Tuesday 19 March 2013

192.சிரமங்கமங்கை


192
சிரமங்க மங்கை

வள்ளிமலை நாதனே! உடம்பு அழியுமுன் உமது திருவடியைத் தந்தருள்வீர்.
        
தனதந்த தந்தனந் தனதந்த தந்தனந்
                      தனதந்த தந்தனந்                   தனதான

சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்
  சலமென்பு திண்பொருந்                       திடுமாயம்
சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
  தழலின்கண் வெந்துசிந்                         திடஆவி
விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்
  துயர்கொண்ட லைந்துலைந்                 தழியாமுன்
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
  வினவென்று அன்புதந்                      தருள்வாயே
அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கள்
  டமரஞ்ச மண்டிவந்                              திடுசூரன்
அகலம்பி ளந்தணைந் தகிலம்ப ரந்திரங்
  கிடஅன்று டன்றுகொன்                    றிடும்வேலா
மரைவெங்க யம்பொருந் திடவண்டி னங்குவிந்
  திசையொன்ற மந்திசந்                        துடனாடும்
வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
  வரநின்று கும்பிடும்                           பெருமாளே

-192 வள்ளி மலை

பதம் பிரித்தல்

சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம்
சலம் என்பு திண் பொருந்திடு மாயம்

சிரம் அங்கம் = தலை என்னும் உறுப்பு அம் கை = அழகிய கை கண் செவி = கண், காது வஞ்ச நெஞ்சு = வஞ்சகத்துக்கு இடமான மனம் செம் சலம் = இரத்தம் என்பு = எலும்பு திண் பொருந்திடு = இவை நன்றாகப் பொருந்தியுள்ள மாயம் = மாயமான உடல்.

சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு செம்
தழலின் கண் வெந்து சிந்திட ஆவி

சில துன்பம் இன்பம் ஒன்றி = சில துயரங்களும் இன்பங்களும் பொருந்தி இற வந்து பின்பு = இறப்பு வந்த சேர்ந்த பின்னர் செம் தழலின் கண் = செவ்விய நெருப்பில் வெந்து = வெந்து ஆவி சிந்திட = உயிர் பிரிதல் உறும்படி.

விரைவில் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம்
துயர் கொண்டு அலைந்து அழியா முன்

விரைவின் கண் = சீக்கிரத்தில். அந்தகன் = நமன் பொர வந்தது என்று = போரிட வந்து விட்டான் என்று வெம் துயர் கொண்டு = மிக்க துயரமுற்று அலைந்து அழியா முன் = நிலை குலைந்து அழிவதற்கு முன்பாக.

வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம்
வினவ என்று அன்பு தந்து அருள்வாயே

வினை ஒன்றும் இன்றி = வினை யாவும் தொலைந்து நன்று இயல் ஒன்றி = நல்ல செய்கைகளே பொருந்தி நின் பதம் = உனது திருவடியை வினவ என்று = ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற. அன்பு தந்து அருள்வாயே = அன்பை எனக்குத் தந்து அருள் புரிவாயாக.

அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர்கண்டு
அமர் அஞ்ச மண்டி வந்திடு சூரன்

அரவின் கண் = (ஆதிசேடனாகிய) பாம்பின் மேல் முன் = முன்பு. துயின்று அருள் = அறி துயில் கொண்டு (உயிர்களை) அருள் பாலிக்கும் கொண்டல் = மேக நிறத்தின னாகிய திருமாலும் அண்டர் = தேவர்களும் கண்டு = பார்த்து அமர் அஞ்ச = போருக்கு அஞ்சும்படி மண்டி வந்திடு சூரன் = நெருங்கி வந்த சூரனுடைய.

அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து
இரங்கிட அன்று உடன்று கொன்றிடும் வேலா

அகலம் பிளந்து = மார்பைப் பிளந்து அணைந்து = பொருந்திய அகிலம் பரந்து இரங்கிட = உலகில் (எல்லா இடங்களிலும் அவன் விழும் ஒலி) பரந்து ஒலிக்க அன்று = அன்று உடன்று = கோபித்து கொன்றிடும் வேலா = (அவனைக்) கொன்ற வேலனே.

மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து
இசை ஒன்ற மந்தி சந்துடன் ஆடும்

மரை = தாமரை வெம் கயம் பொருந்திட= விரும்பத்  தக்க குளங்களில் பொருந்த வண்டினம் குவிந்து = வண்டின் கூட்டங்கள் கும்புகூடி இசை ஒன்ற = இசை ஒலிக்க மந்தி = குரங்குகள் சந்துடன் ஆடும் = சந்தன மரங்களுடன் விளையாடும்.

வரையின் கண் வந்து வண் குற மங்கை பங்கயம்
வர நின்று கும்பிடும் பெருமாளே.

வரையின் கண் வந்து = (வள்ளி) மலைக்கு வந்து வண் = வளப்பமுள்ள குற மங்கை = வள்ளியின் பங்கயம் வர = பாத தாமரை வரக் கண்டு நின்று = நின்று கும்பிடும் பெருமாளே = (அவளைக்) கும்பிட்ட பெருமாளே.

சுருக்க உரை

தலை, அழகிய கை, கண், காது, வஞ்சக மனம், இரத்தம், எலும்பு இவை நன்றாகப் பொருந்திய உடல், சில துன்பம், இன்பத்துடன்  பொருந்தி, முடிவில் இறப்பு வந்த உடன், நெருப்பில் வெந்து ஆவி பிரியும்படி, நமன் வந்து விட்டான் என்று துயருற்று, நிலை குலைந்து நான் அழிவதற்கு முன், என் வினைகள் யாவும் தொலைந்து, நல்ல செய்கைகளையே செய்து, உனது திருவடியை ஆராய்ந்து அறிய எனக்கு அருள் புரிவாயாக.

ஆதிசேடன் மேல் அறி துயில் செய்யும் மேக நிறத் திருமாலும், தேவர்களும், போருக்கு அஞ்சும்படி, நெருங்கி வந்த சூரனுடைய மார்பைப் பிளந்து, அவன் விழும் ஒலி எங்கும் பரந்து ஒலிக்க வேலைச் செலுத்தியவனே, தாமரைக் குளங்களும், வண்டுகளின் இசையும், குரங்குகள் விளையாட்டும் பொருந்திய வள்ளி மலைக்கு வந்து, அங்கு வள்ளியைக் கண்டு அவளுடைய பாதங்களைக் கும்பிடும் பெருமாளே, உன் திருவடியைத் தந்து அருளுக.

ஒப்புக:

மந்தி சந்துடன் ஆடும்....

செண்ப காடவி யினுமித ணிலுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்..............................    .திருப்புகழ் ,கொந்துவார்

மட்டொழுகு சாரமதுரித்த தேனைப் பருக
மர்க்கட சமூக மமை தொட்டிறாலெட்டுவரை …..................…பூதவேதாள வகுப்பு.




No comments:

Post a Comment

Your comments needs approval before being published