Tuesday 19 March 2013

196.ஐந்து பூதமும்


196
விராலிமலை
உபதேச நெறி பெற

               தந்த தானன தான தனதன
               தந்த தானன தான தனதன
               தந்த தானன தான தனதன      தனதான


  ஐந்து பூதமு மாறு சமயமு
     மந்த்ர வேதபு ராண கலைகளும்
     ஐம்ப தோர்வித மான லிபிகளும்        வெகுரூப
  அண்ட ராதிச ராச ரமுமுயர்
     புண்ட ரீகனு மேக நிறவனும்
     அந்தி போலுரு வானு நிலவொடு    வெயில்காலும்
  சந்த்ர சூரியர் தாமு மசபையும்
     விந்து நாதமு மேக வடிவம
     தன்சொ ரூபம தாக வுறைவது          சிவயோகம்
  தங்க ளாணவ மாயை கருமம
     லங்கள் போயுப தேச குருபர
     சம்ப்ர தாயுமொ டேயு நெறியது      பெறுவேனோ
  வந்த தானவர் சேனை கெடிபுக
     இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக
     மண்டு பூதப சாசு பசிகெட                  மயிடாரி
  வன்கண் வீரிபி டாரி ஹுரஹுர
     சங்க ராஎன மேரு கிரிதலை
     மண்டு தூளெழ வேலை யுருவிய         வயலூரா
  வெந்த நீறணி வேணி யிருடிகள்
     பந்த பாசவி கார பரவச
     வென்றி யானச மாதி முறுகுகல்      முழைகூடும்
  விண்டு மேல்மயி லாட இனியக
     ளுண்டு காரளி பாட இதழிபொன்
     விஞ்ச வீசுவி ராலி மலையுறை        பெருமாளே.


பதம் பிரித்தல் பத உரை


ஐந்து பூதமும் ஆறு சமயமும்
மந்த்ர வேத புராண கலைகளும்
ஐம்பதோர் விதமான லிபிகளும் வெகுரூப

ஐந்து பூதமும் = (மண், நீர், தீ, காற்று, விண் ஆகிய) ஐந்து புதங்களும், ஆறு சமயமும் = (வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம் என்னும்) ஆறு சமயங்களும் மந்த்ர வேத புராண கலைகளும் = மந்திரமும், வேதமும், புராணங்களும், கலைகளும். ஐம்பதோர் விதமான லிபிகளும் = ஐம்பத்தோரு விதமான அட்சரங்களும். வெகு ரூப = பல உருவங்ளை உடைய.


அண்டர் ஆதி சராசரமும் உயர்
புண்டரீகனும் மேக நிறவனும்
அந்தி போல் உரு வானு(ம்) நிலவொடு வெயில் காலும்

அண்டர் ஆதி = தேவர்கள் முதலியவர்களும் சராசரமும் = இயங்கும் பொருள், இயங்காத பொருள் அனைத்தும்
உயர் புண்டரீகன் = மேன்மை பொருந்திய பிரமனும்
மேக நிறவனும் = மேக நிறம் கொண்ட திருமாலும். அந்திபோல் உருவானும் = செவ்வண்ண நிறம் கொண்ட உருத்திரனும் நிலவோடு வெயில் காலும் = நிலவு, வெயில் என்பவை வீசுகின்ற.

சந்த்ர சூரியர் தாமும் அசபையும்
விந்து நாதமும் ஏக வடிவம்
அதன் சொரூபம் அதாக உறைவது சிவ யோகம்

சந்த்ர சூரியர் தாமும் = சந்திரனும், சூரியனும். அசபையும் = அசபை என்னும் அம்ச மந்திரமும் விந்து = சுத்த மாயையும். நாதமும் = ஒலியும் ஏக வடிவம் = கலந்த ஒன்றாய வடிவமே அதன் சொரூபமது ஆக உறைவது = அந்தப் பரம் பொருளின் வடிவம் எனப் பாவித்து (இருத்தலே) சிவ யோகம் = இந்தச் சிவயோக நிலையாகும்.

