“
234
சீகாழி
உமது சொரூப தடத்த 16 இயல்புகளை
என்றுமே மறவேனே என்று கூறும் பாங்கு அழகானது
தனதன தந்தன தந்தன தந்தன
தனதன தந்தன தந்தன தந்தன
தனதன தந்தன தந்தன தந்தன தனதான
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
சமயமு
மொன்றிலை யென்றவ ரும்பறி
தலையரு
நின்றுக லங்கவி ரும்பிய தமிழ்கூறுஞ்
சலிகையு நன்றியும் வென்றியு
மங்கள
பெருமைக
ளுங்கன முங்குண மும்பயில்
சரவண மும்பொறை
யும்புக ழுந்திகழ் தனிவேலும்
விருதுது லங்கசி கண்டியி லண்டரு
முருகிவ ணங்கவ ரும்பத மும்பல
விதரண முந்திற முந்தர முந்தினை புனமானின்
ம்ருகமத குங்கும கொங்கையில்
நொந்தடி
வருடிம
ணந்துபு ணர்ந்தது வும்பல
விஜயமு
மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் மறவேனே
கருதியி லங்கைய ழிந்துவி டும்படி
அவுணர
டங்கம டிந்துவி ழும்படி
கதிரவ
னிந்துவி ளங்கிவ ரும்படி விடுமாயன்
கடகரி யஞ்சிந டுங்கிவ ருந்திடு
மடுவினில்
வந்துத வும்புய லிந்திரை
கணவன ரங்கமு
குந்தன்வ ருஞ்சக டறமோதி
மருதுகு லுங்கிந லங்கமு னிந்திடு
வரதன லங்கல்பு
னைந்தரு ளுங்குறள்
வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை தொடுமீளி
மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய
பிரமபு
ரந்தனி லுங்குக னென்பவர்
மனதினி
லும்பரி வொன்றிய மர்ந்தருள் பெருமாளே
பதம் பிரித்து உரை
சருவி இகழ்ந்து மருண்டு வெகுண்டு
உறு
சமயமும் ஒன்றிலை என்றவரும்
பறி
தலையரு(ம்) நின்று கலங்க விரும்பிய
தமிழ் கூறும்
சருவி
இகழ்ந்து = (மதப்
போராட்டத்தில்) ஒருவரை ஒருவர் இகழ்ந்தும்
மருண்டு = மருட்சி அடைந்தும் வெகுண்டு உறு = கோபித்தும் வருவதான சமயமும் = சமயங்களும் (சமயம்) ஒன்று இலை = (சமயம் என்பதே) ஒன்று இல்லை என்றவரும் =
என்று கூறுபவர்களும் பறி தலையரும் நின்று = மயிர் நீங்கிய தலையை உடைய சமண மதத்தினரும்
நின்று கலங்க = நின்று
கலங்கும் படியாக விரும்பிய = யாவரும்
விரும்பத்தக்க தமிழ் கூறும் = தமிழ்க்
கவிதைகளைச் சொல்லும்
சலிகையு(ம்) நன்றியும் வென்றியும்
மங்கள
பெருமைகளும் கனமும் குணமும்
பயில்
சரவணமும் பொறையும் புகழும்
திகழ் தனி வேலும்
சலிகையும்
= செல்வாக்கையும்
நன்றியும் = உபகார குணத்தையும்வென்றியும் = வெற்றியையும்
மங்கள = மங்களகரமான
பெருமைகளும் = பல பெருமைகளையும்
கனமும் = சீர்மையையும்
குணமும் = நற்குணத்தையும்
பயில் சரவணமும் = (நீ குழந்தையாக
இருந்து) பயின்ற சரவண மடுவையும் பொறையும் = உனது
பொறுமையையும் புகழும் = புகழையும்
திகழ் தனி வேலும் = விளங்கும் ஒப்பற்ற வேலாயுதத்தையும்
விருது துலங்க சிகண்டியில்
அண்டரும்
உருகி வணங்க வரும் பதமும் பல
விதரணமும் திறமும் தரமும் தினை
