Friday 30 December 2016

299.அணிசெவ்வியார்

299

வடதிருமுல்லைவாயில்
 
         
தனதைய தானன தானன
            தனதைய தானன தானன
            தனதைய தானன தானன           தனதான
 
அணிசெவ்வி யார்திரை சூழ்புவி
     தனநிவ்வி யேகரை யேறிட
     அறிவில்லி யாமடி யேனிட            ரதுதீர
அருள்வல்லை யோநெடு நாளின
     மருளில்லி லேயிடு மோவுன
     தருளில்லை யோஇன மானவை   யறியேனே
குணவில்ல தாமக மேரினை
     யணிசெல்வி யாயரு ணாசல
     குருவல்ல மாதவ மேபெறு             குணசாத
குடிலில்ல மேதரு நாளெது
     மொழிநல்ல யோகவ ரேபணி
     குணவல்ல வாசிவ னேசிவ           குருநாதா
பணிகொள்ளி மாகண பூதமொ
     டமர்கள்ளி கானக நாடக
     பரமெல்லி யார்பர மேசுரி          தருகோவே
படரல்லி மாமலர் பாணம
     துடைவில்லி மாமத னாரனை
     பரிசெல்வி யார்மரு காசுர            முருகேசா
மணமொல்லை யாகிந காகன
     தனவல்லி மோகன மோடமர்
     மகிழ்தில்லை மாநட மாடின       ரருள்பாலா
மருமல்லி மாவன நீடிய
     பொழில்மெல்லி காவன மாடமை
     வடமுல்லை வாயிலின் மேவிய   பெருமாளே
 
பதம் பிரித்து உரை
 
அணி செவ்வியார் திரை சூழ் புவி
தன(ம்) நிவ்வியே கரை ஏறிட
அறிவில்லியாம் அடியேன் இடர் அது தீர

அணி செவ்வியார் - அழகில் செம்மை வாய்ந்த மாதர்கள் திரை சூழ் - கடல் சூழ்ந்த புவி - பூமி தனம் - பொன் (பெண், மண்,பொன்) நிவ்வியே - (ஆகிய மூவாசைகளைக்) கடந்து கரை ஏறிட - கரை ஏறுவதற்கு அறிவில்லியாம் - அறிவில்லாவதவனாகிய அடியேன் - அடியேனுடைய இடர் அது தீர - துயர் தீருதற்கு வேண்டிய

அருள் வல்லையோ நெடு நாள் இனம்
மருள் இல்லிலே இடுமோ உனது
அருள் இல்லையோ இனமானவை அறியேனே

அருள் வல்லையோ - திருவருளை வலிய அருள்வாயோ நெடு நாள் - (அப்படி யன்றி) நெடுங் காலத்துக்கு இன - கூட்டமான மருள் இல்லில் - இருள் வீடாகிய பிறவிகளிலே இடுமோ - கொண்டு விடுமோ உனது அருள் இல்லையோ - உனது திருவருள் என் மீது இல்லையோ? இனமானவை - உன்னோடு சம்பந்தப் பட்ட அடியார் கூட்டத்தை அறியேனே - அறிந்தேன் இல்லையோ?


குண வில் அதா மக மேரினை
அணி செல்வி ஆய் அருணாசல
குரு வல்ல மாதவமே பெறு குண சாத

குண வில் அதா(க) - சீரான வில்லாக மக மேரினை - பெரிய மேரு மலையை அணி செல்வி - தரித்த செல்வி ஆய் - தாய் (பார்வதியுடன் கூடிய)அருணாசல குரு - அண்ணாமலையார்க்குக் குருவாக வந்தவனே வல்ல- திண்ணிய மாதவமே பெறும் குண சாத - பெரிய தவ நிலையைப் பெறும் படியான நற் குணத்தோடு கூடிய சாதிப் பிறப்பில் கிடைத்த
 

குண வல்லவா சிவனே சிவ குரு நாதா
குடில் இல்லமே தரு நாள் எது
மொழி நல்ல யோகவரே பணி

குடில் இல்லமே - உடலாகிய வீட்டைதரு நாள் எது - எனக்குத் தருகின்ற நாள் எது? மொழி - கூறுவாயாக நல்ல யோகவரே பணி - நல்ல யோகிகள் பணிகின்ற குண வல்லவா - நற்குணம் வாய்ந்தவனே சிவனே - சிவபெருமானே சிவ குரு நாதா - சிவனுக்குக் குரு மூர்த்தியே

பணி கொள்ளி மா கண பூதம் ஒடு
அமர் கள்ளி கானக நாடக
பர மெல்லியார் பரமேசுரி தரு கோவே

பணி கொள்ளி - பாம்பை ஆபரணமாகக் கொண்டவள் மா கண பூதம் ஒடு - பெரிய கணங்களான பூதங்களோடு அமர் - அமர்ந்துள்ள கள்ளி - திருடி கானகம் - சுடுகாட்டில் நாடக - நடனம் செய்கின்ற பரம் மெல்லியார் - மேலான மென்மை வாய்ந்தவள் பரமேசுரி - பரமேசுரி தரு கோவே - பெற்ற தலைவனே

படர் அல்லி மா மலர் பாணமது
உடை வில்லி மா மதனார் அ(ன்)னை
பரி செல்வியார் மருகா சுர முருகேசா
 
படர் அல்லி மா மலர் - நீரில் படரும் அல்லி மலராகிய தாமரை, நீலோற்பவம் ஆகிய சிறந்த மலர் பாணம் அது உடை வில்லி- பாணங்களை உடைய வில்லை ஏந்தும் மன்மதனுடைய அ(ன்)னை - தாய் பரி செல்வியார் - பெருமை வாய்ந்த செல்வியாராகிய இலக்குமியின்மருகா- மருகனே சுர முருகேசா - தெய்வ முருகேசனே


மணம் ஒல்லையாகி நகா கன
தன வல்லி மோகனமோடு அமர்
மகிழ் தில்லை மா நடம் ஆடினர் அருள் பாலா

மணம் ஒல்லையாகி - விரைவில் திருமணம் செய்து கொண்டு நகா கன தன வல்லி - மலை போன்ற கொங்கைகள் உடைய பார்வதி மோகனமோடு அமர் - வசீகரிப்புடன் அமர்ந்து வாழும் தில்லை - சிதம்பரத்தில் மா நடம் ஆடினர் - பெரிய நடனத்தை ஆடிய சிவபெருமான் அருள் பாலா - அருளிய குழந்தையே

மரு மல்லி மா வனம் நீடிய
பொழில் மெல்லி கா வனம் மாடு அமை
வடமுல்லை வாயிலின் மேவிய பெருமாளே
 

மரு மல்லி - வாசனையுள்ள மல்லிகை மா வனம் நீடிய - பெருங்காடாக வளர்ந்துள்ள பொழில் - சோலையையும் மெல்லி - மென்மை வாய்ந்த கா - பூந்தோட்டங்களும் வனம் - நீர் நிலைகளும் மாடு அமை - பக்கங்களில் சூழ்ந்து அமைந்துள்ள வட முல்லை வாயிலில் - வடமுல்லை வாயிலில் மேவிய பெருமாளே - வீற்றிருக்கும் பெருமாளே
 
சுருக்க உரை
 
பெண், பொன், மண் ஆகிய மூவாசைகளைக் கடந்து கரை ஏற அறிவில்லாதவனாகிய அடியேனுடைய துயர் தீர உன் திருவருளைத் தரமாட்டாயோ? இருள் வீடாகிய பிறவிகளில் என்னை இடுவையோ? அடியார் கூட்டத்தை அறிய மாட்டேனோ?
 
பார்வதி தேவியுடன் கூடிய அண்ணாமலையாருக்குக் குருவே, பெரிய தவ நிலையோடு கூடிய நற் பிறப்பை எனக்குத் தருவதும் ஒரு நாளோ? கணங்களேடு ஆடிய பரமேசுரி பெற்றத் தலைவனே, மலர்ப் பாணங்களை உடைய மன்மதனின் தாய், லக்க்குச்ன்க்ஷ்மியின் மருகனே, மலை போன்ற கொங்கைகளை உடைய பார்வதியுடன் வனப்புடன் தில்லையில் அமர்ந்து பெரிய நடனத்தை ஆடிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, சோலைகளும், நீர் நிலைகளும் சூழ்ந்த வடமுல்லை வாயிலில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் கரை ஏறிட அருள் புரிய வேண்டும்
 
விளக்கக் குறிப்புகள்
 
1 இனமானவை யறியேனே
அடியாரொடு
சேர்ப்பாயலை யோவுன தாரரருள்---                   திருப்புகழ்,கார்ச்சார்குழ  

2 குணவில்ல தாமக மேரினை
மேருவைத் தேவி தரித்தது
கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி---                       திருப்புகழ், பரிமளமிக

பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ர மயில்
புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியல்
புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி லுறமேவும் ---              திருப்புகழ், கருகியறி

3 பணிகொள்ளி மாகண
கழலும் வண்சிலம்பும் ஒலி செய கான் இடைக் கணம் ஏத்த ஆடிய
அழகன் என்று எழுவார் ---                                       ஞானசம்பந்தர் தேவாரம்
படை ஆர் பூதம் சூழப் பாடல் ஆடலார் ---                      ஞானசம்பந்தர் தேவாரம்

4 அமர் கள்ளி கானக நாடக
உள்ளத் திதயத்துவள்ளற் றிருவின் வயிற்றினுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே---                                      திருமந்திரம்
 
 


1 comment:

  1. உங்களின் மீதி பாடல்களின் விளக்கத்தை கேட்க காத்திருக்கிறேன்

    ReplyDelete

Your comments needs approval before being published