Wednesday 25 June 2014

266.நீ தான்

266
திருவாரூர்

தானானத் தனதானா தானானத் தனதானா

நீதானெத் தனையாலும்  நீடுழிக் க்ருபையாகி
மாதானத் தனமாக மாஞானக் கழல்தாராய்
வேதாமைத் துனவேளே வீராசற் குணசீலா
ஆதாரத் தொளியானே ஆரூரிற் பெருமாளே.

பதம் பிரித்து உரை

நீ தான் எத்தனையாலும் நீடுழி க்ருபையாகி 

நீ தான் = (முருகா), நீ தான் எத்தனையாலும் =
எல்லா வகைகளிலும் நீடுழி = நீண்ட ஊழிக்
காலம் வரையில் க்ருபையாகி = அருள்
கூர்ந்தவனாகி.

மா  தான தனமாக மா ஞான கழல் தாராய் 

மா தான = சிறந்த தானப் பொருளாக மா ஞான =
மேலான ஞான பீடமாகிய கழல் தாராய் = உனது
திருவடியைத் தந்து அருள்வாய்.

வேதா மைத்துன வேளே வீரா சற்குண சீலா

வேதா = பிரம்மாவின் மைத்துன வேளே =
மைத்துனனாகிய செவ்வேளே வீரா = வீரனே சற்
குண சீலா = சற்குணம் கொண்ட மேலோனே

ஆதாரத்து ஒளியானே ஆரூரில் பெருமாளே.

ஆதாரத்து = ஆறு ஆதாரங்களிலும் ஒளியானே =
ஒளியாய் விளங்குபவனே ஆரூரில் பெருமாளே =
திருவாரூரில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

முருகனே, நீ எல்லா வகைகளிலும் என் மீது ஊழிக் காலம் வரையில் அருள் கூர்ந்தவனாகி இருப்பவன். சிறந்த கொடைப் பொருளாக இருப்பவன். உனது மேலான ஞான பீடமாகிய திருவடியைத் தந்து அருளுக. பிரமனுக்கு மைத்துனனாகிய செவ்வேளே, வீரனே, மேன்மை குணம் படைத்தவனே, ஆறு ஆதாரங்களிலும் ஒளியாய் விளங்குபவனே, திருவாரூரில் உறையும் பெருமாளே எனக்கு உன் திருவடியைத் தாராய்.

விளக்கக் குறிப்புகள்

1.  ஆதாரத்து ஒளியானே....
 
ஷடாதாரம் = ஆறு ஆதாரங்கள்.
 
     நீடார் சடாத ரத்தின் மீதே பராப ரத்தை
     நீகாணெ ணாவ னைச்சொல் அருள்வாயே.                      ... நாவேறுபாம

2. வேதா = பிரமன் (திருமாலுக்கு மகன்). முருகவேள் = திருமாலுக்கு
    மருமகன். ஆதலால் முருகன் பிரமனின் மைத்துனன்.

3. ஞானக் கழல் தாராய்...

தொண்டர்கண் டண்டி மொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானம் எனும் தண்டையம்  புண்டரிகம் தருவாய்....                          கந்தர் அலங்காரம்


No comments:

Post a Comment

Your comments needs approval before being published