Tuesday 11 December 2012

178.காலனிடத்து



                   தான தனத்        தனதான

           கால னிடத்             தணுகாதே 
              காசி னியிற்       பிறவாதே
         சீல அகத்                தியஞான 
              தேன முதைத்      தருவாயே
         மால யனுக்          கரியோனே 
              மாத வரைப்       பிரியானே
         நாலு மறைப்         பொருளானே 
               நாக கிரிப்        பெருமாளே
-    178 திருச்செங்கோடு

பதம் பிரித்து உரை


காலன் இடத்து அணுகாதே காசினியில் பிறவாதே
சீல அகத்திய ஞான தேன் அமுதை தருவாயே

காலன் இடத்து அணுகாதே = யமனுடைய ஊரை அணுகா வகைக்கும் காசினியில் பிறவாதே = பூமியில் பிறவாமலும் சீல = நல்லொழுக்கம் வாய்ந்த அகத்திய = அகத்தியருக்கு ஞான தேன் அமுதை = நீ உபதேசித்து அருளிய ஞானோபதேச தேன் போன்ற உபதேச அமுதை தருவாயே = அடியேனுக்கும் தந்தருளுக.

மால் அயனுக்கு அரியோனே மா தவரை பிரியானே
நாலு மறை பொருளானே நாக கிரி பெருமாளே.

மால் அயனுக்கு அரியோனே = திருமாலுக்கும் பிரமனுக்கும் காண்பதற்கு அரியவனே மா = சிறந்ததவரை = தவ சிரேட்டர்களை பிரியானே= விட்டுப் பிரியாதவனே நாலு மறைப் பொருளானே=நான்கு வேதங்களின் பொருளா யுள்ளவனே நாக கிரிப் பெருமாளே =பாம்பு மலை எனப்படும் திருச் செங்கோட்டில் உறையும் பெருமாளே

சுருக்க உரை

யமன் என்னை அணுகாமலும், பூமியில் இனிப் பிறவாமலும், சீலரான அகத்தியருக்கு உபதேசித்த ஞான மொழியை அடியேனுக்கும் தந்தருளுக. 

திருமாலும், பிரமனும் காண முடியாதவனே, மா தவசிகளை விட்டுப் பிரியாதவனே, நான்கு வேதங்களுக்கும் பொருளாயுள்ளவனே, திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே, எனக்கு ஞான உபதேசத்தைத் தந்து அருள வேண்டும்.


விளக்கக் குறிப்புகள்


1. அகத்திய ஞான.....
  
அகத்திருக்கு முருக வேள் திருத்தணிகையில் ஞான உபதேசம் செய்தனர்.
   வேலிறைவன் இயம்பிய ஞானமுற்றுணர்ந்து... வாழ்ந்திருந்தனன்
   முநிவன்                                        --- தணிகைப் புராணம் .
 
 இது போல் சிவபெருமானுக்கு உபதேசித்த ஞானப் பொருளைத் தனக்கும் உபதேசிக்க வேண்டுகிறார் அருணகிரி நாதர்.
  
 ஒப்புக

   பண்டேசொற் றந்த பழமறை
   கொண்டேதர்க் கங்க ளறவுமை
   பங்காளர்க் கன்று பகர்பொருள் அருள்வாயே      ---      திருப்புகழ், கொண்டாடி 
  
   சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
   றுங்கு ருத்து வங்கு    றையுமோதான்      ---                      திருப்புகழ், சயிலாங்க
  
   நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள்வாயே ---
                                                                       திருப்புகழ்,  அகரமுதலென
   புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்
     புற்பு தப்பி ராணனுக்  கருள்வாயே        ---                        திருப்புகழ், துத்திநச்ச




No comments:

Post a Comment

Your comments needs approval before being published