தந்தன தான தான தந்தன தான தான
தந்தன தான தான தனதான
வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது பலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீணி லழியாதே
செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
திண்டிறல் வேல்ம யூர முகமாறும்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
செங்கனி வாயி லோர் சொல ருள்வாயே
பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
பஞ்சற வாது கூறு சமண்மூகர்
பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது
பண்டித ஞான நீறு தருவோனே
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
குன்றவர் சாதி கூடி வெறியாடிக்
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
குன்றுதொ றாடல் மேவு பெருமாளே
-164 குன்றுதோறாடல்
பதம் பிரித்து உரை
வஞ்சக லோப மூடர் தம் பொருள் ஊர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது பல பாவின்
வஞ்சக = வஞ்சகமும் லோப(ம்) = ஈயாத குணமும் கொண்ட மூடர்தம் = மூடர்களுடைய பொருள் = பொருளையும். ஊர் = ஊர்களையும். தேடி = தேடி மஞ்சரி, கோவை, தூது = மஞ்சரி, கோவை, தூது என்று கூறப்படும் பல பாவின் = பல வகைப் பா இனங்களால்.
வண் புகழ் பாரி காரி என்று இசை வாது
கூறி
வந்தியர் போல வீணில் அழியாதே
வண் = ஈதல் குணம் நிறைந்த. புகழ் = புகழ்
வாய்ந்த, பாரி காரி என்று =
பாரி வள்ளலே, காரியே நீங்கள் என்று. (ஆதாரமே இல்லாத அயர்வுற்ற
பூங்கொடிக்கு தன் தேரைக் கொடுத்தவன் பாரி. புலவர்களுக்கு எல்லை இல்லாமல் வாரிக்
கொடுத்தவன் காரி ) இசை = புகழ். வாது கூறி = சபதப் பேச்சுக்களைப் பேசி.
வந்தியர் போல = (அரசச் சபையில் புகழ்
கூறுவார் போல). வீணில் அழியாதே = வீணாகக் காலத்தை நான் அழிவு செய்யாமல்.
செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை
திண் திறல் வேல் மயூர முகம் ஆறும்
செம் சரண் = செம்மை வாய்ந்த திருவடியையும். நாத கீத = ஒலி இசை செய்யும் கிண்கிணி = கிண்கிணியும் நீப மாலை = கடப்ப மாலையையும். திண் திறல் = வலிய திறமை வாய்ந்த வேல் = வேலையும் மயூரம் = மயிலையும் முகம் ஆறும் = ஆறு திருமுகங்களையும்.
செம் தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானம்
ஊறு
செம் கனி வாயில் ஓர் சொல் அருள்வாயே
செம் தமிழ் நாளும் ஓதி = செந் தமிழால் நாள் தோறும் ஓதி உய்ந்திட = நான் உய்யுமாறு ஞானம் ஊறு = உனது ஞானம் ஊறுகின்ற செம் கனி வாயில் = செம்மை சேர்ந்த கனி போன்ற வாயினால் ஓர் = ஒப்பற்ற சொல் = உபதேசச் சொல்லை அருள்வாயே = போதித்து அருள்வாயாக.
பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு
பஞ்சு அற வாது கூறு சமண் மூகர்
பஞ்சவன் = பாண்டியனுடைய நீடு கூனும் = நெடு நாளாக இருந்த கூனும் ஒன்றிடு = வந்து சேர்ந்த தாபமோடு = சுரமும் பஞ்சு அற = பஞ்சாய்ப் பறந்தோடும்படி வாது கூறு = தர்க்க வாதங்களைப் பேசி சமண் மூகர் = சமண ஊமைகள்.
( மூகர் - சமணர்கள் ஓதும் மந்திரங்களில்ஞ, ஞா, ஞை, ஞொ, ஞோ எனும் சப்தங்கள் மிகுத்து
விளங்குவதால் மற்றவர்கள் அவர்களை ஊமை எனும் பொருளில் மூகர் என அழைத்தனர். )
பண்பு அறு பீலியோடு வெம் கழு ஏற ஓது
பண்டித ஞான நீறு தருவோனே
பண்பு அறு = மேன்மை அழிந்து பீலியோடு = (அவர்களுடைய) மயில் இறகோடு வெம் கழு ஏற = கொடிய கழுவில் ஏறும் வகைக்கு ஓது = (தேவாரத் திருப்பதிகங்களைச் சம்பந்தராக வந்து)
ஓதிய. பண்டித = பண்டித மூர்த்தியே ஞான நீறு தருவோனே = ஞானத் திருநீற்றைப் (பாண்டியனுக்குத்) தந்தவனே.
