Saturday 19 April 2014

259.திரை வார் கடல் சூழ்



259
மயிலை


திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு

   திரிவே னுடையோ துதல்                    திகழாமே

தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ

   சுதனே திரிதேவர்கள்                    தலைவாமால்

வரைமா துமையாள்தரு மணியே குகனேயென

   அறையா வடியேனுமு                      னடியாராய்

வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு

  மகநா ளுளதோசொல்                     அருள்வாயே

இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவரு

  மிழிவா கிமுனேயிய                            லிலராகி

இருளா மனதேயுற அசுரே சர்களேமிக

   இடரே செயவேயவ                             ரிடர்தீர   

மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ              

  மதமா மிகுசூரனை                              மடிவாக

வதையே செயுமாவலி யுடையா யழகாகிய

   மயிலா புரிமேவிய                         பெருமாளே


பதம் பிரித்து உரை  


திரை வார் கடல் சூழ் புவி தனிலே உலகோரோடு

திரிவேன் உனை ஓதுதல் திகழாமே 

 

திரை வார் = அலைகள் கொண்ட கடல் சூழ் = கடலால் சூழப்பட்ட புவி தனிலே = பூமியில  உலகோரோடு = உலகத்தாரோடு  உனையே ஓதுதல் = உன்னையே ஓதி திகழாமே = புகழ்தல் இல்லாமல்  திரிவேன் = திரிகின்றவன்.

 

தின(ம்) நாளும் மு(ன்)னே துதி மனது ஆர பி(ன்)னே சிவ

சுதனே திரி தேவர்கள் தலைவா மால்

 

தின நாளும் = நாள்தோறும் முன்னே துதி = முன்னதாகத் துதிக்கும் மனது ஆர = மன நிலை நிரம்பப் பெற்று பின்னே = அதற்குப் பின் சிவ சுதனே = சிவ குமரனே திரி தேவர்கள் தலைவா = மும்மூர்த்திகளின் தலைவனே மால் = பெரிய.

 

 

வரை மாது உமையாள் தரு மணியே குகனே என

அறையா அடியேனும் உன் அடியராய்

 

வரை மாது = (இமய) மலை மாதாகிய உமையாள் தரு = பார்வதி தேவி ஈன்றருளிய மணியே = மணியே குக = குகனே என = என்று அறையா = ஓதி அடியேனும் உன் அடியராய் = அடியேனாகிய நானும் உன் அடியாராய்.

 

வழி பாடு உறுவாரோடு அருள் ஆதாரமாய் இடு  

மகா நாள் உளதோ சொ(ல்)ல அருள்வாயே

 

வழி பாடு உறுவாரோடு = வழிபாடு செய்பவர்களோடு அருளாதாரமாய் இடு = அருளன்பு கூடியவராகின்ற  மக நாள் உளதோ = விசேட நாள் ஒன்று உண்டோ? சொல்ல அருள்வாய் = சொல்லருள் புரிவாயாக.

 

இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும்

இழிவாகி மு(ன்)னே ஏய் இயல் இலராகி

 

இறை = தலைமை பூண்ட  வாரண தேவனும் = ஐராவதம் என்னும் வெள்ளை யானைக்கு உரிய தேவனாகிய இந்திரனும் இமையோரவர் ஏவரும் = பிற தேவர்கள் யாவரும் இழிவாகி = இழிவான நிலையை அடைந்து முன் = முன்பு  ஏய் இயல் இலராகி = தமது தகுதியை இழந்தவர்களாகி.

 

இருளோ மனதே உற அசுரேசர்களே மிக

இடரே செ(ய்)யவே அவர் இடர் தீர

 

இருளோ மனதே உற = மயக்க இருள் கொண்ட மனம் கொண்டவராக அசுரேசர்களே = அசுரத் தலைவர்கள் மிக = நிரம்ப இடரே செய்யவே = துன்பச் செயல்களைச் செய்து வர அவர் இடர் தீர = அந்தத் தேவர்களின் துன்பம் நீங்க.

 

மற மா அயிலே கொ(ண்)டு உடலே இரு கூறு எழ

மத மா மிகு சூரனை மடிவாக

 

மற மா அயிலே கொண்டு = வீரம் வாய்ந்த சிறந்த வேலாயுதத்தைக் கொண்டு உடலே இரு கூறு எழ = உடல் இரண்டு கூறுபட மத மா மிகு = ஆணவம் மிகுந்த சூரனை மடிவாக = சூரனை அழிவுற.

 

வதையே செ(ய்)யு மா வலி உடையாய் அழகாகிய 

மயிலாபுரி மேவிய பெருமாளே.

 

வதையே செயயு = வதை செய்த மா வலி உடையாய் = பெரிய வலிமையைக் கொண்டவனே அழகாகிய = அழகான மயிலா புரி மேவிய பெருமாளே = மயிலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

 

சுருக்க உரை

 

கடலால் சூழப்பட்ட உலகில் உன்னை ஓதிப் புகழாமல் வீணாகத் திரிகின்றவன் நான். நாள்தோறும் உன்னைத் துதிக்கும் மன நிலையைப் பெற்று, பின்னர், சிவ குமாரனே, மும்மூர்த்திகளுக்கும் தலைவனே. உமா தேவி பெற்ற மணியே. குகனே என்று ஓதி, உன்னுடைய அடியார்களுள் ஒருவனாக சேரும் சிறப்பான நாள் ஒன்று உண்டோ? சொல்ல அருளுக.

 

ஐராவதத்தின் தலைவனான இந்திரனும், மற்ற தேவர்களும்,

இழிவான நிலையை அடைந்து நிற்க, மயக்க இருள் கொண்ட அசுரத் தலைவர்கள் அவர்களுக்கு மிக்க துன்பத்தைச் செய்து வர, வீரம் வாய்ந்த வேலாயுதத்தைச் செலுத்தி, அசுரர்களின் உடல்களைப் பிளந்தவனே, சூரனை அழித்த வலிமையைக் கொண்டவனே, மயிலையில் வீற்றிருப்பவனே. நான் உன் அடியார்களுடன் சேரும் நாள் கிட்டுமோ?     

விளக்கக் குறிப்புகள்

 . திரி மூர்த்திகள் = மும் மூர்த்திகள்.

ஒப்புக
மதமா மிகு சூரனை மடிவாக...
    
சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருது குரிசில் எனப்பல...திருமுருகாற்றுப்படை

குகனே – அணோரணியான் மஹதோ மஹியானாத்மா குஹாயாம் –     தைத்திரீய உபநிஷத்

  


No comments:

Post a Comment

Your comments needs approval before being published