Wednesday 14 December 2016

287. அஞ்சுவிதபூத

287
நிம்பபுரம்
பெல்லாரி ஹோஸ்பெட் மார்கத்தில் ஹம்பிக்கு அருகில் இருக்கும் நிம்மபுரா என்பதே நிம்பபுரம் வலையப்பட்டி கிருஷ்ணன்.
நிம்பபுரம் வேப்பூராக இருக்கலாம் - செங்கலவராயப்பிள்ளை
 
         தந்த தனதான தந்த தனதான
          தந்த தனதான      தனதான
 
    அஞ்சு விதபூத முங்க ரணநாலு
        மந்தி பகல்யாது                    மறியாத
     அந்த நடுவாதி யொன்று மிலதான
        அந்த வொருவீடு                பெறுமாறு
     மஞ்சு தவிழ்சார லஞ்ச யிலவேடர்
        மங்கை தனைநாடி                 வனமீது
     வந்த சரணார விந்த மதுபாட
        வண்ட மிழ்விநோத           மருள்வாயே
     குஞ்ச ரகலாப வஞ்சி யபிராம
        குங்கு மபடீர                      வதிரேகக்
     கும்ப தனமீது சென்ற ணையுமார்ப
        குன்று தடுமாற                 இகல்கோப
     வெஞ்ச மரசூர னெஞ்சு பகவீர
        வென்றி வடிவேலை         விடுவோனே
     விம்ப மதில்சூழ நிம்ப புரவாண
       விண்ட லமகீபர்              பெருமாளே.
 
பதம் பிரித்தல்
 
அஞ்சு வித பூதமும் கரணம் நாலும்
அந்தி பகல் யாதும் அறியாத
அஞ்சு வித பூத - மண், நீர், தீ, காற்று, விண் எனப்படும் ஐந்து பூதங்களும் கரணம் நாலும் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்படும் நான்கு கரணங்களும் அந்த பகல் யாதும் அறியாத - இரவு பகல் யாதும் அறியாத

அந்த நடு ஆதி ஒன்றும் இலதான
அந்த ஒரு வீடு பெறுமாறு

அந்தம் நடு ஆதி ஒன்றும் இலதான - முடிவு, நடு, முதல் ஒன்றும் இல்லாததான அந்த ஒரு - அந்த ஒப்பற்ற
வீடு பெறுமாறு - வீட்டின்பத்தைப் பெறுமாறு

மஞ்சு தவிழ் சாரல் அம் சயில வேடர்
மங்கை தானை நாடி வனம் மீது

மஞ்சு தவழ் - மேகஙகள் தவழ்கின்றதும் சாரல் அம் சயில வேடர்- குளிர்ந்த காற்று வீசுவதும் ஆன அழகிய மலையில் வாழும் வேடர்களின் மங்கை தனை நாடி - பெண்ணாகிய வள்ளியை விரும்பி
வனம் மீது - (வள்ளி மலைக்) காட்டில்

வந்து சரணார விந்தம் அது பாட
வண் தமிழ் விநோதம் அருள்வாயே

வந்து சரணாரவிந்தம் அது பாட - வந்து சேர்ந்த (உனது) திருவடித் தாமரைகளைப் பாடவண் தமிழ் விநோதம் - (அடியேனுக்கு) வண்மை மிக்கத் தமிழின் அற்புத அழகை அருள்வாயே - அருள்வாயாக.

குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம
குங்கும படீர அதிரேக

குஞ்சரம் - யானை வளர்த்தவளும்கலாபம் - மயில் போன்ற சாயல் உடையவளும் ஆகிய வஞ்சி - பெண்ணான (தேவசேனையின்) அபிராம குங்கும - அழகிய செவ்வைச் சாந்தும். படீரம் - சந்தனமும் அதிரேகம் - மிகுதியாகக் கொண்டுள்ள

கும்ப தன(ம்) மீது சென்று அணையும் மார்ப
குன்று தடுமாற இகல் கோப

கும்ப தனம் மீது - குடம் போன்ற கொங்கையின் மேல் சென்று அணையும் மார்ப - பாய்ந்து அணைகின்ற மார்பனே குன்று தடுமாற - கிரௌவஞ்ச மலை தடுமாற்றம் அடையும்படி இகல் கோப - பகைமையும் கோபமும் கொண்டு.

வெம் சமர சூரன் நெஞ்சு பக வீர
வென்றி வடிவேலை விடுவோனே

வெம் - கொடிய. சமர சூரன் - போர் செய்த சூரனுடைய நெஞ்சு பக - நெஞ்சு பிளவுபட வீர வென்றி வடி வேலை - வீரம் வாய்ந்த வெற்றி தரும் கூரிய வேலை
விடுவோனே - செலுத்தியவனே

விம்ப மதில் சூழ நிம்பபுர வாண
விண்டல மகீபர் பெருமாளே.
 

விம்ப - ஒளி பெருந்திய மதில் சூழ - மதில் சூழ்ந்துள்ள நிம்பபுர வாண - நிம்பபுரம் என்னும் ஊரில் வாழ்கின்ற பெருமாளே விண் தலம் மகீபர் பெருமாளே - விண்ணுலகத்து அரசர்களுக்குப் பெருமாளே.
 
சுருக்க உரை
 
ஐந்து பூதங்களும், நான்கு கரணங்களும், இரவு பகல் யாதும், ஆதி, நடு, முதல் ஆகியவையும் இல்லாததுமான அந்த ஒப்ற்ற வீடு பேற்றை நான் பெறுமாறு, வேடர் பெண்ணான வள்ளியை விரும்பி வள்ளி மலைக் காட்டுக்கு வந்த உன் திருவடிகளைப் பாட வண் தமிழை எனக்குத் தந்தருள்க.
 
யானையால் வளர்க்கப்பட்டவளும், மயில் போன்ற சாயல் உடையவளும் ஆகிய தேவ சேனையை அணைபவனே, கிரௌவஞ்ச மலை தடுமாறவும், சூரனுடைய நெஞ்சு பிளவுபடவும் கோபத்தோடு வேலைச் செலுத்தியவனே, நிம்பபுர்தில் வாழ்பவனே, தேவேந்திரர்களுக்குப் பெருமாளே. நான் வீடு பேறு அடையுமாறு வண் தமிழ்ப் புலமையை அருள்வாயாக.
 
விளக்கக் குறிப்புகள்
 
கரணம் நாலும் .....

சித்தம் - இஃது யாதாக இருக்கும் என்று சிந்திக்கும். மனம் - இஃது இன்னது என்று பற்றும். அகங்காரம் - இஃது ஆமோ அன்றோ, இதனை இன்னதெனத் தெளிவேன் நான் என்று தெளிவின்றி உழலும். புத்தி - இறுதியில் புத்தி இஃது இன்னது எனத் தெளிவுறும்.    சிந்தித்தாய்ச் சித்தம்.. --- சிவஞான போதம் சூத்திரம் 4.

அந்தி பகல் யாதும் அறியாத....

வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற
திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி
விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு அருளாயோ---
                                                                திருப்புகழ், மலைமுலைச்சியர்
 
 



No comments:

Post a Comment

Your comments needs approval before being published