குஞ்சரம் யாளி மேவும் பைம் புனம் மீது
உலாவு
குன்றவர் சாதி கூடி வெறி ஆடி
குஞ்சரம் = யானை யாளி = யாளி ஆகியவை. மேவும் = இருந்த பைம்புனம் மீது = பசுமை வாய்ந்த தினைப்
புனத்தில் உலாவும் = உலவிய குன்றவர் = மலை வேட்டுவர்களுடைய சாதி கூடி = சாதி மக்கள் ஒன்று கூடி வெறி ஆடி =
வெறியாட்டம் ஆடி (உன்னை).
கும்பிட நாடி வாழ்வு தந்தவரோடு வீறு
குன்று தொறாடல் மேவு பெருமாளே.
கும்பிட நாடி = கும்பிட்டதின் பயனாக வாழ்வு தந்து = (அவர்களுக்கு) நல்
வாழ்வைத் தந்து அவரோடு வீறு = அவர்களுடன் விளங்குகின்ற குன்று தோறாடல் மேவு பெருமாளே = மலைகள் தோறும் திருவிளையாடல் செய்யும் பெருமாளே.
சுருக்க உரை
வஞ்சகர், பிறருக்கு ஈயாதார், மூடர்கள் ஆகியோரைத் தேடிச் சென்று, பல வகையான தமிழ்ப்பா இனங்களால் அவர்களைப்
பாரியே என்றும் காரியே என்றும் புகழ்ந்து பாடி, என் வாழ் நாளை வீணாக்கி அழியாமல், உன் செவ்விய திருவடியையும், ஒலி இசை செய்யும் கிண்கிணியையும், கடப்ப மலையையும், வலிய வேலையும், மயிலையும், ஆறு திருமுகங்களையும், செந்தமிழப் பாக்களால் நாள் தோறும் ஓதி
உய்ந்திட, நீ உனது கனி வாயால் ஒப்பற்ற உபதேசச் சொல்லை எனக்குப் போதித்து
அருளுக.
பாண்டியனுடைய கூனும், சுரமும் பஞ்சாகப் பறந்தோடும்படியும், சமண ஊமைகள் அவர்களுடைய மயில் இறகோடு கொடிய
கழுவில் ஏறும்படியும், தேவாரத் திருப்பதிகங்களை ஓதிய சம்பந்தராகிய அவதரித்த பண்டிதனே.
திருநீற்றைப் பாண்டியனுக்குத் தந்தவனே. யானை, யாளி ஆகியவை இருந்த தினைப் புனக் காட்டில்
வேடர்கள் ஒன்று கூடி வெறியாட்டம் ஆட, அவர்களுடைய பெண்ணாகிய வள்ளியை மணந்து, அவர்களுக்கு நல் வாழ்வை அளித்து, மலைகள் தோறும் விளையாடல் செய்யும் பெருமாளே.
உலோபிகளிடம் சென்று யாசகம் செய்யாமல், உன்னைப் புகழ்ந்து பாட எனக்கு உபதேசச் சொல்லை அருள்வாயாக.
ரசபதி உரை
எண்ணிலாத சமயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் அறிவின் தரத்திற்குத்
தக்கவாறு அமைந்தவை. மூலப் பரம் பொருளை அறிய முயல்பவை. பரத்தை அனுபவிக்க அவைகள் மேற்கொண்ட
அனுஷ்டானங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாய் இருக்கும். ஒன்றதே பேரூர், வழி ஆறு அதற்குள் என்று அவைகளைத் தொகுத்துக்
கூறினார் திருமூலர். எந்த சமயத்தவரும் தமக்கென அமைந்த முதன்மை அனுஷ்டானத்தை முறைப்படி
நடத்தி அனுபவம் விளங்கி இறவா பிறவா இன்பம் எய்தினர். இது பழைய கால நிலை.
வர வர சோம்பல் வளர்ந்தது. சமய அனுஷ்டானங்கள் சரிந்தன.
சின்னத்து அளவாகி சிரித்தனர். எதையும் முறையாகக் கற்க வேண்டும் எனும் ஆர்வம் இல்லை.
ச்ரவணம் என்கிற பெயரில்f பொழுதை விருதாவே போக்கினர். கல்லாதார்
கேள்வியை மட்டுமே காமித்தால் அனுபவ ஞானம் அமையாது. அமைதி மனதில் பிறவாது. ஆத்ம சாந்தி
வராது. கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுதேத்த பெற்றம் ஊர்த்த பிரமாபுரம்
மேவிய பெம்மான் இவனன்றே என்று திருஞான சம்பந்தர் உய்யும் வழியை உணர்த்தியுள்ளார்.