புன மானின்
விருது
துலங்க = வெற்றிச் சின்னங்கள் விளங்க
சிகண்டியில் = மயில் மீது
அண்டரும் உருகி = தேவர்களும் மனம் உருகி
வணங்க = துதிக்கும் படியாக வரும் = வருகின்ற
பதமும் = திருவடியையும் பல
விதரணமும் = உனது
பல விதமான கொடைப் பெருமைகளையும் திறமும் = ஆற்றலையும்
தரமும் = மேன்மையையும் தினை புன மானின் = தினைப்
புனத்து மான் ஆகிய வள்ளியின்
ம்ருகமத குங்கும கொங்கையில்
நொந்து அடி
வருடி மணந்து புணர்ந்ததுவும்
பல
விஜயமும் அன்பின் மொழிந்து
மொழிந்து இயல் மறவேனே
ம்ருகமத
= கத்தூரி
குங்கும கொங்கையில் = செஞ்சாந்து
அணிந்துள்ள கொங்கையில் நொந்து = மனம்
நொந்து வருடி = அவளுடைய திருவடியைப் பிடித்தும்
மணந்து = மணம்
செய்து புணர்ந்ததுவும் = சேர்ந்து
நின்றதையும் பல விஜயமும் = உனது பல வெற்றிச் செயல்களையும்
அன்பின் மொழிந்து மொழிந்து = அன்புடனே
பல முறை எடுத்துச் சொல்லி இயல் மறவேனே = உனது
பெருமையை மறக்கவே மாட்டேன்
கருதி இலங்கை அழித்து விடும்படி
அவுணர் அடங்க மடிந்து விழும்படி
கதிரவன் இந்து விளங்கி வரும்படி
விடு மாயன்
கருதி = (இராவணன்
செய்த கொடுகைளை) மனத்தில் கொண்டு இலங்கை அழந்து விடும்படி = இலங்கை அழிந்து போகும்படியும் அவுணர் அடங்க = அரக்கர்கள்
எல்லாரும் மடிந்து விழும்படி = இறந்து
விழும்படியும் கதிரவன் இந்து = சூரியனும்
சந்திரனும் விளங்கி வரும்படி = (பழைய முறைப்படி) விளக்கத்துடன் வரும்படியும் விடு மாயன் = செய்த
திருமால்
கட கரி அஞ்சி நடுங்கி வருந்திடு
மடுவினில் வந்து உதவும் புயல்
இந்திரை
கணவர் ரங்க முகுந்தன் வரும்
சகடு அற மோதி
கட
கரி = மத யானையாகிய கஜேந்திரன்
அஞ்சி நடுங்கி = பயந்து
நடுக்கமுற்று வருந்திடு = வருத்த முற்றிருந்த
மடுவினில் வந்து உதவும் = மடுவினடத்தே வந்து உதவிய
புயல் = மேக
நிறப் பெருமான் இந்திரை கணவன் = இலக்குமியின் கணவன் ரங்க
முகுந்தன் = ஸ்ரீரங்கத்தில்
பள்ளி கொண்டிருக்கும் முகுந்தன் வரும் = (தன்னைக் கொல்ல) வந்த சகடு
அற மோதி = (அசுரன்
இறக்க) வண்டியை உதைத்து மோதியவன்
மருது குலுங்கி நலங்க முனிந்திடு
வரதன் அலங்கல் புனைந்து அருளும்
குறள்
வடிவன் நெடும் கடல் மங்க ஓர்
அம்பு கை தொடும் மீளி
மருது
குலுங்கி = மருத
மரம் குலுங்கி நலங்க = நொந்து போக முனிந்திடு = கோபித்த
வரதன் = வரதன் அலங்கல் புனைந்து = மாலை
சூடியருளும் குறள் வடிவன் = குட்டையான
வாமன வடிவம் கொண்டவன் நெடுங்கடல் = பெரிய
கடல் மங்க = நொந்து
வாட்டமுற ஓர் அம்பு கை தொடு = ஒப்பற்ற
அம்பைக் கையால் தொட்ட மீளி = வலிமை
உடையவன் (ஆகிய திருமாலின்)
மருக புரந்தரனும் தவம் ஒன்றிய
பிரம புரம் தனிலும் குகன் என்பவர்
