Wednesday 14 December 2016

288.ஈளை சுரங்குளிர்

288
பாகை
சென்னை அரக்கோணம் மார்க்கம்
மாயூரத்துக்குப் பக்கம் உள்ள பாகசாலையாக இருக்க கூடும் என்பது செங்கவராயபிள்ளை அவர்களின் கருத்து

              தான தனந்தன தான தனந்தன
              தான தனந்தன                              தனதான


ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல
      நோய்கள் வளைந்தற                   இளையாதே
 ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு
      காடு பயின்றுயி                             ரிழவாதே
 மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்
     வேறு படுந்தழல்                           முழுகாதே
  மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்
     வாழ்வு பெறும்படி                      மொழிவாயே
வாளை நெருங்கிய வாவியி லுங்கயல்
     சேல்கள் மறிந்திட                          வலைபீறா
வாகை துதைந்தணி கேத கைமங்கிட
     மோதி வெகுண்டிள                      மதிதோயும்
பாளை நறுங்கமழ் பூக வனந்தலை
     சாடி நெடுங்கடல்                          கழிபாயும்
பாகை வளம்பதி மேவி வளஞ்செறி
      தோகை விரும்பிய                       பெருமாளே.

பதம் பிரித்து உரை

ஈளை சுரம் குளிர் வாதம் எனும் பல
நோய்கள் வளைந்து அற இளையாதே

ஈளை.... சுரம் - கோழை சுரம் குளிர் வாதம் எனும் பல நோய்கள் என்னும்படியான பல வியாதிகள் வளைந்து - சூழ்ந்து. அற - மிக்க இளையாதே - (நான்) இளைப்பு அடையாமல்.


ஈடுபடும் சிறு கூடு புகுந்து இடு
காடு பயின்று உயிர் இழவாதே

ஈடுபடும் - வலிமையை இழந்துத் துன்புறும் சிறு - சிறிய. கூடு புகுந்து - கூடாகிய இந்த உடலில் புகுந்து இடு காடு -  சுடுகாடு பயின்று - சேரும்படி. உயிர் இழவாதே - உயிரை இழக்காமல்.

மூளை எலும்புகள் நாடி நரம்புகள்
வேறு படும் தழல் முழுகாதே

மூளை எலும்புகள் நாடி நரம்புகள் - மூளை.....நரம்புகள். வேறு படும் - வேறுபட்டு ஒழிய தழல் - தீயில் முழுகாதே - முழுகி வேகாமல்

மூலம் எனும் சிவ யோக பதம் தனில்
வாழ்வு பெறும்படி மொழிவாயே

மூலம் எனனும் – முலப்பொருளான சிவ யோக பதம் தன்னில் –சிவயோக பதவியில் (நான்) வாழ்வு பெறும்படி - வாழ்வு பெறும்படி மொழிவாயே – உபதேசிப்பாயே

வாளை நெருங்கிய வாவியிலும் கயல்
சேல்கள் மறிந்திட வலை பீறா

வாளை - வாளை மீன்கள். நெருங்கிய வாவியில் - தனக்கு அருகில் உள்ள குளத்தில் இருக்கும் கயல் சேல்கள் - கயல், சேல் மீன் (இவைகள்) மறிந்திட - முதுகிட்டு ஓட வலை பீறா - வலைகளைக் கிழித்துத் தாவி.

வாகை துதைந்து அணி கேதகை மங்கிட
மோதி வெகுண்டு இள மதி தோயும்

வாகை துதைந்து - வெற்றியே மிகுந்து அணி - வரிசையாயிருந்த கேதகை - தாழைகள் மங்கிட - உருக்குலைய மோதி வெகுண்டு - அந்தத் தாழகைள் மேல் மோதிக் கோபித்து. இள மதி தோயும் - பிறைச் சந்திரன் படியும்.


பாளை நறும் கமழ் பூக வனம் தலை
சாடி நெடும் கடல் கழி பாயும்

பாளை - பாளைகளைக் கொண்ட நறும் கமழ் - நறு மணம் வீசும் பூகம் - கமுகு மரம் வனம் தலை - காட்டில். சாடி - அம்மரங்களின் உச்சியில் பாய்ந்து ஒடித்து. கடல் கழி பாயும் - கடலின் கழியில் பாய்கின்ற.

பாகை வளம் பதி மேவி வளம் செறி
தோகை விரும்பிய பெருமாளே.

பாகை - பாகை என்னும் வளம் பதி மேவி - செழும் பதியில் பொருந்தியிருந்து வளம் செறி தோகை - வளப்பம் நிறைந்த மயிலை (அல்லது மயில் போன்ற வள்ளியம்மையை) விரும்பிய பெருமாளே - விரும்பிய பெருமாளே.

சுருக்க உரை

ஈளை, வாதம் முதலிய நோய்கள் மிக்க இந்த உடலில் புகுந்து, இறுதியில் சுடுகாட்டில் சேர்ந்து உயிரை இழக்காமல், மூலப் பொருளாகிய சிவ யோக பதவியில் நான் வாழ்வு பெறும்படி உபதேசித்து அருளுக.

வாளை மீன்கள் மிக உயரமாகத் தாவி, கமுகு மரங்களின் உச்சியில் பாய்ந்து, கடலின் கழியில் பாயும் பாகை நகரில் வாழும் மயிலை விரும்பிய பெருமாளே, நான் உடல் எடுத்து பிணியால் இளைத்து மடியாமல் உன் திருவடியில் வாழ்வு பெறும்படி உபதேசிப்பாயாக.

விளக்கக் குறிப்புகள்

வாளை நெருங்கிய... 

5 - 7 அடிகள் வாளையின் வலிமையைக் குறிப்பிடுகின்றன. இதே கற்பனை, உடலினூடு என்று தொடங்கும் திருத்தணிகை திருப்புகழிலும் காணப்படுகின்றது.
கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு  மலர் வாவி           ---திருப்புகழ் (உடலினூடு). 




No comments:

Post a Comment

Your comments needs approval before being published