கற்றவர் கேள்வி ஞானத்தால் கலந்தனரேல் ஓதிய கல்வி உரம்
பெறும்.இது தான் இயற்கை தந்த இனிய வழி. இந்த தர்மத்தை மறந்து தூய தமது அனுஷ்டானத்தைத்
துறந்து வெறும் கேள்வி அளவில் விளங்கி, அவலை நினைத்து உரலை இடிப்பவர் போல், எம் சமயம் ஏற்றம், மற்றவர் சமயம் மட்டம் என்று வாய் வாதத்தையே, பிற் காலத்தவர் வளர்த்தனர். தம் கொள்கைளைத் தழுவாதவர்க்கு தலை வேதனை பல தந்தனர்., வாலறுத்த நரித் தந்திரங்கள் வளர்ந்தன.
அறிவு பெருகிய ஆதி சமணம், வளர்ந்து, ஒரு காலத்தில் வாழ்ந்தது. மற்றவரையும்
வாழ வைத்தது. இது ஒரு காலம். அச்சமய சார்பு கொண்ட பிற்கால மக்கள், மா பெரும் தம் தர்மத்தை மறந்தனர். எம் சமயமே ஏற்றது என்று கொள்ளித் தேள் போலக்
குதித்தனர். எவரையும் தம் சமயத்திற்குள் ஈர்க்க சூழ்ச்சி யந்திரத்தைச் சுழற்றினர்.
விஞ்ஞானத்தை விருத்தி செய்தனர்.
பல இடங்களைப் பழுது படுத்தினர். பாண்டி நாட்டில் புகுந்தனர்.
மந்திர தந்திர மரபுகளால் அறிவில் இருளைப் பரப்பினர். தரம் குறைந்தோர் பலர் அவர் சமயத்தைத்
தழுவினர். நீறிட்டார் கெட்டார், வீபூதி இடார் வாழ்ந்தார் என்பது அவர்கள்
உபதேசம். சைவரைக் கண்டால் பாவம், அவர்கள் குரலைக் கேட்டது தோஷம், இதற்கு கண்டு முட்டு கேட்டு முட்டு என்று
பெயர். இப்படி எல்லாம் ஏய்த்து நாளும் சாகஸ நாடகம் ஆடினர். அரசர் பாண்டியரும் அவர்கள்
வலையில் அகப்பட்டார்.
மகாராணி மங்கையர்க்கரசியார் இந்நிலை கண்டு மனம் வருந்தார்.
அமைச்சரோடு ஆலோசித்து ஆளுடை பிள்ளையாரை மதுரைக்கு அழைத்தார். பிள்ளையார் மதுரைக்கு
வந்தார். பழைய சமயப் பொலிவு பாண்டியில் இல்லை. நீறற்ற நெற்றி, கோவணம் இல்லாதார் சிலர். தம்மையும் தம்மைச் சார்ந்தாரையும் கண்டு, கண்டு முட்டு கேட்டு முட்டு என்று படபடத்து ஓடுகின்றனர் பலர். ஏன் இங்கு வந்தாய்
என்று எதிர்ப்பை எழுப்பினர்.
மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளர்க் கை மடமாணி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ
பொங்கழல் உருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருளும் அருளி
அங்கயர்க் கண்ணி தன்னோடும் அமர்ந்த ஆலவாய் ஆயதும் இதுவே - என்று வருந்திப் பாடினார். அதன் பின் அமணர்கள்
அவர் தங்கி இருந்த மடத்தை எரிக என்று நெருப்பை இட்டனர். அது கண்டு,
செய்யனே, திரு ஆலவாய் மேவிய ஐயனே
அஞ்சல் என்று அருள் செய் எனை
பொய்யராம் அவுணர் கொளுவுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியர்க்காகவே - என்று பதிகம் பாடினார்
பிள்ளையார்.
அத்தீயின் வெம்மை பாண்டியரைச் சுரநோயாகப் பற்றியது.அந்தச் சுரத்தை தீர்க்க முயன்று
அமணர்கள் தோற்றனர்.
மங்கயர்க்கரசியார் விரைந்தார் பிள்ளையாரைப் பணிந்தார்.
சுவாமீ,
மன் காதலில் உய்வது இவ்வையம் எல்லாம்
மலையாள் முலையால் அமுதுண்டவனே
எம் காதலன் எம்பெருமான் அவனுக்கு இதுவோ தகவு என்று வேந்தர்
சுரநோயைத் தணிக்க விண்ணப்பித்தார்.
