Sunday 19 May 2013

217.மதியால்


217
கருவூர்

             தனதானத் தனதான தனதானத் தனதான

மதியால்வித் தகனாகி மனதாலுத்                தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத்                தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற்  பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற்              பெருமாளே

பதம் பிரித்து உரை

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி
பதிவாகி சிவ ஞான பர யோகத்து அருள்வாயே

மதியால் = என் புத்தியைக் கொண்டு வித்தகனாகி = (நான்) ஒரு பேரறிவாளா னாகாகி மனதால் = எம் மனம் நன்னெறி யையே பற்ற உத்தமனாகி = நான் ஒரு உத்தம குணம் படைத்த மேலோனாகி.

சிவ ஞான பதிவாகி = சிவ ஞானத்தில் என் மனம் ஊன்றுவதாகி பர யோகத்து = மேலான வாழ்க்கையை. அருள்வாயே = நான் பற்றும்படி அருள் புரிவாயாக.

நிதியே நித்தியமே என் நினைவே நல் பொருள் ஆயோய்
கதியே சொல் பர வேளே கரிவூரில் பெருமாளே.


நிதியே = என் செல்வமே நித்தியமே = அழிவில்லாப் பொருளே என் நினைவே = என் தியானப் பொருளே நல் பொருள் ஆயோய் = சிறந்த பேரின்பப் பொருள் ஆனவனே.

கதியே = என் புகலிடமே சொல் = எல்லோராலும் புகழப்படும் பர வேளே = மேலான செவ்வேளே கருவூரில் பெருமாளே = கருவூர்த் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

என் புத்தியைக் கொண்டு ஒரு பேரறிவாளி ஆகி, நான் நன்னெறியையே பற்றி மேலோனாகி, சிவ ஞானம் என் மனதில் ஊன்றுவதாகி, யோக வழியை நான் பற்றும்படி அருள் புரிவாயாக.
என் செல்வமே. அழிவில்லாத பொருளே, என் தியானப் பொருளே. நன்மை தரும் கடவுளே, என் புகலிடமே, யாவராலும் புகழப்படும் மேலான செவ்வேளே, கருவூரில் வீற்றிருக்கும் பெருமாளே, எனக்குப் பர யோகம் தந்து அருள்வாய்.

விளக்கக் குறிப்புகள்

நிதியே...

நிதி ஒப்பானை நிதியில் கிழவனை...
கதி ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே..                       .             திருநாவுக்கரசர் தேவாரதம்.
  
நிதியினைப் பவளத் தூணை
நெறியினால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக்
கண்டுமுன் அண்டமாளும்)..................                        திருமங்கை ஆழ்வார்,திருகுறுத்தாண்டகம்

கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..........                        .கந்தர் அநுபூதி .

No comments:

Post a Comment

Your comments needs approval before being published