Thursday 29 December 2016

295. கலைமேவு

295
மதுரை


                    தனதான தானத்     தனதான


 

கலைமேவு ஞானப்          பிரகாசக்

     கடலாடி ஆசைக்             கடலேறிப்

பலமாய வாதிற்             பிறழாதே

     பதிஞான வாழ்வைத்        தருவாயே

மலைமேவு மாயக்           குறமாதின்

     மனமேவு வாலக்              குமரேசா

சிலைவேட சேவற்            கொடியோனே

     திருவாணி கூடற்           பெருமாளே

 

 

பதம் பிரித்தல்

  

கலை மேவு ஞான பிரகாச

கடல் ஆடி ஆசை கடல் ஏறி

 

கலை மேவும் கலைகள் எல்லாவற்றையும் தன்னுள் அடங்கியுள்ள ஞானப் பிரகாச ஞான ஒளியான கடல் ஆடி கடலிடையே திளைத்துக் குளித்து கடல் ஏறி - (மூவாசை என்னும்) கடலைக் கடந்து


பலம் ஆய வாதில் பிறழாதே

பதி ஞான வாழ்வை தருவாயே

பலம் ஆய வலிமை வாய்ந்த வாதில் - (சமய) வாதங்களில் பிறழாதே மாறுபட்டுக் கிடக்காமல் பதி ஞான வாழ்வை - இறைவனைப் பற்றிய சிவ ஞான வாழ்வை தருவாயே தந்து அருளுக

 

 

மலை மேவு மாய குறமாதின்

மனம் மேவு வால குமரேசா

மலை மேவு - (வள்ளிமலையில் வாழ்கின்ற மாயக் குற மாதின் ஆச்சரியத் தோற்றத்தைக் கொண்ட குறப் பெண்ணாகிய வள்ளியின் மனம் மேவு மனத்தில் வீற்றிருக்கும் வால இளமையான குமரேசா குமரேசனே

 

சிலை வேட சேவல் கொடியோனே

திருவாணி கூடல் பெருமாளே

 

சிலை - (பொய்யா மொழிப் புலவர் பொருட்டு) வில்லேந்திய வேட வேடனாய் விளங்கியவரே சேவல் கொடியோனே சேவற் கொடியைக் கொண்டவரே திருவாணி கூடல் பெருமாளே இலக்குமியும் சரஸ்வதியும் விளங்கும் கூடல் (மதுரை) நகர்ப் பெருமாளே

 

 

சுருக்க உரை

 

எல்லா கலைகளையும் தன்னுள் அடங்கியிருக்கும் ஞான ஒளியே மூவாசைகளையும் கடந்து சமய வாதங்களில் மாறுபட்டுக் கிடக்காமல், இறைவனைப் பற்றிய சிவஞான வாழ்வைத் தந்து அருளுக  

 

வள்ளி மலையில் வாழும் வள்ளி நாயகியின் மனத்தில் வீற்றிருப்பவனே! வில்லேந்திய வேடரே! மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே! எனக்குப் பதி ஞான வாழ்வைத் தந்து அருளுக

 

விளக்கக் குறிப்புகள்

 

 

சிலை வேட  - பொய்யாமொழி புலவரை குறிக்கும்

 

பொய்யாமொழிப் புலவர் என்னும் பெரும் புலவர் ஒருவர் அகத்துறையில் தன்னைப் போலப் பாடுவார் யாரும் இல்லை என்று எண்ணம் கொண்டிருந்தார்.    ஒரு நாள் பொய்யா மொழிப் புலவரின் முன் முருகன் தோன்றினான். “ புலவரே, உம் தமிழால் எம்மைப் பாடுவீராக!“ என்று கேட்க, புலவரோ, “கோழியைப் பாடிய இந்த என் வாயால் அதன் குஞ்சைப் பாடுவேனோ? அப்பனைப் பாடிய வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ?” என்று சொல்லி மறுத்துவிட்டார். அவ்வளவில் மறைந்தான் முருகன். நாட்கள் சென்றன. வைகைக் கரையில் இருந்த தஞ்சாக்கூர் என்னும் ஊரில் தஞ்சை வாணன் என்பவர் வசித்து வந்தார். அவரைக் காண வேண்டிச் சென்றார் பொய்யாமொழிப் புலவர். வழியில் பாலை நிலக் காடுகள் இருந்தன. அந்தக் காட்டைக் கடந்தே செல்லவேண்டும். புலவர் சென்று கொண்டிருந்த போது, ஒரு வேடன் அவரை வழி மறித்தான். இடக்கையில் வில், வலக்கையில் அம்பு, தோளில் அம்புறாத்தூணி எனக் காட்சி அளித்தான் வேடன். இளைஞன். வசீகரமான முகம். முகத்தின் காந்தி பிரமிக்க வைத்தது. அவன் நிறமோ, செக்கச் சிவந்த சூரியனை ஒத்திருந்தது. இளம் சூரியனோ  எனக் காட்சி அளித்த அந்த வேடன் தன் கண்களை உருட்டி விழித்துப் பயம் காட்டியதைக் கண்டார் புலவர். தம்மிடம் பொருள் ஏதும் இல்லை எனத் தெளிந்தார். வேடனும் புரிந்து கொண்டான் அவரிடம் பொருளில்லை என்பதையும் அவர் ஒரு புலவர் என்றும் அறிந்து கொண்டான்