அஞ்ச வேண்டா, நிமலன் கரத்தில் நெருப்புண்டு அதை அணைக்க
நீரையும் திருமுடியில் தாங்கியுள்ளான்.
கனல் எங்கள் கனல், புனல் எங்கள் புனல் என்று பின் நிகழ்வுள நிகழ்வையும் பிள்ளையார்
குறிப்பாக முன்னே கூறினார்.
அதன் பின் அரசரை அணுகினார். நோக்கினார்.
நீறிட்டு ஆர் கெட்டார் ? விபூதியிடாது ஆர் வாழ்ந்தார்? என்றார்.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திருவாலவாயன் திருநீறே - என்று பதிகம் பாடி நீறு பூசி அரசருக்கிருந்த
சுரத்தை அகற்றினார். அதனுடன் உடன் பிறப்பான கூனும் ஒழிந்தது. நின்ற சீர் நெடுமாறர்
எனும் அரியதோரு பெயரையும் அரசருக்கு பிள்ளையார் அளித்தார்.
மனம் பொறாத அமணர்கள் வாதத் தீயை வளர்த்தனர்.
போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்
நாகமார்த்த நம் பெருமான் மேயது நள்ளாறே - என்று பாடியிருந்த
பழைய ஏட்டை எடுத்தார்.
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலை மகள்
குளிர் இள வளர் ஒளி வன முலை இணையவை குலவலின்
நளிர் இள வளர் ஒளி மருவு நள்ளாறர் தம் நாமமே
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுதிலை மெய்ம்மையே
( இதன் பொருள் - இளந்தளிர் போன்று பெருகி
வரும் அருளில் எழில் திகழும் உமாதேவியை உடனாகக்
கொண்டு விளங்குகின்ற நள்ளாற்று நாதரின் திருநாமம் தாங்கிய போகமார்த்த எனத் துவங்கும்
திருப்பதிகம் எழுதப்பட்ட ஓலையை எரியில் இட்டால் பழுது இல்லாது காக்கும் என்பது மெய்ம்மையே
)
என்று பாடி எரியும் நெருப்பில் ஏட்டை இட்டார். அஸ்தி நாஸ்தி
என்ற மந்திரம் எழுதிய ஏட்டை அமணர் தீயில் இட்டனர். பிர்ளையார் ஏடு பசுமை மிகுந்து பளபளத்தது.
அமணர்கள் ஏடு எரிந்து கரிந்தது.
அதன் பின் வாத வெள்ளம் வளர்ந்தது
வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம்
வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே
என்று அருளி திருஞான சம்பந்தர் இட்ட ஏடு வைகை வெள்ளத்தில்
எதிரேறிச் சென்று திருஏடகப்பதியில் கரை ஏறியது. அமணர்கள் இட்ட ஏடு வெள்ளத்தின் வழியே
விரைந்து மா பெரும் கடலுள் புகுந்து மறைந்தது.
அது கண்ட சமணர்கள் மண் மேல் விழுந்து எழுந்தனர். மானம்
போனது என்றனர். ஏராளமான கழு மரங்களை நட்டனர். என்ன வேதனையான வரலாறு. இவர் சொற் பேச்சு
கேட்டிலர்.சுய அறிவை இழந்தனர். இத்தகையர் வரலாறு என்றும் இப்படித்தான் ஆகுமோ என்னவோ
ஆளுடைய பிள்ளையாரில் அமர்ந்திருந்து, பெரும, முருகா, இவ்வற்புதங்களை ஒரு காலத்தில் நிகழ்த்தினை.இவைகளை எண்ணி எண்ணி இதயம் உருகி, பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடுபஞ்சற
வாது கூறு சமண் மூகர் ... கழு ஏற ... ஓது பண்டித என்று பாடி மகிழ்கிறார்கள் பக்தர்கள்.
அமணர்கள் ஓது மந்திரங்கள் ஞஞண, ஞாஞண, ஞொஞண, ஞோஞண என ஒலித்தலின் ஊமையர் எனும் குறிப்பில் அவர்களை மூகர் என்று ஓதினர்
முன்னோர். அறிவு மிகுந்தவர்கள் பொறாமையும் போட்டியும் வளர்த்தனரேல் அவர்கள் அடியோடு
கெடுவர் என்பதை அறிவித்த வரலாறிது.
கொடிய விலங்குகள் வசிக்கும் கானகத்தில் குறவர் கூடுவர்.
வைதீக அறிவு இல்லாவர். தர்மாதர்மம் தெரியாதார். அவர்கட்கென வகுத்துக் கொண்ட அனுஷ்டானப்படி
ஆராதிப்பர். அவர்கள் தலைவனான பூசாரி வேலன் என்ற பெயரில் விளங்குவன். என்றும் அவன் கையில்
வேல் இருக்கும். அவன் மேல் ஆவேசிப்பை. வேலா குறிஞ்சி அரசே என்று கூவிக் குறவர் கும்பிடுவர்.