மனதினிலும் பரிவு ஒன்றி அமர்ந்து
அருள் பெருமாளே
மருக = மருகனே
புரந்திரனும் = இந்திரனும் தவம் ஒன்றிய = தவம்
பொருந்திச் செய்த பிரம புரம் தனில் = பிரமபுரம்
என்ற சீகாழி என்ற தலத்தில்
குகன் என்பவர் மனதினிலும் = குகன்
என்று கூறுபவர் மனத்திலும்
பரிவு ஒன்றி = அன்பு பொருந்தி அமர்ந்தருள் பெருமாளே = அமர்ந்தருளும் பெருமாளே
சுருக்க உரை
மயங்கி நிற்கும் சமய வாதிகளும், கலங்கி நிற்கும் சமயங்களும், சமயம்
என்பதே இல்லை என்று சொல்லுவோரும், மயிர் நீங்கிய தலையை
உடைய சமணர்களும், மற்றும் யாவரும் விரும்பத் தக்க தமிழ்ப்
பாடல்களைச் சொல்லும் உன்னுடைய வாக்குத்
திறன், உபகார சிந்தை,
வெற்றி, பெருமை, நற்குணம், பொறுமை, புகழ், ஒப்பற்ற வேல் ஆகியவை
வெற்றிச் சின்னங்களாக விளங்க, மயில் மீது வருகின்ற முருகனே
தேவர்களும் வணங்கும் உனது திருவடியையும், உன் கொடைத்
தன்மையையும், திறமையையும், மேன்மையையும், வள்ளியை மணந்து
நின்றதையும், பல முறை போற்றித் துதித்து
உன் பெருமைகளை
மறக்கவே மாட்டேன்
இராவணன் செய்த பிழைக்காக இலங்கையை அழிந்து
போகும்படியும்,
அரக்கர்கள் யாவரும் இறக்கவும், சூரிய சந்திரர்கள் மீண்டும்
விளக்கத்துடன் வரவும் செய்த திருமால், மடுவில் கஜேந்தரனுக்கு
உதவயிவர் சீரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவர்
தன்னைக் கொல்ல
வந்த அசுரன் மாளும்படி வண்டியை உதைத்த
வரதர் வாமன மூர்த்தி
கடலும் வாட்டமுற ஒரு அம்பைச் செலுத்தியவர்
அந்தத் திருமாலின்
மருகனே சீகாழியிலும், குகன் என்று சொல்லுவோர் மனத்திலும்
அமர்ந்தருளும் பெருமாளே உன் பெருமைகளை
நான் மறவேன்
குகஸ்ரீ ரசபதி விரிவுரை
இராவணன் மூன்று உலகங்களின் முதலாளி. அவன் தலைநகர் இலங்கை அவன் ஆட்சியில், பாழும் தீவினை நகர் முழுவதும்
பரவி இருந்தது. இருளை மதிக்கும் இருள் போல் நகரில் அரக்கர்கள் நடமாடினர். கழல் ஒலிக்கும்
காலர், கடும் சூலம் ஏந்திய கையர், கனல் கொப்புளிக்கும் கண்ணர், இவர்களுள் கல்லா மறவர் சிலர் கற்ற மறவர் பலர்.
இரக்கமற்ற அரக்கப் புலமை, பொன்னாட்டு தெய்வப் புலவர்களை
ஓட ஓட விரட்டியது. பகலெல்லாம் இவர்களது பயங்கர ஆட்சி. இரவு பிறந்ததும் மது வெறி, இச்சை வெறி, அயர்ந்த நித்திரை இதற்கு அயலாய்
அரக்கர்கள் நேர்மையை அறிந்திலர். அந்த அதர்மத்தால் சூரிய லோகம் சுருங்கியது. மதி மண்டல
அமிர்தம் வறண்டது. இதை அறிந்த பெருமாள்
ராமனாக வந்தார். வானரங்களுடன் இலங்கைக்குச் செல்ல வழி விடு என்று வருணனை எண்ணி பயனான
தர்ப்ப சயனத்தில் படுத்தார். அவர் அருமை அறியாத அவன் அவர் கைகளின் மேல் அலைகளை மோத
விட்டு அகங்கரித்தான். அதை அறிந்த ரகுபதி அக்னி அஸ்திரத்தால் அவன் கொட்டத்தை அடக்கினார்.
