Sunday 7 July 2013

227.தோழமை கொண்டு

227
கோடைநகர்
ஸ்ரீபெரும்ப்துரிலிருந்து 10 கி.மீ தூரம்.  வல்லக்கோட்டை என தற்சமயம் அழைக்கப்படுகிறது.. முருகனின் சிலை 2 மீட்டர் உயரத்தில் சரணாகதி காட்டும் கர அமைப்புடன் இருப்பதை வேறுயெங்கும் காண முடியாதது



                   தானன தந்தன தந்த தந்தன
                   தானன தந்தன தந்த தந்தன
                   தானன தந்தன தந்த தந்தன           தனதான

தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
     ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
     சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள்           பெரியோரைத்
தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்                             
     ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்
     சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள்         தொலையாமல்
வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள் 
     நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள் 
   மானவ கந்தைமி குந்த குண்டர்கள்             வலையாலே
மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்
     தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்
     வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி               விழுவாரே
ஏழும ரங்களும் வன்கு ரங்கெனும்
     வாலியு மம்பர மும்ப ரம்பரை
     ராவண னுஞ்சது ரங்க லங்கையு             மடைவேமுன்
ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ
     சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற
    ராமச ரந்தொடு புங்க வன்திரு                   மருகோனே
கோழிசி லம்பந லம்ப யின்றக
     லாபந டஞ்செய மஞ்சு தங்கிய
     கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல                 வயலூரா 
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
     வேலனெ னும்பெய ரன்பு டன்புகழ்
     கோடையெ னும்பதி வந்த இந்திரர்           பெருமாளே.

பதம் பிரித்தல்

தோழமை கொண்டு சலம் செய் குண்டர்கள்
ஓதிய நன்றி மறந்த குண்டர்கள்
சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள் பெரியோரை

தோழமை கொண்டு = நட்பை வெளிக் காட்டி சலம் செய் = (நண்பர்களுக்கு) வஞ்சனை செய்யும் குண்டர்கள் = கீழோர் ஓதிய = போதித்த நன்றி மறந்த குண்டர்கள் = நன்றியை மறந்த கீழோர் சூழ் விரதங்கள் = அநுட்டிக்க வேண்டிய விரதங்களை கடிந்த குண்டர்கள் = விலக்கி அழித்த கீழோர் பெரியோரை = பெரியோர்களை

தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள்
ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்
சூள் உற என்பது ஒழிந்த குண்டர்கள் தொலையாமல்

தூஷண நிந்தை = வைது நிந்தித்து இகழ்ந்து பகர்ந்த குண்டர்கள் = பேசிய கீழோர் ஈவது கண்டு = ஒருவருக்கு ஈதலைப் பார்த்து தகைந்த குண்டர்கள் = (அதைத்) தடை செய்த கீழோர் சூள உற என்பது = சத்திய வார்த்தை என்பதை ஒழிந்த குண்டர்கள் = ஒழித்த கீழோர் தொலையாமல் = எப்போதும் அழிதலின்றித் தாமே.

வாழ நினைந்து வருந்து குண்டர்கள்
நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள்
மான அகந்தை மிகுந்த குண்டர்கள் வலையாலே

வாழ நினைந்த = வாழ நினைத்து. வருந்தும் குண்டர்கள் = (அதற்காக) வருந்தும் கீழோர் நீதி அறங்கள் = நீதியும் தருமமும் சிதைந்த குண்டர்கள் = அழித்த கீழோர் மான = குற்றமும் அகந்தை = அகங்காரமும் மிகுந்த குண்டர்கள் = மிகவாக உள்ள கீழோர் வலையாலே = (பாச) வலையால்.

மாயையில் நின்று வருந்து குண்டர்கள்
தேவர்கள் சொம்கள் கவர்ந்த குண்டர்கள்
வாதை நமன் தன் வருந்திடும் குழி விழுவாரே

மாயையில் நின்று = (உலக) மாயையில் நின்று வருந்தும் குண்டர்கள் = வருத்தம் அடையும் கீழோர் தேவர்கள் சொம்கள் = தேவர்களின் சொத்துக்களை கவர்ந்த குண்டர்கள் = அபகரித்த கீழோர் வாதை = வேதனைக்கு இடமாகிய நமன் தன் வருந்திடும்  = யமன் வருத்துகின்ற குழி விழுவாரே = (நரகக்) குழியில் விழுவார்கள்.

ஏழு மரங்களும் வன் குரங்கு எனும்
வாலியும் அம்பரமும் பரம்பரை
ராவணனும் சதுரங்க லங்கையும் அடைவே முன்

ஏழு மரங்களும் = மராமரம் ஏழும் வன் குரங்கு எனும் வாலியும் = வலிமை மிக்க குரங்காகிய வாலியும் அம்பரமும் = கடலும் பரம்பரை = சிறந்த பரம்பரையில் வந்த ராவணனும் = இராவணனும் சதுரங்க = (அவனுடைய) நால் வகைப் படைகளும் இலங்கையும் அடைவே = இலங்கையும்  எல்லாம் முன் = முன்பு.

ஈடு அழியும்படி சந்த்ரனும் சிவ
சூரியனும் சுரரும் பதம் பெற
ராம சரம் தொடு புங்கவன் திரு மருகோனே

ஈடு அழியும்படி = வலிமை குன்றி அழியும்படி சந்திர சிவ சூரியனும் = சந்திரனும் சிவ  சூரியனும் சுரரும் = தேவர்களும் பதம் பெற = தத்தம் பதவியில் நிலை பெற ராம சரம் தொடு = ராமசரம் என்னும் ராம மந்திரம் கூடிய அம்பைச் செலுத்திய புங்கவன் = ராம பிரானுடைய திரு மருகோனே = அழகிய மருகனே

கோழி சிலம்ப நலம் பயின்ற கலாப(ம்)
நடம் செய மஞ்சு தங்கிய
கோபுரம் எங்கும் விளங்கும் மங்கல வயலூரா

கோழி சிலம்ப = கோழி ஒலி செய்ய. நலம் பயின்ற கலாபம் = அழகு மிக்க தோகையை உடைய மயில்.நடம் செய் = நடனம் செய்கின்ற மஞ்சு தங்கிய = மேகங்கள் தங்கும் கோபுரம் எங்கும் விளங்கும் = கோபுரங்கள் எல்லா இடத்திலும் விளங்கிய மங்கல வயலூரா = மங்களகரமான வயலூரா.

கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
வேலன் எனும் பெயர் அன்புடன் புகழ்
கோடை எனும் பதி வந்த இந்திரர் பெருமாளே.

கோமள அண்டர்கள் = அழகிய தேவர்களும் தொண்டர் = தொண்டர்களும் மண்டலர் = மண்டலாதிபர்களும். வேலன் எனும் பெயர் = வேலன் என்னும் பெயரை அன்புடன் புகழ் = அன்புடன் புகழ்கின்ற கோடை என்னும் பதி வந்த = கோடைநகர் என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள இந்திரர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.

சுருக்க உரை
நண்பர்களுக்கு வஞ்சகம் செய்பவர்களும், போதித்த நன்றியை
மறந்தவர்களும், விரதங்களை அனுட்டிக்காதவர்களும், பெரியோரை இகழ்ந்து பேசுபவர்களும், பிறருக்கு ஈகை செய்வதைத் தடுப்பவர்களும்,உண்மையைப் பேசாதவர்களும், நீதியும் தருமமும் இல்லாதவர்களும், ஆணவம் மிக்கவர்களும், கடவுளர்களது சொத்தை அபகரிப்பவர்களும், கீழ் மக்கள் ஆவர். இவர்கள் யாவரும் யமனுடைய நரகக் குழியில் விழுவார்கள்.

மராமரம் ஏழும், வலிமை மிக்க குரங்காகிய வாலியும், கடலும்,
இராவணனும் அவனுடைய நான்கு படைகளும், இலங்கையும், வலிமை  குன்றி அழியும்படியும், தேவர்களும், சூரிய சந்திரர்களும் தத்தம் பதவியில் நிலை பெறவும் ஒப்பற்ற அம்பைச் செலுத்திய இராமனின் மருகனே, கோழி ஒலி செய்ய, மயில் நடமிட, உயர்ந்த கோபுரங்கள் மிகுந்த வயலூரில் வாழ்பவனே,தேவர்களும், மண்டலாதிபதிகளும் உன்னை வேலன் என்று போற்றுகின்ற கோடை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே, கீழோர்கள் நரகுக்குச் செல்லுவார்கள் என்பதை நான் உணர்வேனாக.

ஒப்புக

1 நரகில் விழவோர்கள் அட்டவணையை மற்றத் திருப்புகழ்ப் பாடல்களிலும் காணலாம்.
        மாதர்வச,இரதமான, காதிமோதி, ஓதுவித்தவர்.

2. ஏழு மரங்களும் ....
  மராமரங்கள் .. இவை கிட்கிந்தைக்கு அருகில் இருந்த ஏழு ஆச்சா மரங்கள். இவற்றை
  இராமர் ஒரு பாணத்தால் பிளந்தார்.
  வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
  ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்

  வலியதிறல் வாலி யுரமுநெ டுங்க லவையேழும்.............திருப்புகழ், விடமும்வடி.

No comments:

Post a Comment

Your comments needs approval before being published