தங்கள் ஆணவ மாயை கரும
மலங்கள் போய் உபதேச குருபர
சம்ப்ரதாயமொடு ஏயு நெற அது பெறுவேனோ

தங்கள் ஆணவம் மாயை கருமம் = அவரவருக்கு உரிய ஆணவம், மாயை, கருமம் என்னும் மலங்கள் போய் = மும்மலங்களும்  நீங்கப் பெற்று உபதேச குருபர சம்ப்ரதாயமொடு = பரம்பரையான குரு மூர்த்தியின் வழியாய் உபதேசம் பெற்ற வழியில்  ஏயு = பொருந்துகின்ற நெறி அது பெறுவேனோ = நெறியைப் பெறுவேனோ?

வந்த தானவர் சேனை கெடி புக
இந்த்ர லோகம் விபூதர் குடி புக
மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி

வந்த தானவர் = எதிர்த்து வந்த அசுரர்கள் சேனை கெடி புக = படைகள்  அச்சம் அடைந்து முடிவுற இந்த்ர லோகம் = இந்திர லோகத்தில். விபூதர் = தேவர்கள் குடி புக = குடியேறவும் மண்டு = நெருங்கி வந்த பூத பசாசு = பூதங்களும், பிசாசுகளும் பசி கெட = தத்தம் பசியாற  மயிடாரி = மகிடாசுரனைப் பகைத்தழித்த துர்க்கை.

வன்கண் வீரி பிடாரி ஹரஹர
சங்கரா என மேரு கிரி தலை
மண்டு தூள் எழ வேலை உருவிய வயலூரா

வன் கண் வீரி = வீரம் வாய்ந்த காளி பிடாரி = பிடாரி முதலிய தேவதைகள் ஹரஹர சங்கரா என = அரகர சங்கரா என்று ஒலியை எழுப்ப மேரு கிரி = மேருமலையின் தலை = உச்சியளவும் மண்டும் = நெருங்கும் தூள் எழவே = தூள் கிளப்ப வேலை உருவிய வயலூரா = வேலைச் செலுத்திய வயலூரனே.

வெந்த நீறு அணி வேணி இருடிகள்
பந்த பாச விகார பரவச
வென்றியான சமாதி முறுகு கல் முழை கூடும்

வெந்த நீறு அணி = வெந்த திருநீற்றை அணிந்த வேணி = சடையை உடைய இருடிகள் = முனிவர்கள் பந்த பாச = பந்த பாசமாகிய உலகக் கட்டு விகார = கலக்கங்களை அப்புறப்படுத்திய பரவச = வசமழியச் செய்த வென்றி யான = வெற்றி நிலையான மாதி முறுகு = சமாதி நிலையை கல் முழை கூடும் = கற்குகையில் கூடுகின்ற.

விண்டு மேல் மயிலாட இனிய
க(ள்)ளுண்டு கார் அளி பாட இதழி பொன்
விஞ்ச வீசு விராலி மலை உறை பெருமாளே.

விண்டு மேல் மயிலாட = மலையின் மேல் மயில்கள் ஆட இனிய க(ள்)ளுண்டு = இனிப்புள்ள மதுவைப் பருகி கார் அளி = கரிய வண்டுகள் பாட = ரீங்காரம் செய்ய இதழி = கொன்றை மரம் பொன் = பொன்னை  விஞ்ச = மிகவும் வீசும் = வீசுகின்ற விராலி மலை உறை பெருமாளே = விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே


சுருக்க உரை


ஐந்து பூதங்களும், ஆறு சமயங்களும், வேத புராணங்களும், ஐம்பத்தோறு விதமான அட்சரங்களும், பிரமன், திருமால், உருத்திரன், நிலவு, சூரியன், அம்ச மந்திரம், விந்து, நாதம் இவை யாவும் கலந்த ஏக வடிவமாக பரம் பொருளின் சொரூபம் என்று பாவித்து, சிவ லோக நிலையைப் பெறுவதற்கு அருள் நெறியை உபதேசிப்பாயாக. 