வெருண்ட வருணன் வெளிப்பட்டு கடல் மேல் அணை
கட்டி செல்க என கை குவித்தான் - படர்ந்து நின்ற படு கடல் தன்னை
இரந்திட்ட கை மேல் எரி திரை மோத கரந்திட்டு
நின்ற கடலைக் கலக்க சரம் தொட்ட கைகள் - என்று ஆழ்வாரும் இவ்வரலாற்றை அனுபவித்துப்
பாடுகிறார். நெடுங்கடல் மங்க ஓர் அம்பு கை
தொடும் மீளி - என்று அடியோன்களும் இச்செய்தியை அறிந்துளம்இலங்கை அழிந்து விடும்படி அவுணர் அடங்க மடிந்து விழும்படி கதிரவன்
இந்து விளங்கி வரும்படி வென்ற ராமபிரானது அற்புத ஆற்றல்களை எண்ணி அவரை மாயன் என்று கூறி மகிழ்கின்றோம்
கடல் வண்ணரை நாள்தோறும் வழி பட்டார் கஜேந்திரர். ஒரு நாள் பூசைக்கு பூப்பறிக்க
பொய்கையில் இறங்கினார். அவ்வமயம் பயங்கர முதலை ஒன்று அவர் காலைப் பற்றியது. விடுதலைக்
கருதி, மூண்டு விருவிருத்து முயன்றார். முடியவில்லை. இறுதி நாள் அணுகியது என எண்ணினார்
.முதல்வன் பூசை முடியும் முன், இறந்து போக நேர்ந்ததை எண்ணி வருந்தினார். ஆதிமூலமே என அலறினார். சக்கரம் விரைந்தது.
முதலையை சங்கரித்தது. பாவம் தீருமாறு நீல மேகம் போல் திருமால் எழுந்து நின்றார். அவரது
திருவடிகளை கண்ணீரால் அலம்பி குளிர்ந்து இருந்த மலர்களை கோவிந்தா என கொட்டினார். அப்போது
அவரது உடம்பிற்கும் விடுதலை, உயிர்க்கும் முத்திப் பேறு உதவிய பெருமாளை கடகரி அஞ்சி நடுங்கி வருந்திடும் மடுவினில்
வந்து உதவும் புயல் என்று வணங்கி கை குவிப்பம் யாம். சம்சார மடுவில், ஐம்புல முதலைகள் வாயில் அகப்பட்டு அகத்தில் மறைந்திருந்த
நிலை மாறி மரணத்தை நினைத்து நடுங்கும் நாங்கள் அற்புத இவ்வரலாற்றை எண்ணி அமைதி பெறுவம்
நாரணர்க்கு உப இந்திரர் எனும் ஒரு பெயர் உண்டு, அவர் தேவியும் இந்திரை
எனும் பெயர் பெறுவர், மேலும் செல்வ வாழ்வை இந்திர போகம் என்கிறோம், அச்செல்வ மணாளரை
இந்திரை கணவர் என்று எண்ணுவதிலும் இன்பம் உளது
காவிரி என்று ஒரு நதி கொள்ளிடம் என்று ஒரு ஆறு. அந்த ஆறுகளின் நடுவிடம் அரங்கம் எனப்பெறும். அங்கு திருமால்
அரிதுயில் கொண்டுள்ளார். புறவாழ்வில் போகாதிபர் அவர் அக வாழ்வில் யோகதிபர் இதை அரங்க
முகுந்தன் என்ற பெயராலேயே அறிந்து மகிழ்கிறோம்.
திரேதாயுக அரக்கராதிகள்அசுர உடல் எடுத்து ஆரவாரித்தனர். அதை அறிந்த திருமால் கண்ணனாக
அவதரித்தார்.
ஒரு வண்டி அதன் கீழ் ஒரு தொட்டில் அதனில் காலும் கையும் அசைத்து, புரண்ட கண்ணன் குதுகலித்து
இருந்தான். தெய்வத் திருமேனி இது என்று அசுர உலகம் அறிந்திலது ஒரு அசுரன் உடனே அவ்வண்டியில்
ஆவேசித்தான். முன் சாய்ந்து கொல்ல முயன்றான் கயவன் கருத்தறிந்த கண்ணன் எட்டி உதைத்தான்
அது தாங்க ஆற்றாத அசுரன் சகடன் அப்போதே இறந்தான்.
