Saturday 18 August 2012

4. நினது திருவடி


நினது திருவடி சத்திம யிற்கொடி 
    நினைவு கருதிடு புத்திகொ டுத்திட 
    நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு        நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
    நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
    நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும்              இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
    மகர சலநிதி வைத்தது திக்கர
    வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை               வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு   
    வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
    வனச பரிபுர பொற்பத அர்ச்சனை              மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
    சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
    திரளும் உறுசதை பித்தநி ணக்குடல்          செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்   
    நிரைய அரவநி றைத்தக ளத்திடை
    திமித திமிதிமி மத்தளி டக்கைகள்                செகசேசே
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்   
    துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
    டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில்           எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட      
    இரண பயிரவி சுற்றுந டித்திட   
    எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள்             பெருமாளே.
 -004 நினதுதிருவடி

பதம் பிரித்தல்

நினது திருவடி சத்தி மயில் கொடி
நினைவு கருதிடு புத்தி கொடுத்திட 
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன்

நினது திருவடி = (முருகா) உன்னுடைய திருவடி சத்தி மயில் கொடி = வேல், மயில், சேவல் (இவைகளை) நினைவு கருதிடு = நினைவில் கருதும் புத்தி கொடுத்திட = அறிவை நான் பெறுதற்கு நிறைய செய் = நிரம்பச் செய்யப்பட்ட அமுது = அமுது. முப்பழம் = மூன்று வகையான பழங்கள் அப்பமும் = அப்பமும் நிகழ் = பொருந்திய பால் தேன் = பால், தேன்.

நெடிய வளை முறி இக்கொடு லட்டு கம் 
நிற வில்  அரிசி பருப்பு அவல் எள் பொரி
நிகர் இல் இனி கதலி  கனி வர்க்கமும் இளநீரும்

நெடிய வளை முறி = நீண்டு வளைந்த முறுக்கு இக்கு ஒடு = கரும்புடன் லட்டு = லட்டு கம் நிற வில் அரிசி = நிறமும் ஒளீயும் உள்ளஅரிசி பருப்பு அவல் எள் பொரி = அரிசி, பருப்பு, எள், பொரி நிகர் இல் = ஒப்பில்லாத  இனி = இனிய. கதலிக் கனி வர்க்கமும் = வாழைப்பழ வகைகளும் இள நீரும் = இள நீரும்.

மனது மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு  
மகர சலநிதி வைத்த துதி கர   
வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக

மனது மகிழ்வொடு = மன மகிழ்ச்சியுடன் தொட்ட = உண்ணும். கரத்து = கைகளையும்  ஒரு = ஒப்பற்ற  மகர சலநிதி வைத்தமகர மீன்கள் உள்ள கடலில் வைத்த துதிக் கர = துதிக்கையையும் உடைய வளரும் கரி முக = வளரும் யானை முகத்து ஒற்றை மருப்பனை = ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை  வலமாக = வலம் வந்து.

மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு  
வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு  
வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே

மருவு = பொருந்திய. மலர் புனை = மலர் கொண்டு (வழிபட்டும்)
தொத்திர சொல் கொடு = (சிறப்பித்துக் கூறும்) துதிச் சொற்களைக் கொண்டு (துதித்தும்) வளர் கை = தூக்கிய கைகளால். குழை பிடி = காதைப் பிடித்தும். தொப்பண குட்டொடு = தோப்பணம் குட்டு முதலின செய்தும். வனச = (அவருடைய) தாமரை போன்ற பரிபுர பொன் பதம் = சிலம்பு அணிந்த அழகிய பாதங்களீல். அர்ச்சனை மறவேனே = அர்ச்சனை செய்வதை நான் மறவேன்.

தெனன தெனதென தெத்தென அன பல    
சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல்  
திரளும் உறு சதை பித்த(ம்) நிண குடல் செறி மூளை
தெனன ..... என = இவ்வாறான ஒலி செய்யும் பல சிறிய அறுபதம் = பல சிறிய ஈக்கள். மொய்த்த = மொய்க்கும். உதிரப் புனல் = இரத்த நீர். திரளும் உறு சதை = திரண்டுள்ள சதைகள். பித்த நிணக் குடல் = பித்த மாமிசக் குடல். செறி மூளை = நெருங்கிய மூளை.