போருக்கு வந்த அசுரர்களை அழித்துத் தேவர்களை விண்ணுலகத்தில்
குடிபுகச் செய்தவனே. போர்க்களத்தில் பூதங்களும், பிசாசுகளும் பசி
ஆற உண்ணவும், துர்க்கை, பிடாரி முதலிய தேவதைகள் ஹர ஹர
சங்கரா என்று ஒலியை எழுப்பவும் வேலை விட்ட வயலூரனே, பாச
பந்தங்களை நீக்கிய முனிவர்கள் சமாதி நிலையை மலைக் குகைகளில்
கூடுகின்ற விராலி மலையில் உறைபவனே, நான் குருவின் உபதேசம் பெற்று நல்ல நெறி பெறுவேனோ?

விரிவுரை  ரசபதி

தாற்றுக் கோலை வேளாளர் தாங்கினார். வைசியர்கள் குறிப்பாகத் துலாக்கோலைக் கொண்டனர். வேந்தர்களிடம் செங்கோல் விளங்கியது. அந்தணர்கள் முக்கோல் ஏந்தினர். ஒற்றைக் கோலும் அவர்களுக்கு  உண்டு. இந்நால்வர் கோல் மூலம் நாட்டில் தர்மம் நடமாடும்.அக்கோல்கள் நேர்மை தவறினால் நாட்டில் மழை தடுமாறும். விளைவு குறையும் வளமை குன்றும வறுமை வளரும்.   மாறுபட்டு மக்கள் மல்லாடுவர்.  ஒருவரை ஒருவர் ஏய்த்துப் பிழைப்பர். இதனால் உலகம் அல்லோல கல்லோம் ஆகும்.

கோல்களால் விளைந்த குறை தவிர்க்க விமலன் திருக்கரத்து வேல் வெளிப்படும். அக்கோல்களுக்கு இயல்பான அறிவு இல்லை. அவர்களின் உடையவர்களால் மதிப்பு அடையும். வேலோ ஞான மயம். நித்தியசத்திய, நிக்ரக, அனுக்ரக, தெய்வமயம் அது.  அதன் செயலால் பாவ இருள் பாதாளத்து மறையும். ஆகம புண்ணியம் உயர்ந்து  வாழும். இது சுருதி சொல்லும் செய்தி.

தனு என்பவன் பெற்ற பிள்ளைகட்கு தானவர் என்று பெயர். இவர்கள் தன் பெயருக்கு ஏற்ப வெறும் தேகாபிமானிகள். மேற்சொன்ன நால்கோலும் தவறப்பட்ட ஒருகாலத்தில் தொல்லை தரும் தானவர்களே எங்கும் தோன்றினர். தாழ்ந்தோரை உயர்த்தினர். உயர்ந்தோரைத் தாழ்த்தினர். சிறந்த புலமைக்கு மக்கள் செவி கொடுத்திலர்.  நாடக மேடைகள் எங்கும் மடமிடலாயிற்று. பவுசு கெட்டவளுக்கு பதிவிரதைப்பட்டம். கூத்தாடிகளே எங்கும் கும்மாளம் கொட்டினர். அவர்கள் வருகைக்குத்தான் எங்கும் வரவேற்பு. அவர்கள் வாக்கிற்குகத்     தான் செல்வாக்கு. ஆன்மீக உணர்வினர்களும் நுணிப்புல் மேய்ந்து நுடங்கி முடங்கினர். தருமம்  இங்ஙனம் தலைகீழான செய்தியை அறிந்து அறியாமை இருளை அகற்ற ஞான வேலை ஊடுருவ ஏவினை. அதன் தெரிசன ஆக்கத்தால், வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ர லோகம்  விபூதர் குடிபுக  நேர்ந்தது. ( விபுதர் = விஷேச  அறிவினர்). இதனால் தேவர்களுக்கு புலவர் என்ற பெயரும் உண்டு.

அவுண உடல்களை பூத பைசாசங்கள் தின்று தீர்த்தன. இனி அசுர நாற்றமே இல்லை. உலகில் சென்ற நிலைமை எய்தியது. இந்த அற்புத நேரத்தில் போர்களத்தில் வீர சக்திகள் புகந்தனர். இடர்படு பிறவியின் இளைப்பாற்றுவானை சங்கரா எனக் கூவி அழைத்துக் கும்பிட்டனர். இது தாய்குல அழைப்பு. சேய்க்குலமான நமக்கு ஒரு சமிக்ஞை. இவ்வளவு சேதியும் ஏக காலத்தில் விளைய செயல் செய்தனை. நன்செய் நிலங்கள் நல்வளம் நலவக  அதனால் வயலூர் எனும் பெயர் வாய்த்த பதியில்  எழுந்தருளி இருக்கும் தெய்வமே, வேலை உருவிய வயலூரா என்று வாயார உம்மை வாழ்த்துவம்.