சகடு அற மோதி அசுர உலகை இப்படி யே அழித்த வரலாறுகட்கு அளவில்லை
இளம் பருவ கண்ணன் சேட்டைகள் ஏராளமாயின. அது பொறாத அன்னை யசோதை கண்ணனை கயிற்றினால்
கட்டினாள். கயிற்றின் மறு முனையை உரலில் பிணைத்தாள். சிரித்துக் கொண்டே கண்ணன் தவழ்ந்து
சென்றான். உரலும் தொடர்ந்து உருண்டது. எதிரில்
இரு மருத மரங்கள் இருந்தன இரண்டின் நடுவில் கண்ணன் சென்றான் இருந்த உரல் குறுக்காகி
இழுபட்டமையால் வேரற்று மரம் இரண்டும் விழுந்தன
அதே நேரத்தில் இருவர் எதிர் நின்று இறைஞ்சினர் பிரபு, நாங்கள் புனித குபேரனின் புதல்வர்கள்
மாறுபாடுகள் பல செய்த எங்களை மாதவர் மருத மரங்களாகும் படி சாபமிட்டார் பல நாள் வணங்கி
இருந்தேம் நகை ஒளி நோக்கொளி ஸ்பரிச ஒளி மூன்றாலும் தீரச்சாபம் தீர்த்தனை வாழி பெரும என்று அவ்விருவரும் வழுத்திச் சென்றனர்
மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன் என்று இவ்வரலாற்றைப் போற்றி இவ்வுலகம் புகழிக்கின்றது
குட்டை வடிவு பிரம்மச்சாரியாய் அச்சுதர் அசுர மாபலியை அணுகினார். அவரிடம் மூன்று
மண் தானம் வாங்கி இரண்டடியால் மேலும் கீழும்
அளந்தார் மூன்றாவதாக எடுத்த அடியை அவன் தலையில் வைத்து அழுத்தி அசுர கொட்டம் அடக்கினார்
- சிறியன் என்று இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தை மாபலியிடம்
சென்று கேள் - என்று இது குறித்து பேசுகிறார்
நம் பெரியாழ்வார். இப்படி வெற்றி மாலை சூடிய அவரை அலங்கல் புனைந்தருளும் குறள் வடிவினன்
என்று நாங்கள் அனுபவிக்கிறோம். திருமால் செய்த ஒவ்வொரு செயலையும் நீரும் செய்தீர்.
அவைகளை கந்த புராணமும் தல புராணங்களும் அறிவிக்கின்றன.
பிரமன் வழிபட்டபதி, பிரமபுரம் எனப்பெறும் சீர்காழி முதலிய 12 நாமம் கொண்ட அப்பதியில் இந்திரனும் வந்து தவம் செய்தான்.
எந்த யுகத்திலும் இருந்த அசுராதிகள் , இந்தக் கலியுகத்தில் அக உணர்வு அற்ற புலவர்களாக
அவதரித்தனர் அவற்கும் தெய்ச நிச்சயம் தெரிய வில்லை உள் பொருள் உணராமல் உருப் பொட்ட
நூட்களும் வாய் வாதங்களுமே அவர்களால் எங்கும் வளர்ந்தன அமைதி, இன்பம் பெரிதும் மறைந்தது
பிண்டத்தில் பேறு பெற குகா குகா என்பார்… இதய குகையில் இருக்கும் நீர் , அண்டத்திற்கு வாழ்வளித்த சீர்காழியில்
திருஞான சம்பந்தராய் அவதரித்தீர். இப்படி எல்லாம் பெரும் தகுதி மிக்க உம்மை பெரிய பொருளானவர்
என்று கருதி பெருமாளே என்று அன்போடு கூவி அழைப்பம் யாம்.
முற்பிறப்பில் வில் போரும் மல் போரும் செய்த வீரர்கள் இப்பிறப்பில் சொல் போர் துவக்கி
நல்லோருக்குச் சொர்வை அளித்தனர் எம் சமயம் ஏற்றம் மதியற்றது உம் சமயம் என்று மல்லாடுகின்றார்
பலர். ஒருவரை ஒருவர் கூறும் சொற்களை எடுத்து எழுத ஏடும் இடம் தாரா இத்துறையில் அழுது
புலம்பினர். ஆத்திரம் கொண்டனர். அவ்வளவு தான் ஆஸ்திகர் எனும் பெயர் கொண்ட இவர்கள் அடைந்த
பயன் யாதும் இல்லை.
