Monday 26 August 2013

250.நிணமொடு

250
திருப்பாதிரிப்புலியூர் ( கடலூர்)

             தனதன தனன தனந்த தானன
                  தனதன தனன தனந்த தானன
                  தனதன தனன தனந்த தானன        தனதான

நிணமொடு குருதி நரம்பு மாறிய
   தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை
   நிரைநிரை செறியு முடம்பு நோய்படு           முதுகாயம்
நிலைநிலை யுருவ மலங்க ளாவது
   நவதொளை யுடைய குரம்பை யாமிதில்
   நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ      முயல்வோரும் 
உணர்விலி செபமுத லொன்று தானிலி
  நிறையிலி முறையிலி யன்பு தானிலி
   உயர்வலி யெனினுமெ னெஞ்சு தானினை       வழியாமுன்
ஒருதிரு மரகத துங்க மாமிசை
   யறுமுக மொளிவிட வந்து நான்மறை
   யுபநிட மதனை விளங்க நீயருள்                 புரிவாயே 
புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு
   விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி
   பொலமணி மகுட சிரங்கள் தாமொரு              பதுமாறிப்
புவியிடை யுருள முனிந்து கூர்கணை
   யுறுசிலை வளைய வலிந்து நாடிய                 
   புயலதி விறலரி விண்டு மால்திரு                மருகோனே
அணிதரு கயிலை நடுங்க வோரெழு
   குலகிரி யடைய இடித்து தூளெழ
   அலையெறி யுததி குழம்ப வேல்விடு             முருகோனே
அமலைமு னரிய தவஞ்செய் பாடல
   வளநகர் மருவி யமர்ந்த திசக
   அறுமுக குறமக ளன்ப மாதவர்                 பெருமாளே.

பதம் பிரித்து உரை

நிணம் ஒடு குருதி நரம்பு மாறிய
தசை குடல் மிடையும் எலும்பு தோல் இவை
நிரை நிரை செறியும் உடம்பு நோய் படு முது காயம்

நிணமொடு = மாமிசத்தோடு குருதி நரம்பு = இரத்தமும் நரம்பும் மாறிய =லந்துள்ள தசை, குடல் = சதை, குடல் (ஆகியவை) மிடையும் = நெருங்கி உள்ள எலும்பு, தோல் இவை = எலும்பும் தோலும் நிரை நிரை செறியும் = வரிசை வரிசையாக நெருங்கி உள்ள உடம்பு = இவ்வுடல் நோய் படு = நோய் உண்டாகும். முது காயம் = பழைய உடல்.

நிலை நிலை உருவ மலங்கள் ஆவது
நவ தொளை உடைய குரம்பையாம் இதில்
நிகழ் தரு பொழுதில் முயன்று மாதவம் உய ஓரும்

நிலை நிலை = அந்த அந்த நிலைகளுக்கு (வளர்ச்சிக்கு) ஏற்றவாறு. உருவம் = உருவமும் மலங்கள் = உடல் மாசுகளும் ஆவது = உண்டாவ தும் நவ தொளை உடைய = ஒன்பது தொளை களை உடையதும் குரம்பையாம் இதில் = சிறு குடிசையாகிய இந்த உடலின்நிகழ் தரு பொழுதில் = உயிர் இருக்கும் போதே. முயன்று = முயற்சி செய்து. மா = பெரிய தவம் = தவங்களை உய = உய்யும் பொருட்டு ஓரும் = உணரும்.

உணர்வு இலி செப முதல் ஒன்று தான் இலி
நிறை இலி முறை இலி அன்பு தான் இலி
உயர்வு இலி எனினும் என் நெஞ்சு தான் நினைவு அழியா முன்

உணர்விலி = உணர்ச்சி இல்லாதவன் (நான்) செப முதல் ஒன்று தானி இலி = ஜெபம் முதலான ஒரு நல்லொழுக்கமும் இல்லாதவன் நிறை இலி = ஆண்மைக் குணம் இல்லாதவன் (நான்) முறை இலி = ஒழுக்கம் இல்லாதவன் (நான்) அன்பு தான் இலி = அன்பு கூட இல்லாதவன் உயர்வு இலி = மேன்மைக் குணம் இல்லாதவன். எனினும் = (என்னிடம் பல குறைகள்) இருந்த போதிலும் என் நெஞ்சு தான் = என் மனம் நினைவு அழியா முன் = நினைவை இழப்பதற்கு முன்னரே.

ஒரு திரு மரகத துங்க மா மிசை
அறுமுகம் ஒளி விட வந்து  நான் மறை
உபநிடம் அதனை விளங்க நீ அருள் புரிவாயே

ஒரு = ஒப்பற்ற திரு = அழகிய மரகத = பச்சை நிறம் கொண்ட துங்க = உயர்ந்த மா மிசை = மயில் என்னும் குதிரையின் மேல் அறுமுகம் ஒளி விட = உனது ஆறு முகங்களும் ஒளி விட வந்து = (நீ) எதிர் வந்து நான் மறை உபநிடம் அதனை = நான்கு வேதங்களையும், உபநிடதங்களையும் விளங்க = எனக்கு விளங்கும் படி நீ அருள்  புரிவாயே = நீ அருள் புரிவாயாக.

புணரியில் விரவி எழுந்த ஞாயிறு
விலகிய புரிசை இலங்கை வாழ் பதி
பொலம் மணி மகுட சிரங்கள் தாம் ஒரு பதும் மாறி

புணரியில் = கடலில் விரவி எழுந்த = கலந்து படிந்து எழுகின்ற ஞாயிறு = சூரியன். விலகிய = (அஞ்சி) விலகும் புரிசை = மதில்களை உடைய இலங்கை வாழ் பதி = இலங்கையில் வாழ்ந்த தலைவனான இராவணனுடைய பொலம் மணி = பொன் இரத்தனங்களால் ஆன மகுட சிரங்கள் = மகுடங்ளை அணிந்திருந்த தலைகள் தாம் ஒரு பதும் = பத்தும் மாறி = நிலை மாறி (அறுந்து).

புவி இடை உருள முனிந்து கூர் கணை
உறு சிலை வளைய வலிந்து நாடிய
புயல் அதி விறல் அரி விண்டு மால்  திரு மருகோனே

புவி இடை உருள = பூமியில் உருள. முனிந்து = கோபித்து கூர் கணை = கூரிய  அம்புகள் உறு சிலை = பொருந்தியுள்ள வில்லை வளைய வலிந்து = வளைத்து. நாடிய = முயற்சி எடுத்துக் கொண்டு தேடிச் சென்ற புயல் = மேக நிறம் படைத்த அதி விறல் அரி = மிக்க வீரம் வாய்ந்த அரி, விண்டு, மால் = ஹரி, விஷ்ணு, திருமால் எனப் பெயர்கள் கொண்ட திருமாலின் திரு மருகோனே = அழகிய மருகனே.

அணி தரு கயிலை நடுங்க ஓர் எழு
குல கிரி அடைய இடிந்து தூள் எழ
அலை எறி உததி குழம்ப வேல் விடு முருகோனே

அணி தரு கயிலை = அழகுள்ள கயிலாய மலையும் நடுங்க ஓர் எழு குல கிரி அடைய ஏழு மலைகள் யாவும் இடிந்து தூள் எழ = உடைந்துப் பொடியாகவும் அலை எறி உததி = அலைகள் வீசும் கடல் குழம்ப = கலங்கவும் வேல் விடு முருகோனே = வேலைச் செலுத்திய முருகனே.

அமலை முன் அரிய தவம் செய் பாடல 
வள நகர் மருவி அமர்ந்த தேசிக
அறுமுக குறமகள் அன்ப மா தவர் பெருமாளே.

அமலை = குற்றம் இல்லாத பார்வதி முன் அரிய தவம் செய் =  முன்பு அரிய தவம் செய்த பாடல வள நகர் = பாடல வள நகராகிய திருப்பாதிரிப் புலியூரில் மருவி அமர்ந்த தேசிக = விரும்பி வீற்றிருக்கும் குருவே அறுமுக = ஆறுமுகனே குற மகள் அன்ப = குறப் பெண்ணாகிய வள்ளியின் அன்பனே மா தவர் பெருமாளே = பெரிய தவசிகளின் பெருமாளே.

சுருக்க உரை

மாமிசம், இரத்தம் இவைகளுடன் நரம்பு, சதை, எலும்பு , குடல் ஆகியவை வரிசை வரிசையாக நெருங்கி உள்ளதும், நோய்களுக்கு இடமானதுமான உடம்பு வயதுக்கு ஏற்ப உருவ, உடல் மாற்றங்களை அடையும் ஒரு குடிசை போன்றது. அது உயிருடன் இருக்கும் போதே, முயன்று, சிறந்த தவங்களைச் செய்யும் உணர்வு இல்லாதவன் நான். செபம் முதலிய நல்லொழுக்கம் இல்லாதவன். ஆண்மை அற்றவன். மேன்மைக் குணம் இல்லாதவன். இப்படி என்னிடம் பல குறைகள் இருந்த போதிலும், நான் நல்லுணர்வை இழக்கும் முன்பாக ஒப்பற்ற பச்சை மயிலின் மேல் ஏறி வந்து நான்கு வேதங்களையும், உபநிடதங்களையும் எனக்கு விளங்குமாறு நீ அருள் புரிவாயாக.

சூரியனும் அஞ்சி விலகும்படி உயர்ந்த மதில்களை உடைய இலங்கையில் வாழ்ந்த தலைவனான இராவணனுடைய பொன் மகுடங்கள் அணிந்த தலைகள் உருண்டு பூமியில் விழும்படி கணையைச் செலுத்திய மேக நிறத் திருமாலின் மருகனே, கயிலை மலை நடுங்கவும், குல கிரிகள் பொடியாகவும், கடல் கலங்கவும் வேலை விட்ட முருகனே, பார்வதி தேவி

அரிய தவம் செய்த பாடலி நகரில் வீற்றிருக்கும் ஆறு முருகனே, வள்ளியின் அன்பனே, வேதங்களை எனக்கு விளங்கும்படி சொல்லி அருளுக.

ஒப்புக

1. நினைவு அழியா முன்....
   புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி
  அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி
   அலமந்து போது ஆக அஞ்சேல் என்று                       ...               சம்பந்தர் தேவாரம்.        
 ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
 ஒக்க அடைக்கும் போது உணர மாட்டேன்...                          திருநாவுக்கரசர் தேவாரம்

2. புணரியில் விரவி எழுந்த ஞாயிறு விலகிய புரிசை இலங்கை...
தேர் இரவி உட்கி புகா முது புரத்தில் தெசாசிரனை மர்த்தித்த அரி மாயன்
.....திருப்புகழ், பாரவித.
     தவன் நிகர் இல் இரதமும் விடுக்காநகர்

     .............திருப்புகழ்,மதனதனுநிக

No comments:

Post a Comment

Your comments needs approval before being published