தாய்,  தந்தை,  மக்கள்,   சுற்றம் யாவும் ஈஸ்வர் லீலையின் பிம்பங்கள். இது தானா முழு உண்மை. இந்த எண்ணம் எழாதபடி கர்மம் கண்னை மறைத்தது. மாயை மனதை மயக்கியது. பாழும் இருளை ஆணவம் பரப்பியது. அவைகளின் சாகசங்களால் இவர்கள் ஆக்கையின் சுகத்திற்கு அமைந்தவர்கள் எனும் நினைப்பு எழுந்தது. இதனால் இடர்கள் யாவும் எழுந்தன. இனி இங்கு இருந்தால் அதோ கதி தான் என்று  உணர்ந்த உத்தமர்கள் ஓடினர். எவரும் வராத இடம் தேடினர். புனித குகைகளில் புகுந்தனர். பூதி அளிக்கும் விபூதியைத் தரித்தனர். பந்த பாசத்தில் பரவசம் உண்டு. அது விகாரப் பரவசம் அதனால் உடல் பலவீனம் மனோ பலவீனம் அறிவு மெலியல், ஆத்ம சக்தி யாவும் அப்பரவச அனுபவம். வீணான அதை வெல்லும் வெற்றியே வெற்றி. அது கருதியே அவர்கள் குகைக்குள் புகுந்தனர். அங்கு இருந்தே அவர்கள் தத்துவ லய சமாதி, விகர்ப்ப சமாதி, நிர்விகர்ப்ப சமாதி, சஞ்சார சமாதி, ஆரூட சமாதிகளை முறையே பயின்று முன்னேறினர். இறுதியில் மோன சமாதி கூடி முறுவலிக்கின்றனர். அந்த, வெந்த நீறணி வேணி இருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி கூடி இருக்கும் இவர்கள் தவமே இன்று வரை இவ்வுலகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் தவ ஒளி வெளி உலகில் வியாபித்து அக்ரிணைக்கும் அளிக்கும்.

அவர்கள் தவமிருக்கும் குகைக்கு மேற்பட்ட மலை உச்சியில் மயில்கள் அழகிய தம் தோகைகளை விரித்து ஆடும். கருவண்டுகள் தேன் பருகிய களிப்பில்  பண்களை ஆடலுக்குத் தக்கபடி பாடும். பாடல் ஆடல்கட்கு பரிசளிப்பது போல்  பொன் இதழ்களை கொன்றை மரங்கள் பொழியும். இந்த இயற்கைக் காட்சியை எந்நூல்களும் ஓதும். அழகிய இந்த விராலிமலை மேல் நிலையாக எழுந்தருளி இருக்கும் எம் பெருமானே, வினயமோடு அடியேன் செய்யும் விண்ணப்பம் கேட்டருளும்.

இவ்வைந்து பூதக் கூட்டம் இங்கு ஆறு சமயங்கள், உம்மை ஆய்வு செய்கின்றன. நம, ஸ்வாஹா, ஸ்வதா, வசட்டு, வெளசட், பட், கு(ஹு)ம்பட்டு எனும் ஏழு வகை முடிவு கொண்ட மந்திரங்கள் உமது பெருமையையே நவில்கின்றன. பதினெட்டு புராணங்களும் உமது தடத்த  சொரூப லட்சணங்களையே சொல்லுகின்றன. ஆதாரங்கள் ஆறிலும் அகரம் முதல் ஷகாரம் வரையிலான அட்சரங்கள் உமது அனுபவ உருப்பாகவே அமைந்துள்ளன. உதடு அசையாது ஒலிக்க உள்ள் அஜபா எனும் ஹம்ச மந்திரம் சிவோக நுட்பத்தைச் சிந்திக்கத் தூண்டும். அமுத போகத்தை விண்ணில் அருந்துகின்றார் வானோர். அகில உலகிலும் அசையும் பொருட்களுக்கு அளவில்லை. அசையாப் பொருட்களும் அடர்ந்து காண ஆவது இல்லை. வரையரை இன்றி அவை வளர்ந்திருக்கின்றன. பார் அனைத்தையும் பிரமன் படைகிறான்.  கருமுகில் வண்ணர் காக்கிறார். அந்தி நிறத்து உருத்திரர் இறப்பில் வரும் இளைப்பை ஆற்றுகின்றார்.