செரும உதர நிரப்பு(ம்) செரு குடல்   
நிரைய அரவ நிறைத்த களத்து இடை  
திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே

செரும = நிரம்பிய. உதர = அவ்வயிற்றில் நிரப்பு = நிறைந்து செருக் குடல் = மிக்க குடல் நிரைய = வரிசைகள் அரவ(ம்) நிறைத்த = ஒலி (இவைகள்) நிறைந்த களத்திடை = போர்க் களத்தில் திமித திமிதிமி மத்தள(ம்) = திமித என்று ஒலிக்கும் மத்தளம். இடக்கைகள் = இடக்கை என்னும் வாத்தியம் செகசேசே எனவே = என்று ஓசை செய்ய.

எனவே துகு துகு துத்தென ஒத்துகள் 
துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட   
டிமுட டிமு டிமு டிட்டிம் என தவில் எழும் ஓசை

துகு துகு துத்து என = என்று ஓசையுடன் ஒத்துகள் = ஊது குழலுடன்
துடிகள் = உடுக்கைப் பறைகள் இடி மிக = இடி என ஒத்து முழக்கிட = மிக ஒத்து முழங்க  டிமுட ...எனத் தவில் = என்றபடி மேள வகைகள் எழும் ஓசை = ஓசைகள் எழ

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட   
இரண பயிரவி சுற்று நடித்திட   
எதிரு நிசிசரரை பெலி இட்டு அருள் பெருமாளே. 

இகலி = ஒன்றோடொன்று பகைத்த அலகைகள் = பேய்கள் கைப்பறை கொட்டிட = கைப்பறைகளைக் கொட்ட இரண பயிரவி = ரண பயிரவி என்னும் தேவதைகள்  சுற்று நடித்திட = சுற்றிக் கூத்தாட எதிரும் நிசிசரரை = எதிர்த்து வந்து அசுரர்களை பெலி இட்டு அருள் பெருமாளே = அழித்தருளிய பெருமாளே.

சுருக்க உரை

முருகா, உனது திருவடி, வேல், மயில் சேவல்  முதலிவற்றை நான் கருத்தில் நினைவு கொள்ளும்படி, அமுது, முக்கனி, முதலிவற்றை மகிழ்ச்சியுடன், துதிக்கையும், ஒற்றைக் கொம்பையும் உடைய விநாயகப் பெருமான் உண்ணும்படி வைத்து, காதைப் பிடித்து, தோப்பணமும் குட்டும் இட்டு, அவருடைய தாமரைத் திருவடியை அரச்சனை செய்வதை நான் மறவேன்.

ஈக்கள் மொய்க்கும் இரத்தம், குடல் முதலிவை நிறைந்த போர்க் களத்தில், மத்தளம், இடக்கை, ஊது கொம்புகள், உடுக்கை, பறைகள் முதலிய வாத்தியங்கள் பேரொலி செய்ய, அதற்குத் தக்கபடி, பேய்கள் கைப்பறையைக் கொட்டவும், பயிரவி என்னும் தேவதைகள் கூத்தாடவும், எதிர்த்து வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த பெருமாளே. உன் திருவடியை நான் எப்போதும் கருதும் படிக் கணபதியை அரச்சிப்பதை மறவேன்.


விளக்கக் குறிப்புகள்

சிறிய அறு பதம் = சிறிய ஆறு கால்களைக் கொண்ட ஈக்கள்.
இப்பாடல் கணபதிக்குத் துதியாக அமைந்தது. இந்த பாடலின் விளக்கத்தை கட்டுரை பகுதியில்  ‘வனச பரிபுத அர்ச்சனை’  என்ற தலைப்பில் பார்கவும் http://thiruppugazhamirutham.shutterfly.com/.
மகர சலநிதி வைத்த துதிக் கர....
திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது மத்தாகிய மந்தர மலை அழுந்த, திருமால் அதை
ஆமை உருவெடுத்து முதுகில் தாங்கினார். அதனால் இறுமாப்பு உற்று அவர் கடலைக்
கலக்க, சிவபெருமான் ஏவலால் விநாயகர் அந்த ஆமையை அடக்கிய போது தமது
துதிக்கையால் கடல் நீரெல்லாம் உறிஞ்சினார்.


No comments:

Post a Comment

Your comments needs approval before being published