = விட்டு நீங்காதவர்களும் ஆகிய.
இமையவர் குல ஈசா = தேவர்கள் குலத்துத் தலைவராகிய.
பெருமாள் காண் = பெருமான் நீ அன்றோ.

இலகு சிலை வேடர் கொடியின் அதி பார
இரு தன விநோத பெருமாளே.

இலகு சிலை = விளங்கும் வில் ஏந்திய
வேடர் = வேடர்களின்
கொடியின் = (மகளான) கொடி போன்ற வளளியின்.
அதி பார = அதிக பாரமுள்ள.
இருதன விநோத = இரண்டு கொங்கைகளிலும் களி கூரும். பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

இலக்குமிக்கும், திருமாலுக்கும் மருகனே. மண்ணுலகும், விண்ணுலகும் போற்றும் தேவாரப் பாடல்களை சம்பந்தராக வந்து அருளிய பெருமாள் நீ. உனது திருவடியைச் சார்ந்த அடியார்களின் மனத்தில் விளையாடும் பெருமான் நீ. மணியையும், முத்தையும் வீசும் அருவிகள் சூழ்ந்த கதிர் காமத்துப் பெருமான் நீ. பெரிய மலைகள் பொடிபடவும், அசுரர்கள் மாளவும் போர் புரிந்த பெருமான் நீ. பாம்பு, நிலவு, கங்கை நீர் இவை கலந்துள்ள பெரிய சடையை உடைய மலமற்ற சிவபெருமானின் குருநாதர் நீ. வினைகள் அற்ற பெரியோர்களுக்கும், கற்பக தருவை விட்டுநீங்காத தேவர் குலத்து தேவேந்திரனுக்கும் தலைவன் நீ.வேடுவர்பெண்ணாகிய வள்ளியின் பெரிய கொங்கைகளில் களி கூரும் பெருமாள் நீ. உன்னைத் துதிக்கின்றேன்.

விளக்கக் குறிப்புகள்


சடை வேணி ....  அடவி காடே என்பது போல் ஒரு பொருள் இரட்டைச்  சொல். மிகுதியைக் குறிக்கும்.




No comments:

Post a Comment

Your comments needs approval before being published