அறிவிலா அவர்கள் அனுஷ்டானங்களைக்
கண்டு வாழுமாறு அருள் வழங்கி, மலை நிலம்தோறும் புனிதமான அருள் ஆடல் புரியும் உம்மை பெருமாளே என்று ( சிறியவர்கட்கு அருளும் பெரிய பொருளே எனும் பொருளில்
) எடுத்த குரல் கொண்டு ஏத்துவம்.
நெஞ்சில் வஞ்சங்கள் நிறைந்தன. உலோப குணங்கள் உயர்ந்தன.
மூடம் பாசிகள் அறிவில் படர்ந்தன. பாதக சாகசம் பல செய்து பணமுடையார் ஆயினர் பலர். வறுமை
புலவர்களிடம் வளர்ந்தது. வயிறு காய்ந்தது. குடும்பம் குமைந்தது. அவைகளால் மயங்கி விடுகிறது
மதிநிலை. பசி தவிர்க்க எண்ணிய பாவலர் சிலர், மேற்சொன்ன செல்வர்கள் வாயிலைச் சேர்கின்றனர்.
ஆதாரமில்லாமல் அங்கலாய்த்த முல்லைக் கொடியை, இதனிற் படர்ந்து சுகமாய் இரு என்று ஏறியிருந்த
பொன் தேரை உதவிய பாரி வள்ளல் பரம்பரையில் வந்தவனே, வாரி புலவர்க்கு வழங்கிய காரி வள்ளல் கால்
வழியில் உதித்தவனே உன்னை நாடினம். உதவி செய் என்று போற்றி செல்வர்களைப் புகழ்கின்றனர்.
ராஜ சபையில் அவர்கள் புகழ் பாட வந்தியர் என்றுஒருவர் இருப்பர்
( வந்தித்தல் செய்பவர் வந்தியர் ) அவர்களைப் போல் தம்மைப் பாடும் பாவலர்களில் பாடல்
கேட்டு பல்லிளிக்கும் சில செல்வர்கள் ஏதோ ஒரு
சிறு தொகையை உதவ மகிழ்கிறது அவ்வேழைகள் மனம்.இல்லாத புகழை இருப்பதாகக் கூறும் இதுவும் ஒரு பாவந் தான்.
மிடுக்கில்லாதானை வீமனே,விறல் விஜயனே வில்லுக்கு இவன் என்று
கொடுக்கிலாதானை பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்லை
பொய்ம்மையாளரைப் பாடாதீர் எந்தை புகலூர் பாடுமின் புலவீர்கள்
இம்மையை தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே - என்று
இச்சூழ்நிலை அறிந்த சுந்தர மூர்த்திகள் ஒரு சமயம் உள்ளம் நொந்து பாடியுளர்.
அப்படி அடியேன் அதோ கதி ஆகாதபடி உன் அடி பாடினால் பிறவி
தொலையும்அடியில் அணிந்த கிண்கிணியைப் பாடினால் நாத அனுபவ நலம் விளையும். புனித கடப்ப
மாலையைப் பாடினால் சிவ போக அனுபவம் சித்திக்கும். வேலைப் பாடினால் ஆறுதல் விளையும்.
இப்படியே அடியேன் தமிழில் பாடி இன்புறுமாறு உனது அருள் ஞான திருவாக்கால் ஒரு மொழி உபதேசம்
செய்தருள். ஞான நீறு தருவோனே, பெருமாளே ஒர் சொல் அருள்வாயே என்று வீழ்ந்து
வணங்கி விண்ணப்பித்த படி
விளக்கக் குறிப்புகள்
1. வண் புகழ் பாரி, காரி என்றிசை வாது கூறி....
பாரி, காரி இருவரும் கடை ஏழு வள்ளல்களில் இருவர் ஆவர்.
கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினுங் கொடுப்பார் இலை
...சுந்தரரர் தேவாரம்
2. மஞ்சரி = பாக்களின் கொத்து , மஞ்சரிப்பா.
3. பஞ்சவன் = பாண்டியன்.
திகுதிகென மண்டவிட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி வாருகர்
திகையினமண் வந்து விட்டபோதினும் அமையாதே...
-----திருப்புகழ், திடமிலிசற்
4. வந்தியர் = அரச சபையில் அரசனுடைய புகழ் கூறுவோர்.
No comments:
Post a Comment
Your comments needs approval before being published