தட்ப ஒளி பரப்பி சந்திரன் வானில் தவழ்கிறான். வெப்ப ஒளியில் விரிந்து கதிரேசன் விளங்குகிறான்.  95 - ம் தத்துவம் விந்து. இறுதித் தத்துவம் நாதம். அடே அப்பா,  எண்ணிப் பார்க்க எவரால் இயலும். இப்படி அகண்டாகாரமான யாவும் உமது சொரூபம் என்று உணருகின்ற போதே  உள்ளம் குளிர்கின்றதே. ஏகமான அச்சொரூபத்தில் இணைந்து இருப்பது சிவயோகம். பேஷ், அந்நிலை எய்த முயலுவது தான் ஆத்ம தருமம். இந்நிலை எம்மால் படித்து எய்த இயலுவதா?. எந்த மேடையில் இது குறித்து வாய் திறக்க இயலும்?.

மும்மலம் அகன்ற முத்தர்கள் எங்கும் உளர். அவர்களை அறிய முடியாத அநியாயத்தை யாரிடம் சொல்லி ஆற்றுவது? அந்த பரம்பரை உபதேச பரமாச்சார்யர்கள் காட்டும் சம்ரதாய மார்க்கம் சாலச் சிறந்தது குட்டிகளோடு
கரடியை ஆற்று வெள்ளம் அடித்துச் செல்ல அவைகள் தம் ஆடும் குட்டியுமாம் என்று அறிவு மயங்கிய கோனார் குபுக்கென்று ஆற்றில் குதித்து தாவிச் சென்று அவைகளைத் தழுவினாராம். தக்க துனை கிடைத்தது என்று கரடியும் அவரைத் தழுவிதது. ஒருவரை ஒருவர் பற்றாது இருந்தால் ஒருவேளை கரடியும்  கரையில் ஒதுங்கி பிழைப்பதும் ஆகும். அங்கனம் இன்றி விடேன் விடேன் என்று தழுவிய கரடியும் பிழைக்கவில்லை. கோனாரும் இறந்து தொலைந்தார்.

மும்மல வெறியில் முதிர்ந்த குரவர்கள் பித்தர்கள் போல் பிதற்றித் திரியும் சீடர்களுக்கு  காட்டும் உபதேசம் இவ்வரலாறு போல் தான் ஆகும்.
அங்ஙனம் இன்றி, மேற்சொன்ன சதாச்சாரியர்கள் தாள் மலர் சார்ந்து அவர்கள் புகட்டும் அனுபவ நெறியில் கணுவர அடியேன் கலக்கும் பேறு என்று பெறுவேனோ?



விளக்கக் குறிப்புகள்

அசபை – அம்ச ( ஹம்சா) மந்திரம். அவன், நான் எனப்படும் சோகம். சோகம்
பாவனை என்பது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று எனப் பாவித்தல்.

அசபை என்பது செபிக்கப் படாமலே பிராணனோடு சேர்ந்து இயங்கும் மந்திரம்

ஒப்புக

விண்டு மேல் மயிலாட ....
   
     வரைசேரும் முகில் முழவ மயிகள்பல  
     நடம் ஆட வண்டு பாட
     விரை சேர் பொன் இதழி தர மென்காத்தன்
     கைஏற்கும் மிழலை ஆமே---சம்பந்தர் தேவாரம்.
    
    கானுலா மயிலின் கணங்கள்நின் றாடக்
    கணமுகில் முரசநின் றதிர)---நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பெரிய திருமொழி
  





No comments:

Post a Comment

Your comments needs approval before being published