 
புலவனா நீ? உன்னிடம் பொருள் இல்லையா? சரி, போகிறது, என் மேல் ஒரு பாடல் பாடு!” என்றான் வேடன். புலவர் சற்றுத் தயங்கினாலும், இவனிடமிருந்து தப்பவேண்டி, “சரியப்பா, உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் முட்டை!” என்று பதில் வந்தது.. பாடும் பாட்ல அகதுறையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

புலவரும் பாடினார். பாட்டின் பொருள் 

 முட்டை என்னும் பெயருள்ள இந்த வேடன் மின்னல் போல் மின்னும் கூர்மையான வேலை வைத்திருக்கிறான். இந்த அடர்த்தியான கருவேலங்காட்டுக்குள்ளே செல்லுபவர்கள் முட்டையின் எதிரிகளாய்த் தான் இருக்க முடியும். சூரிய வெப்பத்தினால் இந்தக் காட்டுக் கள்ளிச் செடிகள் எல்லாம் தீப்பிடித்து எரியும். அத்தகைய இந்தக் காட்டுக்குள் பேதையும், இளம்பெண்ணுமாகிய என் மகள் தன் தலைவனோடு செல்ல இசைந்தாளே! என்பது இதன் பொருள்.

பாடலைக் கேட்ட வேடன் பெரிதாகச் சிரித்தான். “புலவா, உன் பாட்டில் உண்மை ஏதுமே இல்லை, ஆனால் நீ பொய்யாமொழி என அறிமுகம் செய்து கொண்டாயே? தண்ணீர் இல்லாமல் வெப்பம் தாங்காமல் கள்ளிச் செடிகள் காய்ந்துபோய்த் தீப்பிடிக்கும் நிலையில் இருக்கும்போது அங்கே கருவேல முட்கள் மட்டும் எப்படித் தாக்குப் பிடிக்கும்? என்ன புலவன் நீ? இதோ, நான் பாடுகிறேன், பார்!” என்று சொல்லிவிட்டு வேடன் பாடலை மாற்றிப் பாட

 

 “விழுந்த துளி யந்தரத்தே வேமென்றும் வீழின்

எழுந்து சுடர்சுடு மென் றேங்கிச்செழுங்கொண்டல்

பொய்யாத கானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே

பொய்யா மொழிப் பகைஞர் போல்

 

இந்தப் பாடலைக் கேட்ட பொய்யாமொழிப் புலவர் பாடலின் அருமை கண்டு திகைத்துப் போனார்..

முருகனும் அவர் முன் தோன்றி  முட்டையை பாடமாட்டேன் என்று சொன்ன நீ பாடி விட்டாயே எனவும்  எதிரில் இருப்பது குமரக் கடவுளே என்பதை உணர்ந்து அவரைத் துதித்தார். முருகன் அவர் நாவில் வேல் ஊன்றி அருள் பாதித்ததாக வரலாறு

 

மாயக் குறமாதின் மனம் மேவு

வனசர் கொம்பி னைத்தேடி யொருவேட

வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில்

மறவர் குன்றி னிற்போன பெருமாளே  --- திருப்புகழ் களவுகொண்டு

 

Rev 2023




No comments:

Post a Comment

Your comments needs approval before being published