தெய்வம் என்று ஒன்றும் இல்லை. பாடு படு பணம் சேரு பாவையரை நாடு முன்னிற்கும் இன்பமே
மோட்சம் என்று உளறி வழியும் நாத்திக வாதம் ஒருபுறம் அட பாவமே, என்ன வேதனைச் செய்தி இது.
ஆகாயம் என்று ஒரு பூதம் இல்லை. மண், நீர், காற்று, நெருப்பு, என்பவைகளின் கூட்டமே உலகம்
ஆன்மா என்பது ஒருவகையில் உண்டு, ஒருவகையில் இல்லை அருகன் சரணம் கச்சாமி என்று எங்கள் பெருமானை இறைஞ்சுங்கள் சுடு
நீரை தலையில் கொட்டி அந்த கலவரத்தில் தலைமயிரை பிடுங்குங்கள் நீரின் உதவியினால் வாய்
கொப்பளித்தால் பல கிருமிகள் நாசமாகும் ஜீவகாருண்யம் கொள்ளுங்கள் என்று மந்திர தந்திர
ஜாலம் காட்டும் சமண சமயிகளின் சதுரங்க ஆட்டத்தை எவரிடம் சொல்லி ஆறுவது ?
இச்சாகசங்களால் எது உண்மை என்று தெரியாமல்
ஆன்மாக்கள் ஏமாறலாயினர். இந்த ராட்சச சாதனைகள் யாவும் அடங்க, காழியில் ஆளுடைய பிள்ளையாராக
அவதரித்து வேதம் தழைத்தோங்க மிக சைவத்துறை விளங்க சூத பரம்ரை பொலிய உவந்து தேவார மழை
பொழிந்தீர் அச்செல்வாக்கால் அரும் தமிழ் நாட்டில் அமைதியை நிறுவினீர்.
அந்தச் சலிகை, நன்றி,வென்றி, மங்களம், பெருமைகள், கனம், குணம், சரவணம், பொறுமை, புகழ், வேல், விருது, மயில் மேல் வரும் திருவடிகள், பல விதரணம், திறம், தரம், எண்ணிய வள்ளி அம்மை மேல் எய்திய பற்று, பல விஜயங்கள் எனும் பெயரால்
அடியவர்களுக்கு அளித்த, அளிக்கின்ற , அளிக்கும் காட்சிகளாகிய 16 பேறுகளையும் அன்பால் என்றும் ஓதி ஓதி உமது சொரூப தடத்த இயல்புகளை உணர்கிறோம் யாம்
என்று வினயம் காட்டி வீழ்ந்து பணிந்து விண்ணப்பித்த படி.
ஒப்புக
1 கடகரி அஞ்சி நடுங்கி
நுதி வைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபுரிந்திட
நொடியிற்பரி வாகவந்தவன் மருகோனே....................... திருப்புகழ். பகர்தற்கரி
2 மருது குலுங்கி நலங்க முனிந்திடு
கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட
வென்றுகு ருந்தினி லேறி மங்கையர்...........................
திருப்புகழ், வஞ்சனைமி
3 குறள் வடிவவென
குறியவன் செப்பப் பட்ட எவர்க்கும் பெரியவன் ............. திருப்புகழ். செறிதரும்
4 கடல் மங்க ஓரம்பு கை தொடுமீளி
பரவு பரவை கொல் பரவை வண அரி, .............................திருப்புகழ்,
குழலடவி
5 குகன் என்பவர் மனதினிலும்
குகனென்று மொழிந்துருகுஞ் செயல்தந்
துணர்வென்
றருள்வாய்) ............................................................................கந்தர்
அனுபூதி
விளக்கக் குறிப்புகள்
பிரமபுரந் தனிலும் சீகாழி = இந்திரன் தவமிருந்த தலம்
திரு வளரும் கழுமலமே கொச்சை
தேவேந்திரன்ஊர் அயன் ஊர் தெய்வத்
தரு வளரும் பொழில் புறவம் சிலம்பன் ஊர்
காழி தகு சண்பை ஒண்பா
உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய்
தோணிபுரம் சம்பந்தர் தேவாரம்
” tag: